பிறவிப்பிணி நீக்கும் மாவிட்டபுரம் கந்தன்

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள, மாவிட்டபுரம் கந்த சாமித் திருக்கோவில்.

Update: 2017-10-24 02:00 GMT
லங்கை நாட்டின் புகழ் பெற்ற பழம் பெரும் கந்தன் ஆலயம், நகுல முனிவருக்கு கீரியின் முகம் நீக்கியருளிய தீர்த்தம் இருக்கும் கோவில், சோழர், பாண்டியர் என பல்வேறு மன்னர்களும் போற்றி வழிபட்ட கோவில் என பல்வேறு சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள, மாவிட்டபுரம் கந்த சாமித் திருக்கோவில்.

மாவிட்டபுரம் என்பதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. மா + விட்ட + புரம் என பிரித்து பொருள் கொண்டால், மா மரவடிவிலான அசுரனை, சம்ஹாரம் செய்து, அவ்வடிவம் நீங்கிய தலம் என்று பொருள் கொள்ளலாம். மற்றொன்று, மாருதப்புரவீகவல்லியின் மா– குதிரை/பெருநோய், விட்ட– நீங்கிய, புரம்– தலம் என்பதால், மாவிட்டபுரமானதாக, மற்றொரு காரணம் கூறப்படுகிறது.

தலபுராணம்

சோழமன்னனின் மகளாகப் பிறந்தவள், மாருதப்புரவீகவல்லி. பேரழகு மிகுந்த இவளை சீராட்டி, பாராட்டி வளர்த்தனர். ஆனால், முற் பிறவியில் அயக்கிரீவ முனிவரின் சாபத்தால் குன்மநோயும், குதிரை முகமும் தோன்றி இளவரசியை வாட்டியது. இக்குறை தீர சோழ, பாண்டிய சேரநாட்டு திருத்தலங்கள் பலவற்றிலும் நீராடி இறைவனை வழிபட்டுவந்தாள். தல யாத்திரையின்போது பேரூர் ஆதீன முதல்வரான சாந்தலிங்க முனிவரைத் தரிசனம் செய்தாள். முனிவர் அவளிடம், இலங்கை நாட்டில் அமைந்துள்ள நகுலேச்சரம் என்ற தலத் தீர்த்தமான கண்டகித் தீர்த்தத்தில் நீராடினால் சாபம் முழுவதும் நீங்கும் என்றார். (அன்னை பார்வதி நீராடி மகிழ, சிவ பெருமானால் உருவாக்கப்பட்ட தீர்த்தமாகும் இது. இந்து மகாக் கடலில் இது அமைந்துள்ளது).

அதன்படியே கதிர்காமம் தீர்த்தம் முடித்து, நகுலேச்சரம் வந்து நகுலமுனிவரைச் சந்தித்தாள். எனக்கு ஏற்பட்ட கீரிமுகம், இத்தலத்து நீராடிய பிறகே நல்லமுகம் கிடைத்தது. அதேபோல்  நளன், அர்ச்சுனன் முதலானோர் நலம் பெற்றதைக் கூறி, இத்தலத்து தீர்த்தத்தில் நீராடி வழிபட நகுலமுனிவர் அறிவுரை கூறினார். அதன்படியே நீராடி, கந்தனை வணங்கி வழிபட்டு வந்த அவளுக்கு, நோய் நீங்கி, இயல்பான அழகு முகம் கிடைத்தது. இச்செய்தி நாடெங்கும் பரவியது. அது முதல் இத்தலம் துரகானன விமோசனபுரி என்று வடமொழியிலும், மாவிட்டபுரம் என தமிழிலும் அழைக்கப்பட்டது.

