சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா 31–ந் தேதி தொடங்குகிறது

சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா 31–ந் தேதி தொடங்குகிறது.

Update: 2017-08-21 23:30 GMT

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில். இந்த கோவில் கொடை விழா வருகிற 31–ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 1, 2 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது.

இதையொட்டி 31–ந் தேதி மாலை 4 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 1–ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வருதல் நிகழ்ச்சியும், 11 மணிக்கு வில்லிசை, பகல் 2 மணிக்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வருதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு சுவாமிக்கு பால் அபிஷேகமும், இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு சுவாமி மயானம் சென்று வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இரவு காமராஜர் கலையரங்கத்தில் ‘கணவனுக்கு மனைவி தலைவியா? தலைவலியா?’ என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது. காலை 9 மணிக்கு சுவாமி வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும், பகல் 2 மணிக்கு பொங்கல் வழிபாடும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை சிறுமளஞ்சி இந்து நாடார் சமுதாயம் மற்றும் விழா கமிட்டியார் செய்துள்ளனர். கொடை விழாவையொட்டி வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு ஆகிய ஊர்களில் இருந்து சிறுமளஞ்சிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தொடர்ந்து 8–ம் நாள் கொடை விழா அடுத்த மாதம் 8–ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நையாண்டி மேளம், குறவன்– குறத்தி கரகாட்டம் மற்றும் இன்னிசை கச்சேரி நடக்கிறது.

மேலும் செய்திகள்