ஆன்மிகம்
நவீன ஷாமனிஸத்தின் புதிய பரிமாணங்கள்

நவீன ஷாமனிஸம் இக்கால மக்களைக் கவர மிக முக்கிய காரணம், அது மனிதனின் அடிமனம் வரை ஊடுருவிச் செல்ல வல்லதாக இருக்கிறது என்று உளவியல் அறிஞர்களும், ஷாமனிஸ ஆராய்ச்சியாளர்களும் நினைக்க ஆரம்பித்தது தான்.
நவீன ஷாமனிஸம் இக்கால மக்களைக் கவர மிக முக்கிய காரணம், அது மனிதனின் அடிமனம் வரை ஊடுருவிச் செல்ல வல்லதாக இருக்கிறது என்று உளவியல் அறிஞர்களும், ஷாமனிஸ ஆராய்ச்சியாளர்களும் நினைக்க ஆரம்பித்தது தான். ஷாமனிஸ யாத்திரை என்பது மனிதன் தனக்குள்ளே ஆழமாகச் சென்று பார்க்கும் உள்நோக்கிய பயணம் என்றும், அங்கு மன ஆழத்தில் அவன் இதுவரை பார்க்காத மறைந்த ரகசிய பகுதிகள் இருக்கின்றன என்றும், அங்கேயே அவனுக்குத் தீங்கிழைக்கும் சக்திகளும், விலங்கு உணர்வுகளும் இருக்கின்றன என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். அதே போல அவனைக் காப்பாற்றும் மேலான சக்திகளையும் மனிதன் தன் மனதின் ஆழத்திலேயே காண்கின்றான் என்றும் கூறுகிறார்கள். வேறு வேறு பெயர்களும், வேறு வேறு உலகங்களும் ஷாமனிஸத்தில் கூறப்பட்டிருப்பது குறியீடுகளே என்றும், குறியீடுகளை அப்படியே நிஜங்களாக ஏற்றுக்கொள்வதை விட அவை உண்மையில் எதைக் குறிக்கின்றன என்பதை மனிதன் ஆழமாகச் சிந்தித்தால் விளங்கும் என்றும் கூறினார்கள்.

நவீன ஷாமனிஸம் கண்ட மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், பிரச்சினைகளுக்கான தீர்வாக ஷாமனிஸ வழிகளை நாடியது போய், மனிதர்கள் தங்கள் மன ஆழத்தில் இருக்கும் பலவீனங் களைக் கண்டுபிடித்து நீக்கி, முழுத்திறமைகளையும் கண்டுபிடித்து அவற்றை வளர்த்துக் கொள்ள ஷாமனிஸத்தை நாட ஆரம்பித்தான். இந்த விதத்தில் ஷாமனிஸம் சுயமுன்னேற்றத்திற்குத் தேடும் ஒரு உயர்ந்த வழியாக பார்க்கப்பட்டது. வெளி உலகம், உள் உலகின் வெளிப்பாடே என்றும், உள் உலகத்தை மாற்றினால் வெளி உலகத்தை மாற்றலாம் என்கிற சிந்தனையும் நவீன ஷாமனிஸத்தில் வலுப்பெற ஆரம்பித்தது. முன்பே தெரிவித்தது போல ஷாமன் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதன், தான் சார்ந்த சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காண்பது வழக்கொழிந்து, சில விதிவிலக்குகள் தவிர பெரும்பாலான மனிதர்கள் தங்கள் தேவைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தாங்களே வழி தேடிக் கொள்ளும் மாற்றம் உருவானது.

பழைய ஷாமனிஸத்திற்கும், நவீன ஷாமனிஸத்திற்கும் இடையே உள்ள இன்னொரு மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், தீய சக்திகள், தீய ஆவிகள் ஆகியவை நிறைய இருப்பதாக பழைய ஷாமனிஸம் நம்பியது. அந்தத் தீய சக்திகள் கோபமடையும் பட்சத்தில் மனிதனுக்குக் கெடுதல் செய்யக்கூடியவை என்றும், மனிதரிடத்தில் சிலவற்றை எதிர்பார்க்கக்கூடியவை என்றும் பழைய ஷாமனிஸம் நம்பியது. ஆனால் நவீன ஷாமனிஸம் தீய சக்திகள், தீய ஆவிகள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தந்து விடவில்லை. மாறாக பிரபஞ்ச சக்திகள் மனிதனுக்கு நன்மை தருவதாகவே இருக்கின்றன என்றும் நாம் முறையாகப் புரிந்து கொண்டு முயன்றால் பல உதவிகளைப் பிரபஞ்ச சக்திகளிடமிருந்து பெற்று விடலாம் என்றும் நம்புகிறது. பிரச்சினைகள் ஏற்படக்காரணம் மனிதன் அந்த பிரபஞ்ச விதிகளை அலட்சியம் செய்வதாலும், அவற்றிற்கு எதிராக நடந்து கொள்வதாலுமே ஏற்பட முடியும் என்றும் அதைச் சரிசெய்து கொள்வதே நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்றும் நம்புகிறது. இது பகுத்தறிவுக்கு ஏற்றதாகவே இருந்ததால் நவீன ஷாமனிஸத்தின் மீது நவீன மனிதனுக்கு இருந்த ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது.

