ஆன்மிகம்
திராட்சைத் தோட்டம்

இயேசு பிரான் கூறிய ஓர் உவமையைக் கொண்டு ஆராய்வோம்.
ஒருவர் திராட்சைத் தோட்டம் ஒன்றைப் போட்டார். சுற்றிலும் வேலி அடைத்தார். ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு, தோட்டத் தொழிலாளர்களிடம் குத்தகைக்கு விட்டு விட்டு நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டார். பருவ காலம் வந்தது. தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு, ஒரு பணியாளரை அங்கு அனுப்பினார். ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப் புடைத்து, வெறுங்கையாய் அனுப்பினார்கள்.

மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அனுப்பினார். அவரையும் அடித்து அவமதித்தார்கள். மேலும் ஒருவரை அனுப்பினார். அவரைக் கொலை செய்தார்கள். பலரை மீண்டும் அனுப்பினார். சிலரை நையப் புடைத்தார்கள். சிலரைக் கொன்று போட்டார்கள்.

எஞ்சி இருந்தவர் ஒருவர் மட்டுமே. அவர்தான் அவருடைய அன்பு மகன். தன் மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று எண்ணி அவரை அனுப்பினார்.

‘இவன்தான் சொத்துக்கு உரியவன். இவனைக் கொன்று போடுவோம். கொன்று விட்டால் சொத்து நமக்கு உரியதாக ஆகி விடும்’ என்று சொல்லி, அவரைக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்து விட்டார்கள்.

திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து, அத்தொழிலாளர்களை ஒழித்து விட்டு, திராட்சைத் தோட்டத்தை வேறு ஆளிடம் ஒப்படைப்பார்.

அவர் மேலும், ‘கட்டுவோர் புறக் கணித்த கல்லே கட்டிடத்திற்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் ஏற்பட்டுள்ள இது, நம் கண்களுக்கு வியப்பாயிற்று என்னும் மறை நூல் வாக்கை வாசித்தது இல்லையா?’ என்று கேட்டார்.

தங்களைக் குறித்தே, அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். மேலும், அவரைப் பிடிக்க வழியையும் தேடினர். மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததைக் கண்டு, பயந்து போய், அவ்விடம் விட்டு அகன்றார்கள்.

இந்த உவமைகளைக் கவனமாகக் கவனியுங்கள்.

திராட்சைத் தோட்டம் என்பது ‘இஸ்ரவேல்’ மக்களைக் குறிக்கிறது. தோட்டத்தின் உரிமையாளர் இறைவன் ஆவார். தோட்டத் தொழிலாளர்கள் என்போர், யூதத் தலைவர்கள் ஆவார்கள். பணியாளர் என்போர், பழைய ஏற்பாட்டு இறைவாக்கினரைக் குறிக்கிறது. தோட்டத்தின் உரிமையாளர் மகனாக, ‘இயேசு பிரான்’ குறிக்கப் பெறுகிறார். இவர் யூதரால் கொல்லப்படப் போகிறார் என்பதைக் குறிக்கிறது.

இறுதியாக இப்பகுதியில், ஒரு கருத்தை இயற்கையாகப் பதிவு செய்வதைக் காணுங்கள்.

‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே, கட்டிடத்திற்கு மூலைக்கல் ஆயிற்று’.

கட்டிடம் கட்டுபவர்களை, அவர்கள் கட்டம் கட்டும்போது உற்றுக் கவனியுங்கள். கட்டம் கட்டிக் கொண்டு இருப்பார்கள். சில கற்களை ஒதுக்கிப் போடுவார்கள். மூலையில் ஒரு கல் வைக்க வேண்டும் என்று தேடும்பொழுது, முழுக்கல் பயன் படாது. ஒதுக்கிப் போட்ட கற்களில், தேவையான கல்லைத் தேடிப் பிடித்து வைப்பார்கள்.

நற்செய்தியைப் படிப்போர், இயேசு பிரானின் உவமைகளையும், அவர் கூறும் கருத்துகளையும், ஆழமாகப் படித்து சிந்திக்க வேண்டும்.

