ஆன்மிகம்
வாட்டம் தீர்க்கும் வான்மியூர் ஈசன்

சென்னை திருவான்மியூரில் இருக்கிறது திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீஸ்வரர் திருக்கோவில்.
சென்னை திருவான்மியூரில் இருக்கிறது திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீஸ்வரர் திருக்கோவில். அகத்திய முனிவருக்கு இந்த உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும், அவைகளை குணமாக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளிய பவித்திரமான திருத்தலம் இது. எனவே தான் இங்கு சுயம்புவாய் அருளும் ஈசனை மருந்தீஸ்வரர் என்கிறோம். இங்கு வழங்கப்படும் ஈசனின் திருநீறு நம் நோய்களை போக்கும் வல்லமை உடையது.

கண்ணபிரான் தன்னுடைய பாவம் நீங்க, இங்கு உள்ள பாவ நாசினி தீர்த்தத்தில் நீராடியுள்ளார். காமதேனு இங்குள்ள மூலவர் ஈசனுக்கு பால் சொரிந்து வழிபட்டு, தனது கொடூர குணம் அகலப் பெற்றது. எனவே வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள், சேட்டை அதிகம் செய்யும் குழந்தைகளை இத்தலம் அழைத்து வந்து, பாவ நாசினி தீர்த்தத்தில் நீராடி 48 நாட்கள் இங்குஉள்ள ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட, குழந்தைகள் நற்குணம் அடைவார்கள்.

தினமும் அதிகாலையில் இங்கு கோ– பூஜை நடக் கிறது. தொடர்ந்து 21 நாட்கள் அதில் தவறாமல் கலந்து கொண்டால் நம் கர்ம வினைகள் அகன்று, வாழ்வில் நலம் பிறக்கும். வால்மீகி முனிவருக்கு ஈசன் இங்கு காட்சி தந்ததால் வான்மீகியூர் ஆகி, வான்மியூர், திருவான்மியூர் ஆனது. காம தேனு ஈசனுக்கு பால் சொரிந்து வழிபட்டதால் இத்தல மருந்தீஸ்வரரை பால் வண்ண நாதர் என்றும் அழைக் கிறார்கள்.கோசாலை அருகில் உள்ள தேவாசிரியர் திருமுறை மண்டபத்தில் தினமும் மாலையில் சைவ சமய சொற்பொழிவுகள் நடக்கிறது.

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மாலையில் இங்கு ‘அபிராமி அந்தாதி முற்றும் ஓதுதல்’ நடைபெறுகிறது. அபிராமி அந்தாதி முற்றோதலில் கலந்துகொண்டு தொடர்ந்து வீடுகளிலும் அதிகாலை, இரவு நேரங்களில் என தினமும் இருமுறை அபிராமி அந்தாதி பாராயணம் செய்துவர பதினாறு வகை பெரும் பேறுகளும் கிட்டும் என்கிறார்கள்.

மூளை, மனது, எண்ணங்கள், கற்பனைகள், உணர்ச்சிகள் முதலிய நம் செயல் களுக்கு சந்திர பகவானே காரணம். ஆம்! தற்போது ஆட்டிசம், ஹைப்பர் ஆக்ட்டிவ் குழந்தைகளை காண்கிறோம். இதற்கு காரணம் கர்ம வினைகள் தான். ஆனாலும் இந்த விதமான பாதிப்புக்கு ஆளாக்குபவர் சந்திரனே. சந்திரன் சுபகிரகம். நம் சந்தோசம், தானம், தனம் இவைகளுக்கும் சந்திரனே காரணமாவார். அத்திரி முனிவரின் புதல்வர் சந்திரன். மிகுந்த அழகன். அத்திரி முனிவர் தன் புதல்வன் சந்திரனை கல்வி கற்க வேண்டி பிரகஸ்பதியிடம் அனுப்பினார். பிரகஸ்பதியும் சந்திரனுக்கு சகல கலைகளையும் போதித்தார். பிரகஸ்பதியின் மனைவி தாரை சந்திரனின் அழகில் மயங்க, கல்வி கற்க வந்த இடத்தில் தன் குருவின் மனைவியான தாரையின் அழகில்  சந்திரனும் மயங்க, இருவரும் ஒன்றாயினர். இதனால் தாரையின் வயிற்றில் கரு உண்டானது. இப்படி சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்தவர் ‘புதன்’. சகல கலைகள், கல்வி, ஞானம், புத்திரபாக்கியம் இவைகளை அளிக்க கூடியவர் புதன். சந்திரன் தன் குருவின் மனைவி தாரையோடு தொடர்பு கொண்டதால் அவனுக்கு பாவம் உண்டானது. பிரகஸ்பதி சந்திரனை குரு துரோகி என சபிக்க, சந்திரன் தனது கலைகளை இழந்து, ஒளியை இழந்தார்.