இப்படி மக்களைக் கவர்ந்த ஷாமனிஸம் இன்றைய புத்தகங்களிலும் இடம் பிடிக்க ஆரம்பித்தது. பெரும்பாலான புத்தகங்கள் ஆராய்ச்சி நூல்களாக இருந்தன என்றாலும் சில நூல்கள் ஷாமனிஸ கதாபாத்திரங்களைக் கொண்ட நாவல்களாகவும் இருந்தன. ஷாமனிஸ நாவல்களை எழுதிய பிரபல எழுத்தாளர்களில் Tony Hillerman   முக்கியமானவர். சாண்ட்ரா இங்கர்மண் (Sandra Ingerman) என்ற எழுத்தாளர் பதினோரு ஆண்டுகள் ஷாமனிஸ ஆராய்ச்சிகள் செய்து 1991–ம் ஆண்டு   Soul Retrieval:Mending the Fragmented Self   என்ற நூலை எழுதினார். அதில் ஷாமனிஸ சடங்குகளின் நோக்கங்களின் அடிப்படையை வைத்து இன்றைய காலத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்றபடி அறிவு சார்ந்த பயிற்சிகளை அவர் எழுதினார். ‘இதைப்படித்து விட்டு இதெல்லாம் நிஜமா ஷாமனிஸம் தானா என்றெல்லாம் யாரும் கேட்காதீர்கள். இதில் சொல்லியிருப்பதைப் பின்பற்றி பயன் கிடைக்கிறதா இல்லையா என்பதை மட்டும் பாருங்கள்’.

சாண்ட்ரா இங்கர்மண் கூறியபடியே பயிற்சிகள் பெற்று மற்றவர் களுக்கும் பயிற்றுவிக்கும்   Geo Athena Trevarthen   என்ற பெண்மணி அந்த வகை ஷாமனிஸ பயிற்சிகளுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த போது இப்படிக் கூறினார். ‘எதையுமே நான் சொல்கிறேன் என்பதற்காக நம்பாதீர்கள். கண்மூடித்தனமான நம்பிக்கை நல்லதுமல்ல. ஷாமனிஸ ஆசிரியராக நான் சொல்கின்ற இந்தப் பயிற்சிகளைச் செய்து பாருங்கள். நீங்களே மானசீகமாக இந்த ஷாமனிஸ யாத்திரையில் ஈடுபட்டு உணர்வதை மட்டும் உண்மையாக ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவற்றை புறந்தள்ளுங்கள்’.

இதுவே நவீன ஷாமனிஸத்தின் நிலைப்பாடாக உள்ளது.   Merete Jakobsen,  Joan Townsend   போன்ற எழுத்தாளர்கள் ஆரம்ப ஷாமனிஸத்திற்கும், நவீன ஷாமனிஸத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களையும், ஒற்றுமைகளையும், இந்த பரிணாம வளர்ச்சிக்கான நுணுக்கமான காரணங்களையும் அலசி எழுதியிருக்கிறார்கள். இப்படி ஷாமனிஸம் குறித்த நூல்கள் வெளியாகி வரும் அதே நேரத்தில் ஷாமனிஸத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பை மனதில் கொண்டு சில எழுத்தாளர்கள் தங்கள் கற்பனைகளையே நிஜமான சம்பவங்கள் போல எழுதி காசு பார்த்ததும் உண்டு.

சில நவீன ஷாமனிஸ ஈடுபாட்டாளர்கள் குழுக்களாக அமைத்துக் கொண்டு பழங்கால ஷாமனிஸ முறைகளை இப்போதும் பின்பற்றி வரும் சில தொலைதூரப் பகுதிகளுக்கு சில நாட்கள் யாத்திரை சென்று வருவதும் உண்டு. அந்தப் புராதன ஷாமனிஸ சடங்குகளின் போது பார்வையாளர்களாகவோ, பங்கேற்பவர்களாகவோ அங்கிருந்து தங்கள் உள் உணர்வுகளைக் கவனித்து பல புதிய அனுபவங்களைப் பெற்றுத் திரும்பி வருவதும் பல இடங்களில் நடக்கிறது. இப்படி பழங்கால ஷாமனிஸத்தை முழுவதும் புறக்கணித்து விடாமல் அந்த முறைகளில் உள்ள சாராம்சத்தைத் தங்களுக்கேற்ற வகையில் பெற்று புதிய மனிதர்களாகவும், புத்துணர்ச்சி பெற்றவர்களாகவும் மேலைநாடுகளில் பெருநகரங்களில் வசிக்கிறவர்கள்

திரும்புவதையும் காண முடிகிறது.