இயேசு பிரானின் போதனைகள் எளிமை உடையன. எண்ணற்றோரைச் சிந்திக்கத் தூண்டுவன. நற்செய்தியாளர்கள் இவற்றையெல்லம் திரட்டி, வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் நெறியாகத் தந்துள்ளனர்.

இந்நிகழ்வு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றாலும், இன்றும், என்றும் மனித சமூகத்தோடு தொடர்புடையது. சிறுசிறு கதைகளைச் சொல்லி, சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்தி, நல் வழியில் கூட்டிச் செல்வது போல, நல்ல உவமைகளைச் சொல்லி, நம்மை இறைவனோடு இணைக்கப் பாடுபட்டவர், இயேசு பிரான். அவர் உவமைகள் வழியாகப் பேசினார். மக்கள் மொழியில் போதித்தார். தானும் அவ்வாறே நடந்து காட்டி ஒளிவிளக்காகவும், கை காட்டியாகவும் திகழ்ந்தார். முக்காலமும் ஏற்றுக் கொள்ளும் உவமைகளால், இயேசு பிரானின் போதனை ஈடும், இணையற்றதுமாக இருக்கிறது.

இயேசு பிரானின் சிந்தனைகள் அனைத்து மக்களையும் சிந்திக்க வைக்கிறது. திராட்சைத் தோட்டம் போட்டவரின் நிலையை விளக்குவது ஒரு மேலோட்டமாகத் தெரிகிறது என்று எண்ணக் கூடாது.

திராட்சைத் தோட்டம் என்பது, இறைவனால் மிகவும் நேசிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களைக் குறிக்கிறது என்ற கருத்து மிகவும் ஆழமானது. தோட்டத்தின் உரிமையாளர் யார் என்பதையும், தோட்டத் தொழிலாளர் யார் என்பதையும், இக்கருத்துக்குள் அடக்குகிறார். பணியாளர் என்பவர்கள் பழைய ஏற்பாட்டின் இறை வாக்கினர் என்கிறார்.

புதிய ஏற்பாடு என்பது, இயேசுவின் பிறப்புக்கு பிறகு வரும் செய்தியாகிறது. தோட்டத்தின் உரிமையாளர் இறைவன் என்றும், இறைவனின் மகனாக அவதரித்த இயேசு பிரான், தோட்டத்தின் உரிமையாளர் மகனாக, இங்கே சித்தரிக்கப்படுகிறார். இவர் யூதரால் கொல்லப்பட போகிறார் என்பதால், அந்த யூதர்கள்தான், தோட்டத் தொழிலாளர்கள் என்று குறிக்கப் பெறுகிறார். இச்செய்தியை உவமை வாயிலாக எடுத்துரைக்கிறார், இயேசு பிரான்.

இவ்வுலகில், இச்சமுதாயம் சிலரைப் பல நேரங்களில் புறக் கணித்து விடுவதை, நாம் கண்கூடாகக் காண்கிறோம். அவர் களைப் புறக்கணிக்கும்பொழுது, அவர்கள்தேவைப்படுவார்கள் என்பதை நாம் உணர்வது கிடையாது.

‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்ற பழமொழியை, இவ்விடத்தில் நாம் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம். அதற்காகத்தான், கட்டிடம் கட்டுவோர் என்ன செய்கிறார்கள் என்பதை, எல்லோரும் உணரும் வண்ணம் எடுத்துரைக்கிறார். ஒருவரை இழிவாக எண்ணக் கூடாது. எவரும் எந்த நேரத்திலும் பயன் படலாம் என்பதை இச்சமுதாயத்தில் உள்ளோர் உணர வேண்டும். கட்டிடம் கட்டுவோரை இவ்விடத்தில் பொருத்தமாகக் கூறி, அங்கே நிகழும் செயல்பாட்டின் வழியாக, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார்.

மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களை இன்ப உலகிற்கு எடுத்துச் செல்லவும், இயேசுவின் போதனைகள் பயன்படுகின்றன என்பதை இந்நற்செய்தியின் வழியாக எண்ணி மகிழ்வோம்.