அந்த சாபம் நீங்குவதற்கான வழிகளைத் தேடினார் சந்திரன். நாரதர், சந்திரனை திருவான்மியூர் திருத்தலம் சென்று, அங்கு உள்ள காமநாசினி தீர்த்தத்தில் நீராடி, ஈசனை வழிபட பணித்தார். சந்திரன் திருவான்மியூர் வந்து முறைப்படி ஈசனை வழிபாடு செய்து, தாம் இழந்த அனைத்து கலைகளையும், ஒளியையும் மீண்டும் அடைந்தார். கலிகாலத்தில் காமத்தால் தவறுகள், கொலைகள் பல நடந்து வருகின்றன. இதனால் இன்று பல குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு, தீர்வுகளைத் தேடி அலை கிறார்கள். இந்த கொடிய காம பாவங்களுக்கு பரிகாரம் இல்லை. இருந்தாலும் மன ஒருமைப்பாட்டுடன், மனம் திருந்தி இத்தலம் வந்து ஒரு மண்டலம் தொடர்ந்து இங்கு உள்ள காமநாசினி தீர்த்தத்தில் நீராடி, ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து, கருவறை தீபத்தில் தூய பசும் நெய் சேர்த்து வழிபட கர்மவினைகள், காம வினைகளால் வந்த தோ‌ஷங்கள் யாவும் அகலும் என்பது நம்பிக்கை.

பிரகாரத்தில் கேதாரீஸ்வரர், சுந்தரேஸ்வரர், ராமநாதீஸ்வரர், ஜம்புகேஸ்வரர், உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார், கங்காள நாதர், நால்வர், விநாயகர், சூரியன், அறுபத்து மூவர் சன்னிதிகள், கஜலட்சுமி, வீரவாகு, அருணகிரிநாதர் மற்றும் வள்ளி– தெய்வானை உடனுறை முருகப்பெருமான், நடராஜர் – சிவகாமி அம்மன் சன்னிதிகளும் உள்ளன. இங்கு உள்ள கேதாரீஸ்வரர் வழிபாட்டினை திங்கள், தீபாவளி நாட்களில் செய்தால் பித்ரு சாபங்கள் தீர வழிவகுக் கும். இங்கு உள்ள கேதாரீஸ்வரரை தீபாவளி நாளில் வட மாநிலத்தவர் உட்பட பலரும் அபிஷேகம் செய்து வழிபடுகிறார் கள்.

