ஆன்மிகம்
பக்தைக்காக சாய்ந்தது; பக்தனுக்காக நிமிர்ந்தது

ஒருநாள் கலயனாரை திருக்கடையூரில் சந்தித்த அன்பர் ஒருவர், திருப்பனந்தாள் பெரியநாயகி சமேத அருணஜடேஸ்வரர் ஆலய கருவறை சிவலிங்கம் சாய்ந்து உள்ளது என்றும், அதனை யாராலும், மன்னரின் படைகளாலும் கூட நிமிர்த்த முடியவில்லை என்றும் கூறினார்.
ஒருநாள் கலயனாரை திருக்கடையூரில் சந்தித்த அன்பர் ஒருவர், திருப்பனந்தாள் பெரியநாயகி சமேத அருணஜடேஸ்வரர் ஆலய கருவறை சிவலிங்கம் சாய்ந்து உள்ளது என்றும், அதனை யாராலும், மன்னரின் படைகளாலும் கூட நிமிர்த்த முடியவில்லை என்றும் கூறினார். உடனே ஈசனின் சித்தம் எனக்கருதி, திருப்பனந்தாள் நோக்கி பயணமானார் கலயனார்.

சிவலிங்கம் சாய்ந்ததற்கு காரணம் இது தான்..

தாடகை எனும் பெண், புத்திரப் பாக்கியம் வேண்டி திருப்பனந்தாள் ஈசனை தினமும் மாலை சூட்டி வழிபட்டு வந்தாள். ஒருநாள் சிவலிங்கத்துக்கு மாலை சாத்தும்போது, எதிர்பாராத விதமாக தாடகையின் இடுப்பில் இருந்து சேலை நழுவியது. அதனை இரு கைகளாலும் பற்றிக்கொண்டே, சிவலிங்கத்துக்கு மாலை அணிவிக்க முயன்றாள்; முடியவில்லை. இதனால் தாடகை பெரும் வருத்தம் கொண்டாள். அவளுக்காக இரங்கிய ஈசன், தனது சிவலிங்கத் திருமேனியை சிறிது சாய்த்து அவளது மாலையை ஏற்றுக்கொண்டார். அன்றுமுதல் திருப்பனந்தாளில் சிவலிங்கம் சாய்ந்தே இருந்தது.

ஒரு நாள் இங்கு வழிபட வந்த சோழ மன்னன், சிவலிங்கம் சாய்ந்திருப்பதைக் கண்டு அதனை நிமிர்த்த முயன்றான். தனது படை வீரர்களையும், யானை, குதிரை முதலியவற்றையும் கொண்டு சாய்ந்திருந்த சிவலிங்கத்தைக் கட்டி இழுத்துப் பார்த்தும், அது சற்று கூட அசைந்து கொடுக்கவில்லை.

இந்த வி‌ஷயங்களைக் கேட்டுதான், குங்கிலியக் கலயனார் திருப்பனந்தாள் வந்து சேர்ந்தார். சாய்ந்திருந்த ஈசனைக் கண்ட குங்கிலியக் கலயனார், தனது கழுத்தில் ஒரு சுருக்குக் கயிற்றை கட்டிக் கொண்டு, அந்த கயிற்றின் மறு முனையில் சிவலிங்கத்தைக் கட்டி நிமிர்த்த முயன்றார். சிவலிங்கம் நிமிரவில்லை. அதனால் குங்கிலியக் கலயனாரின் கழுத்தில் போடப்பட்டிருந்த சுருக்கு இறுகிக் கொண்டே வந்தது. சிவலிங்கம் நிமிரவில்லை என்றால், கயிறு இறுகி, கலயனார் உயிர் துறப்பது நிச்சயம் என்ற நிலை வந்து விட்டது. ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே மீண்டும் சிவலிங்கத்தை கயிற்றால் கட்டி இழுத்தார். என்ன ஆச்சரியம்.. அன்று பக்தைக்காக சாய்ந்த சிவலிங்கம், இன்று தம் பக்தனுக்காக நிமிர்ந்தது. அங்கும் சில காலம் குங்கிலிய தூபம் காட்டி வழிபாடு செய்தார் கலயனார்.