கடும் தண்டனை

புனித மாற்கு எழுதிய நற்செய்திகளில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் சிறப்புகளை ஆராய்வோம். இப்பகுதி கண்டிப்புடன் கூறுவதாக உள்ளது.

Update: 2017-10-10 00:15 GMT
நற்செய்தி சிந்தனை

- செம்பை சேவியர்


புனித மாற்கு எழுதிய நற்செய்திகளில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் சிறப்புகளை ஆராய்வோம். இப்பகுதி கண்டிப்புடன் கூறுவதாக உள்ளது.

அக்காலத்தில், இயேசு பிரான் வழக்கம்போல் அனைவருக்கும் போதித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர், ‘மறை நூல் அறிஞர்கள் குறித்து கவனமாக இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதை விரும்புகிறார்கள். வெளியிடங்களில் பலபேர் முன்னிலையில், தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்’.

‘தொழுகைக் கூடங்களில், முதன்மையான இருக்கைகளை விரும்புகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடத்தையும் விரும்புகிறார்கள். கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுமையான தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகக் கூடியவர்கள் இவர்களே’ என்று கூறினார்.

இதற்குப் பிறகு இயேசு பிரான், காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்து கொண்டார். மக்கள் அப்பெட்டியில் காசு போடுவதை, உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார். செல்வந்தர்களில் பலர், மிகுதியாகக் காசு களைப் போட்டனர். அங்கு ஓர் ஏழைக் கைம்பெண் வந்தாள். அதற்கு இணையாக இரண்டு காசுகளைப் போட்டாள்.

அப்போது அவர் தம்முடைய சீடரை வரவழைத்தார். அவர் அவரைப் பார்த்து, ‘இந்த ஏழைக் கைம்பெண் காணிக்கைப் பெட்டியில், காசு போட்ட மற்ற எல்லோரையும் விட, மிகுதியாகப் போட்டிருக்கிறாள்’ என்றார். ஏனென்றால், ‘அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்தில் இருந்து போட்டனர். இவரோ தனக்குப் பற்றாக்குறை இருந்தும், தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன்? தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டு விட்டாள்’ என்று கூறினார்.

தர்மம் என்ற பெயரால் இன்று என்னென்ன நடக்கிறது? தானம் என்ற பெயரால், இறைவனுக்கு காணிக்கை எப்படிச் செலுத்தப்படுகிறது? என்பதையெல்லாம் ஒரு கணம் சிந்திப்போம்.

இப்பகுதியில் மறைநூல் அறிஞர்களை கடுமையாகச் சாடு கிறார்.

‘கள்ளத் தீர்க்கதரிசிகள் மட்டில் எச்சரிக்கையாக இருங்கள்’ என்று வேறோர் இடத்தில் குறிப்பிடுவார். மறைநூல் அறிஞர்கள் அனைவரையும் குறிப்பிடுகிறார் என்று கருதி விடக்கூடாது. பொதுவாக அவர்கள் எதை எதை விரும்புகிறார்கள் என்பதை விளக்குகிறார். தொங்கல் ஆடையை அணிந்து கொள்ள விருப்பம் கொள்கிறார்கள். பலர் தங்களை பலபேர் முன்னிலையில் வணங்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். தொழும்போதும் சரி, விருந்துகளிலும் சரி, எங்கும் முதலிடம் வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அது மட்டுமா? நீண்ட நேரம், இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள்.

எக்காலத்திலும் இத்தகைய மனிதர்கள் உண்டு. வழிதவறி மக்களை ஏமாற்றுபவர்களும் உண்டு. இயேசு பிரான் இவ்வுலகில் உலவித் திரிந்த காலத்திலேயே, இன்று போல் அன்றும் நடைபெற்று இருக்கிறது. ஆகவே மக்கள் மேல் அன்பு கொள்ளும் ஒருவர், மக்களை நெறிப்படுத்த வந்தவர், எதையும் மறைக்காமல், வெளிப் படையாகப் போதிக்கிறார். அதோடு அவர் நின்று விடவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு, தீர்ப்பில் கடுமையான தண்டனை உண்டு என்று கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், ‘தவறான வழியில் பொருள் சேர்த்து, அளவுக்கு அதிகமாக இறைவனுக்குக் கொட்டும் செல்வந்தர்களைக் கண்டிக்கிறார். தன் கையில் சேர்த்து வைத்த காசு முழுவதையும், இறைவனுக்குக் காணிக்கையாக்கிய, ஏழைக் கைம்பெண்ணைப் போற்றுகிறார்’. ‘இவளே! எல்லோரையும் விட, மிகுதியாகப் போட்டாள்’ என்கிறார்.

இந்நற்செய்தியை நாம் இக்காலத்திற்குப் பொருத்திப் பார்க்கலாம். செல்வந்தர்கள் என்ற போர்வையில் வாழக் கூடியவர்கள் யார் என்பதை, நாம் நன்கு அறிவோம். கொள்ளையடிப்போரும், ஏமாற்றிப் பணம் பறிப்போரும் தான் அதிகமாகச் செல்வம் சேர்த்தவர்களாக இருக்கிறார்கள். அதுமட்டுமா?

மறை நூல் அறிஞர்களைக் கடுமையாகச் சாடுகிறார். அவர்கள் வெளி வேடக்காரர்களாகத் தங்களை அலங்கரித்துக் கொள் கிறார்கள். இறைவன், வெளிவேடத்தை நோக்குபவர் அல்லர். உள்ளத்தைக் கவனிக்கிறார். ஆகவே, ‘வெளிவேடக்காரரிடம் கவனமாக இருங்கள்’ என்கிறார். அவர்கள் எப்படித் தோற்றமளிக்கிறார்கள் என்றும், பிறர் எப்படித் தங்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும், விவரித்துக் கூறுகிறார். எல்லா இடத்திலும் தங்களை அவர்கள் முன்னிலைப்படுத்திக் கொள்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், நடிக்கிறார்கள் என்று, கடுமையாகக் கூறுகிறார். இவர்களின் கதி என்னவாகும் என்பதை எடுத்துரைக் கிறார். இவர்களுக்குக் கடுமையான தண்டனை தான் கிடைக்கும் என்பதை ஆணித்தரமாகக் கூறுகிறார்.

அதற்காக காணிக்கைப் பெட்டிக்கு அருகே நடக்கும் நிகழ்வைச் சித்தரிக்கிறார். செல்வம் உள்ளவர்கள் அள்ளி, அள்ளிப் போடுவதையும், ஓர் ஏழைப்பெண், அதிலும் கைம்பெண், தன் உழைப்பால் வந்த பணத்தில் இருந்து, இரண்டு காசுகளைப் போட்டதையும், எடுத்துக்காட்டாகச் சீடர்களுக்குக் காட்டுகிறார்.

இந்த நற்செய்தியை மிகவும் உன்னிப்பாக நாம் கவனிக்க வேண்டும். மக்களை நெறிப்படுத்தவும், அவர்கள் முறையாக வாழவும், அவர்களுக்கான போதனை என்ன என்பதையும் உணர்ந்தே அவர் இவ்விதம் வெளிப்படுத்துகிறார். ஆகவேதான், ‘கள்ளத் தீர்க்கதரிசிகள் மட்டில் எச்சரிக்கையாய் இருங்கள்’ என்கிறார்.

இயேசு பெருமான் யாரையும் விட்டு வைக்கவில்லை. உண்மையும், நேர்மையும் வலம் வரத்தான் அவரின் போதனை இருந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

(தொடரும்)

மேலும் செய்திகள்