வெளிப் பிரகாரத்தில் மும்முடி விநாயகர், விஜய விநாயகர், கோசாலை, நாகர் மற்றும் கொடிமரம், தலமரமான வன்னி மரம் முதலியன உள்ளன. இங்கு மருந்தீஸ்வரர் மேற்கு பார்த்த வண்ணமும், திரிபுர சுந்தரி அம்பாள் தெற்கு பார்த்த வண்ணமும் உள்ளனர். அம்பாள் சன்னிதியின் முன்பக்க தூணில் உள்ள சரபேஸ்வரர், நரம்பு சம்பந்தமான நோய்கள், வறுமை, கடன் முதலியவற்றை நீக்கும் வல்லமை கொண்டவர். தீய சக்திகள், எதிரிகளால் ஏவப்படும் பில்லி சூனியம், மாந்திரீகம், பேய் பிசாசு போன்றவைகள் நம்முள் புகுந்து நம் செயல்களை மாற்றி விடும். சில நேரங்களில் மனதில் எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கும். கெட்டவைகளை செய்யத் தூண்டும். வாழ்க்கையிலும், செய்தொழிலிலும் முற்றிலும் நம்மை வளர விடாமல் முடக்கி விடும். சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே இவற்றை முறியடிக்க சரபேஸ்வரரை வணங்குவதே சிறந்ததாகும். அதுவும் இத்தல அம்பாள் சன்னிதி முன்பு தூணில் உள்ள சரபேஸ்வரர் மிகுந்த சக்தி உள்ளவர். சரபேஸ்வரரின் தூணின் பின்புறம் உக்கிர நரசிம்மர் உள்ளது இன்னும் சிறப்பு. இவருக்கு பானகம் படைத்து தொடர்ந்து வழிபட்டு வரவேண்டுமாம். இங்கு அம்பாள் சன்னிதி கருவறை பிரகார சுற்றில் ஓவியத்தில் அழகுற மிளிரும் திருக்கடையூர் அபிராமி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி.

‘இந்திரனும் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே’. இந்திரனும் சந்திரனும் கெட்டது பெண்களால் தான். ஆனால் பெண்கள் மட்டுமே அதற்கு காரணம் அல்ல. இந்திரனும், சந்திரனும் அவர்களது மனதை கட்டுப்படுத்த முடியாததாலே தவிர பெண்கள் காரணம் அல்ல என்பதே உண்மை.

இத்தல ஈசனின் அப்பரின் பதிகமான, ‘விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்’ என்னும் திருமுறை பதிகத்தை தினமும் இருமுறை தொடர்ந்து பாராயணம் செய்து, வான்மியூர் ஈசனை வழிபட்டு வந்தால், வழி பிறந்து, நம் வாழ்விலும், நம் சந்ததிகள் வாழ்விலும் ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை. சரும நோய்கள் அகல தொடர்ந்து பதினோரு பவுர்ணமியில் இங்கு வந்து கருவறை தீபத்தில் பசு நெய் சேர்த்து வழிபட வேண்டும். அப்பர், சம்பந்தர், அருணகிரிநாதர் பாடல் கொண்ட திருத்தலம் இதுவாகும். இந்த ஆலயத்தின் அருகில் சற்று தொலைவில், மகான் பாம்பன் சுவாமிகள் அதிஷ்டானம் உள்ளது. அதன் அருகிலே பெண் சித்தர் சர்க்கரை அம்மா அதிஷ்டானமும் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி, வியாழன், திருவாதிரை, சஷ்டி, கிருத்திகை நாட்களில் வந்து வழிபட மகான்களின் பரிபூரண அருளாசி கிடைக்கும்.

–சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம்.

பைரவர்  வழிபாடு

இந்த ஆலயத்தில் தியாகராஜருக்கு தனிச் சன்னிதி உள்ளது. இத்தல பைரவருக்கு நாய் வாகனம் இல்லை. நூற்றியெட்டு சிவலிங்கம் சூழ இங்கு பைரவர் அருள்பாலிக்கிறார். தேய்பிறை அஷ்டமி தினத்தில் மாலை வேளையில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இத்தல பைரவரை வழிபட உடல் நோய்கள் உடனே குணமடைவதாக கூறுகிறார் கள். இத்தல பலிபீடம் மற்றும் கால பைரவரை அஷ்டமி நாட்களில் நறுமண மலர்கள் சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபட கடன், வறுமை, தரித்திரம் அகலும்.