இப்படி நவீன ஷாமனிஸத்தில் ஈடுபட்டு மற்ற துறைகளில் பிரபலம் அடைந்த கலைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஜிம் மோரிசன் என்ற ராக் இசைப்பாடகர் மிகவும் பிரபலமானவர். அவர் நியூ மெக்சிகோவில் தன் இளமைப்பருவத்தில் பெற்ற ஷாமனிஸ அனுபவங்  களைத் தன் பிரபல பாடல்களில் வெளிப்படுத்தினார். ஷாமனிஸ ஆவி நடனத்தில் இருந்து எடுக்கப்பட்ட அவரது ‘ஆவி பாடல்’  (The Ghost Song   ) அமெரிக்காவில் சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் மிகவும் பிரபலம். அவருடைய பாடல்களின் போது அரங்கில் உள்ள பெரும்பாலான ரசிகர்கள் தங்கள் உணர்வுகளில் பெரும் மாற்றத்தையும், உச்சத்தையும் அடைவதாக உணர்ந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அங்கு ஒரு மின்சார உணர்வை அவர் ஏற்படுத்துவதாகவே பலரும் எண்ணினார்கள். அதனால் ஜிம் மோரிசனுக்கு மின்சார ஷாமன் என்ற பட்டப்பெயரும் அவர் வாழ்ந்த காலத்தில் ராக் இசை உலகில் இருந்தது.

அதே போல அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள   Grateful Dead    என்ற ராக் இசைக்குழுவும் ஷாமனிஸ அம்சங்களைத் தங்கள் பாடல்களிலும் இசை நிகழ்ச்சிகளிலும் புகுத்தி பிரபலமானது. அந்தக் குழுவின் தலைமைக் கிடார் கலைஞர் ஜெர்ரி கார்சியா 1991–ம் ஆண்டு ஒரு பேட்டியில் தங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஷாமனிஸத்தைக் கூறினார். ‘எங்கள் இசை நிகழ்ச்சிக்கு சாதாரண உணர்வு நிலையுடன் வருபவர்கள் இசையின் போது நுணுக்கமான உணர்வு மாற்றங்களை உணர்ந்தார்கள். சாதாரணமானவர்களாக உள்ளே வந்தவர்கள் தங்களைச் சிறப்பானவர்களாகவும், புதியவர்களாகவும் ஒருவித ஷாமனிஸ மாற்றத்தை உணர்ந்தார்கள். அதைத் திரும்பத் திரும்ப உணர மோகம் கொண்டு எங்கள் நிகழ்ச்சிகளுக்குத் திரும்பத் திரும்ப வந்தார்கள்’.

இன்று நிறைய இசைக்கலைஞர்கள், இசைக்குழுக்கள் தங்கள் பெயர்களுடன் ஷாமனிஸம் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பெயரை இணைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

இப்படி இலக்கியங்களிலும், இசையிலும் முத்திரை பதித்த ஷாமனிஸம் திரைத்துறையையும் விட்டு வைக்கவில்லை. சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் தொடங்கி நிகழ்காலம் வரை பல திரைப்படங்கள் ஷாமனிஸத்தை மையமாகக் கொண்டோ அல்லது ஷாமனிஸம் சார்ந்த முக்கிய கதாபாத்திரத்தைக் கொண்டோ வெளிவந்துள்ளன. அவற்றில் 2001–ல் வெளிவந்த ஷாமனிஸ பயிற்சி பெறுபவன் (  The Shaman’s Apprentice  ), 2005–ல் வெளிவந்த ஷாமனின் சாபம் (  Curse of the Shaman  ) என்ற ஆவணப்படங்களும், 2008–ல் வெளி வந்த ஷாமனின் முத்திரை ( Shaman’s Mark ) திரைப்படமும் பிரபலமானவை.  

நவீன ஷாமனிஸத்தின் மறுக்க முடியாத ஒரு ஆளுமையாக கார்லோஸ் காஸ்டநேடா என்ற மனிதர் சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவில் பிரபலமானார். இவர் உண்மையானவரா, ஏமாற்றுக்காரரா என்ற கேள்விக்கு இன்று வரை முடிவான விடை இல்லை. ஆனால் இவரைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை என்கிற அளவு பிரபலமான இவர் குறித்த மிகவும் சுவாரசியமான சம்பவங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

–தொடரும்.