ஆன்மிகம்
வாழ்வில் காண வேண்டிய தெளிவு

குரு சொன்னது போலவே, மீண்டும் குளத்தின் அருகே சென்று எட்டிப் பார்த்தான். பின்னர் மீண்டும் குருவிடம் வந்தான். இப்போது அந்த இளைஞனின் முகம் தெளிவாகி இருந்தது.
ஜென் கதை

புகழ்பெற்ற ஜென் ஞானிகளில் ஒருவர் சீஜோ. அவரிடம் ஒரு இளைஞன் வந்தான். அவரை வணங்கியவன், தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி சீஜோவை வேண்டினான்.

அவனை உற்று நோக்கிய சீஜோ, ‘நான் உன்னை சீடனாக ஏற்றுக்கொள்வது இருக்கட்டும். அதற்கு முன் நீ போய், அருகில் இருக்கும் குளத்தில் என்ன தெரிகிறது என்று பார்த்து விட்டு வா’ என்றார்.

‘எதற்காக குளத்தை எட்டிப்பார்க்கச் சொல்கிறார்?’ என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தாலும், குரு சொல்லிவிட்டாரே என்பதால் ஓடிப்போய் குளத்தை எட்டிப்பார்த்தான். குளத்தின் நீர், எந்த கலங்கலும் இல்லாமல் தெளிந்த நீரோடையைப் போல் காட்சியளித்தது. குளத்தை சிறிது நேரம் பார்த்து விட்டு மீண்டும் குருவிடம் திரும்பி வந்தான்.

அவனைப் பார்த்த குரு சீஜோ, ‘சரி.. இப்போது சொல். அந்தக் குளத்தில் நீ எதைக் கண்டாய்?’ என்றார்.

அதற்கு அந்த இளைஞன், ‘நான் என்னுடைய முகத்தைப் பார்த்தேன். பிறகு எனது பரிபூரண பிம்பத்தைப் பார்த்தேன்’ என்றான்.

அவனது பதிலைக் கேட்டதும் பலமாக சிரித்தார் குரு.

குருவின் சிரிப்பில் இருந்த உண்மையை விளங்கிக்கொள்ள முடியாமல் தவித்தான் அந்த இளைஞன். அவனது குழப்பமான முகத்தைக் கண்ட குரு சீஜோ, ‘நீ மீண்டும் சென்று அந்தக் குளத்தைப் பார்த்து விட்டு வா.. இந்த முறை கொஞ்சம் தெளிவாக பார்த்து விட்டு வா’ என்றார்.

குரு சொன்னது போலவே, மீண்டும் குளத்தின் அருகே சென்று எட்டிப் பார்த்தான். பின்னர் மீண்டும் குருவிடம் வந்தான். இப்போது அந்த இளைஞனின் முகம் தெளிவாகி இருந்தது.

அவனிடம் ‘சொல்.. என்ன தெரிந்தது?’ என்றார் குரு.

‘குருவே! நான் உண்மையைக் கண்டு கொண்டேன். இப்போது அந்தக் குளத்தில் எனது பிம்பத்தை அல்ல.. அழகிய வண்ண மீன்களைக் கண்டேன். அவைகள் துள்ளி விளையாடும் அழகை ரசித்தேன். தெளிந்த குளத்து நீரின் கூழாங்கற்களை கண்டேன்’ என்றான்.

அதைக் கேட்டு புன்னகைத்த குரு, இளைஞனை ஆரத் தழுவிக் கொண்டார். ‘இப்போது தான் நீ எனது சீடனாகும் தகுதியைப் பெற்றாய்’ என்றார்.

முன்பு குரு சீஜோ பலமாக சிரித்ததற்கும், இப்போது அவர் புன்னகைத்த விதத்திற்கும் இடையே இருந்த பெரிய வித்தியாசத்தைக் கண்டான் அந்த இளைஞன்.

அந்த வித்தியாசம் இதுதான். உண்மையை உணராதவன் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பான். தனக்காக மட்டுமே வாழ்வான். அவன் கடைசி வரையில், தான் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு துளி கூட இல்லை என்பதை உணரமாட்டான். அதனால் அவன் வாழ்ந்த காலம் மட்டும் நல்ல பதிவுகளை பதிய மாட்டான். ஆனால் தன்னை விலக்கிக் கொண்டு, உலகத்தின் பிறவற்றைப் பார்க்கப் பழகியவன், இந்த உலகத்தை விட்டுப் போன பிறகும் கூட எல்லோராலும் நினைக்கப்படுவான்.