தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 8–ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம்(செப்டம்பர்) 8–ந் தேதி நடக்கிறது.

Update: 2017-08-23 22:15 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ள சங்கரராமேசுவரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் சுமார் ரூ.4 கோடி செலவில் நடந்து வருகிறது. இந்த கோவிலில் உள்ள ராஜகோபுரம், மூலவர் கோபுரம் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டு உள்ளன. ஆலயத்தில் புதிதாக தியான மண்டபம் உள்ளிட்டவையும் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

கன்னிவிநாயகர் ஆலயத்தில் புதிதாக கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. குழந்தை வரம் அருளும் இந்த கோவிலில், புஷ்பகரணி கிணறு, சுவாமி–அம்பாள் சன்னதிகளின் முகப்பு மற்றும் கொடிமரம் தங்கமுலாம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வருகிற 1–ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. இதற்காக அங்கு 101 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் தினமும் யாக சாலை பூஜைகள் நடக்கிறது. இதனை மக்கள் தரிசிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக தூத்துக்குடி வட்டார கோவில் தர்மகர்த்தாக்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பணிக்குழு தலைவர் ராஜாசங்கரலிங்கம் தலைமையில் நடந்தது. செயலாளர் விநாயகமூர்த்தி, உதவி தலைவர் ரமேஷ், தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர், சங்கரபட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வருகிற 4–ந் தேதி சமுத்திர ராஜனை அழைத்து வரும் நிகழ்ச்சி குறித்தும், கைலாயத்தில் வாசிக்கப்படும் 30 வகை வாத்தியங்கள், தூபங்கள் மற்றும் தீவெட்டிகளுடன் பக்தர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் நகரில் உள்ள 150 திருக்கோவில் தர்மகர்த்தாக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் செந்தில் ஆறுமுகம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்