ஆன்மிகம்
கிருஷ்ணர் வழிபட்ட ராம சகோதர சிலைகள்

அயோத்தி மன்னர் தசரதனின் பிள்ளைகளாகப் பிறந்தவர்கள் ராமன், பரதன், லட்சுமணன் மற்றும் சத்துருக்கனன்.
அயோத்தி மன்னர் தசரதனின் பிள்ளைகளாகப் பிறந்தவர்கள் ராமன், பரதன், லட்சுமணன் மற்றும் சத்துருக்கனன். இவர்களின் தாய் வெவ்வேறு என்றாலும், நால்வரிடமும் சகோதர பாசமும், ஒற்றுமையும் மேலோங்கி இருந்தது. ராம சகோதரர்கள் நான்கு பேருக்கும் கேரள மாநிலத்தில் தனித்தனியாகக் கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவில்களுக்கு ஒரே நாளில் புனிதப்பயணம் சென்று வழிபடுபவர் களின் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும், செல்வ வளம் பெருகும் என்கிறார்கள்.

தலங்கள் வரலாறு

கேரள தேசத்தின் ஒரு பகுதிக்குத் தலைவராக இருந்தவர் வாக்கயில் கைமல். இவரது கனவில் ஒரு உருவம் தோன்றி அசரீரியாக ஒலித்தது. ‘கடலில் நான்கு சிலைகள் மிதந்து கொண்டிருக்கின்றன. அந்தச் சிலைகளைக் கரைக்குக் கொண்டு வந்து, கோவில் கட்டி வழிபட்டால் வாழ்வும், வளமும் சிறக்கும்’ என்றது அந்தக் குரல். அந்தக் கனவுக்குப் பின்பு, அவருக்குத் தூக்கமே வரவில்லை. மிகப்பெரும் பரப்பளவு கொண்ட கடலில், அந்தச் சிலைகளை எங்கே போய்த் தேடுவது? என்று அவர் கவலையடைந்தார்.

இந்நிலையில், இரவு நேரத்தில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள், ஓரிடத்தில் நான்கு சிலைகள் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டனர். அந்தச் சிலைகளை அங்கிருந்து எடுத்து, தங்கள் படகுகளின் மூலமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அந்தச் சிலைகளின் அழகிய தோற்றத்தைக் கண்டு மயங்கிய அவர்கள், அந்தச் சிலைகளைப் பக்தியோடு வணங்கினர். பின்னர், கடலில் நான்கு சிலைகள் கிடைத்தது பற்றி, அந்தப் பகுதி தலைவரான கைமலிடம் தெரிவித்தனர்.

அந்த இடத்திற்கு வந்து பார்த்த கைமலுக்கு, முதல் நாள் இரவில் தோன்றிய கனவு நினைவுக்கு வந்தது. உடனே அவர், ஜோதிடர்களை வரவழைத்துத் தனக்கு இரவில் தோன்றிய கனவைப் பற்றிச் சொன்னார். அந்தச் சிலை               களைப் பற்றிய தகவல்களைக் கண்டறியவும், அந்தச் சிலைகளை நிறுவிக் கோவில் கட்டுவதற்குத் தகுந்த இடத்தைத் தேர்வு செய்ய வழிகாட்டும் படியும் ஜோதிடர்களைக் கேட்டுக் கொண்டார்.

அந்தச் சிலைகளைக் கொண்டு, ஜோதிடர்கள் பிரசன்னம் பார்த்தனர். இதில் தாங்கள் அறிந்ததை அவர்கள், தலைவரான கைமலிடம் தெரிவித்தனர்.

‘திரேதா யுகத்தில் பிறந்த ராமனுக்குப் பின்பாக, துவாபர யுகத்தில் பிறந்த கிருஷ்ணர், தனது முந்தைய தோற்றமான ராமன் மற்றும் அவருடன் பிறந்த சகோதரர்களுக்குச் சிலைகள் செய்து வழிபட்டு வந்திருக்கிறார். கிருஷ்ணர் ஆட்சி புரிந்த துவாரகைப் பகுதி கடலில் மூழ்கிவிட்ட பின்பு, அந்தச் சிலைகள் நான்கும் ஒன்றாகச் சேர்ந்துக் கடலில் மிதந்து கொண்டே இருந்திருக்கின்றன. அந்தச் சிலைகள், பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, நம் கடல் பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. அந்தச் சிலைகளைத்தான் நம் மீனவர்கள் எடுத்து வந்திருக்கின்றனர்’ என்று தெரிவித்தனர் ஜோதிடர்கள்.

அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த கைமல், ‘இந்த நான்கு சிலைகளையும் எந்த இடத்தில் நிறுவி கோவில் கட்டலாம்?’ என்று கேட்டார்.

அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது. ‘ராமர் சிலையைத் தலைவராக இருப்பவர் எடுத்துச் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும் வழியில், ஒரு இடத்தில் மயில் வந்து நிற்கும். அந்த இடத்தில் ராமர் சிலையை நிறுவிக் கோவில் கட்டி வழிபடுங்கள்’ என்றது அந்தக் குரல்.

அதனைக் கேட்ட தலைவர், ராமர் சிலையை எடுத்துத் தன்னுடன் அரவணைத்தபடி நடக்கத் தொடங்கினார். அப்பகுதி மக்கள், மற்ற மூன்று சிலைகளையும் வண்டி ஒன்றில் ஏற்றிக் கொண்டு, அவரைப் பின் தொடர்ந்தனர்.

நீண்ட தூரம் சென்ற பின்பு, ஓரிடத்தில் ஒருவர் அதிகமான மயிலிறகுகளை வைத்துக் கொண்டு நின்றிருந்தார். அவர் நின்ற இடத்தையே மயில் இருப்பதாக நினைத்து ராமர் சிலையை நிறுவி விட்டனர். சிறிது நேரத்தில், அங்கே வானில் மயில் ஒன்று தோன்றியது. அதன் நிழல் விழுந்த இடத்தில் கோவிலின் பலிக்கல் ஒன்றைப் பதித்தனர். இந்தப் பலிக்கல் இருக்குமிடமும் ராமர் கோவிலின் கருவறைக்கு நிகரானதாகக் கருதப்படுகிறது.

மற்ற மூன்று சிலைகளையும் அடுத்து மயிலைக் காணும் இடத்திலேயே நிறுவுவது என முடிவு செய்தனர். அதன்படி, தலைவர் அங்கிருந்து, பரதன் சிலையை எடுத்துக் கொண்டு நடந்தார். செல்லும் வழியில் மயில் ஆடிய ஒரு இடத்தில் அந்தச் சிலையை நிறுவினார். இப்படியே லட்சுமணன், சத்துருக்கனன் சிலைகளும் நிறுவப்பட்டன. பின்னர், அந்த இடங்களில் கோவில்களும் கட்டப்பட்டன.

நாலம்பல யாத்திரை

ராமர், பரதன், லட்சுமணன், சத்துருக்கனன் ஆகிய நான்கு சகோதரர்களுக்கும் அமைக்கப்பட்ட தனித்தனிக் கோவில்களை ஒன்றாகச் சேர்த்து, நான்கு கோவில்கள் எனப் பொருள்படும் வகையில் மலையாள மொழியில் ‘நாலம்பலம்’ என்று சொல்கின்றனர்.

கேரள மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த நான்கு கோவில்களில், ராமர் கோவில் திருப்பிரையார் என்னுமிடத்திலும், பரதன் கோவில் இரிஞ்சாலக்குடா என்ற இடத்திலும், லட்சுமணன் ஆலயம் மூழிக்குளம் என்ற பகுதியிலும், சத்துருக்கனன் கோவில் பாயம்மல் என்னும் இடத்திலும் அமைந்திருக்கின்றன.

திருப்பிரையாரில் உள்ள ராமர் கோவிலில் தொடங்கி, பாயம்மலில் உள்ள சத்துருக்கனன் கோவில் வரை ஒரே நாளில் நிறைவடையும் வகையில் புனிதப் பயணமாகச் சென்று வழிபடுவதை மலையாளத்தில் ‘நாலம்பல யாத்திரை’ என்கின்றனர். இந்தப் புனிதப் பயணத்தை மலையாள நாட்காட்டியின்படி கர்க்கிடக மாதத்தில் (தமிழ் மாதம் ஆடி) மேற்கொண்டு ராம சகோதரர்களை வழிபடுவது மிகவும் சிறப்பானது என்கின்றனர்.

ராமர், லட்சுமணன், பரதன், சத்துருக்கனன் ஆகிய நால்வரும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை ஆகிய நான்கு உயர் லட்சியங்களை நமக்கு அடையாளம் காட்டுகின்றனர். ராமரை மற்ற மூவரும் பின்பற்றுவது போல், நாமும் வாழ்க்கையின் லட்சியங்களான மூன்றையும் பெறச் சத்தியத்தைப் பின்பற்ற வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் உயர்ந்து மேன்மை அடைய முடியும் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.

அதிகாலையில் நிர்மால்ய தரிசன வேளையில் திருப்பிரையாரில் இருக்கும் ராமரையும், உஷாக்கால பூஜை வேளையில் இரிஞ்சாலக்   குடாவில் பரதனையும், உச்சிகால பூஜை வேளையில் மூழிக்குளத்திலிருக்கும் லட்சுமணரையும், சாயரட்சை பூஜை வேளையில் பாயம்மலில் இருக்கும் சத்துருக்கனனையும் கண்டு வழிபடுவதை மரபாகக் கொண்டுள்ளனர்.

இந்த மரபுப்படி வழிபடுபவர்களின் குடும்பத்தில் ஒற்றுமையும், செல்வப்பெருக்கும் ஏற்படும் என்கிற நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. இது போல், சகோதரர்களுக்கிடையே பாசம் அதிகரிப்பதுடன், அறிமுகமில்லாதவர்கள் கூட உடன்பிறந்த சகோதரர் போல் இருந்து நம்முடைய வளத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையும் இங்கு வழிபடும் பக்தர்களிடம் காணப்படுகிறது.

அமைவிடம்

ராமர் கோவில் அமைந்திருக்கும் திருப்பிரையார் திருத்தலம், குருவாயூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. பரதன் கோவில் அமைந்திருக்கும் இரிஞ்சாலக்குடா என்றப் பகுதி, திருச்சூரில் இருந்து 22 கிலோமீட்டரில் அமைந்திருக்கிறது. லட்சுமணன் கோவில் அமைந்திருக்கும் மூழிகுளம் என்ற தலம், திருச்சூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், சத்துருக்கனன் கோவில் அமைந்திருக்கும் பாயம்மல் என்ற பகுதி இரிஞ்சாலக்குடாவில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக் கின்றன.

அடுத்த வாரம்: திருப்பிரையார் ராமர் கோவில்.

வீணை மீட்டும்  ஆஞ்சநேயர்

கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமர், சீதை இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரே இருக்கையில் அமர்ந்தபடி காட்சி தருகின்றனர். இங்கு, ராமனின் இடது புறம் சத்ருக்கனன் சாமரம் வீசுவது போன்றும், வலது புறம் பரதன் குடை பிடித்த நிலையிலும், லட்சுமணன் வில்லுடனும் இருக்கின்றனர். ராமர் திருமணம் செய்த நிலையில் இருப்பதால், அனுமன் இங்கு தனது போர்க்குணத்தை ஒதுக்கி விட்டு, வீணை மீட்டுவது போன்ற நிலையில் காட்சி தருகிறார். ராம சகோதரர்கள் ஒரே இடத்தில் இருக்கும் சில கோவில்களில் இதுவும் ஒன்று.

மனைவியுடன்  சகோதரர்கள்

தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், கும்மடிதலா எனும் கிராமத்தில் ராமபிரான் மனைவி சீதையுடனும், பரதன் தன் மனைவி மாண்டவியுடனும், லட்சுமணன் அவனது மனைவி ஊர்மிளாவுடனும், சத்ருக்கனன்  தன் மனைவி சுருதகீர்த்தியுடனும் ஒரே கருவறையில் இருந்து அருள் செய்கின்றனர். இந்த ஆலயத்தின் பெயர் ‘கல்யாண ராமச்சந்திர மூர்த்தி கோவில்’ என்பதாகும். இங்கு ராமபிரான் மீசையுடன் இருக்கிறார். ராமர் தன் வலக்கையை அபய முத்திரையில் காண்பித்தபடி அமர்ந்திருக்க, மற்றவர்கள் அனைவரும் நின்ற நிலையில் இருக்கின்றனர்.