தன் மகளின் நோய் தீர்த்த இறைவனுக்குக்  கோவில் கட்ட மன்னன் முயற்சி செய்தான். அதன்படியே மிகப் பெரிய ஆலயம் எழுப்பப்பட்டு வந்தது. எம்பெருமானால் திருவுள்ளப்படி தில்லை மூவாயரவருள் ஒருவரான பெரிய மனத்துளார் என்பவரை இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். இந்தியாவில் இருந்து கந்தசாமியின் விக்கிரகம், இலங்கை துறைமுகம் வந்து இறங்கியது. இதுவே காங்கேயன் துறைமுகம் என தற்போது அழைக்கப்படு கிறது. 



இத்தலத்தில் மாருதப்புரவீகவல்லி மீது காதல் கொண்ட உக்கிரசிங்கசேனன், இளவரசியின்  தந்தையிடம் அனுமதி பெற்று, கோவில் திருப்பணி முடிந்த பிறகு, மணம் புரிய சம்மதித்தான். அதன்படி, மாவிட்டபுரம் கந்தன் ஆலயம் வெகு நேர்த்தியாக கட்டி முடிக்கப்பட்டு,  குடமுழுக்கு சிறப்பாக நடத்தி, ஆலய நிர்வாகத்தை தீட்சிதரிடம் ஒப்படைத்தனர். ஆலய நிர்வாகத் தீட்சிதர் பரம்பரை, குறைவின்றி நிர்வாகம் செய்து வந்தது.

இளவரசி மாருதப்புரவீகவல்லி, உக்கிரசிங்கசேனனின் பட்டத்தரசியானாள்.

இதன் பிறகு, போர்ச்சுகீசியர்களுக்கும், பகைமை கொண்ட நாட்டு மக்கள் சிலராலும், உள்நாட்டு யுத்தம் காரணமாகவும் பல்வேறு இன்னல்களை அனுபவித்தது இவ்வாலயம்.

1996–ல் இவ்வாலயத்தின் புனரமைப்பு பணி மீண்டும் தொடங்கியது. 2011 –லிருந்து மக்கள் வழிபடத் தொடங்கினர். திருப்பணி இன்னமும் நடைபெற்று வருகிறது. மக்களும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

ஆலய அமைப்பு


ஆலயம் நான்கு திசைகளிலும் வாயில்களைக் கொண்டிருந்தாலும், கிழக்கு, மேற்கு, தெற்கு வாசல்கள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன.    மேற்கு வாசலில் 80 அடி உயர ராஜகோபுரம் கலைநயத்துடன் விண்ணை முட்டி நிற்கின்றது. அருகே வேட்டை மண்டபம் அமைந்துள்ளது. நான்கு மாடவீதிகள் விளங்க, மூன்று பிரகாரங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயம், வில்லு மண்டபம், தட்டி மண்டபம், ராஜகோபுரம், வசந்த மண்டபம், துவார கோபுரம், ஸ்தம்ப மண்டபம், ஸ்நபன  மண்டபம், மகா மண்டபம் அந்தராள மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவையும் முறைப்படி கட்டப்பட்டுள்ளன. இளவரசியின் குதிரைமுகம் மற்றும் அழகு முகம் கொண்ட சிலைகள், சிற்பங்கள் நிறைந்த ஸ்நபன மண்டபத்தில் அமைந்துள்ளது.

ஆலயத்தில், விநாயகர், சந்தானகோபாலர், மகாலட்சுமி, சிதம்பரேஸ்வரி சமேத சிதம்பரேஸ்வரர், தண்டாயுதபாணி, வைரவர், நவக்கிரங் கள், நாகராஜர், சண்முகர், முத்துக்குமார சுவாமி, சுப்பிரமணியர், சந்திரசேகரர், மாயூரர், ஆகியவை ஒருங்கே அமைந்துள்ளன.

இவற்றிற்கெல்லாம்  நடுநாயகமாக மாவைக்கந்தன் வள்ளி தெய்வானை சமேத கந்தசாமியாக நின்ற கோலத்தில் அருள் வழங்குகின்றார்.   இவர்களின் பின்புறம் காவலாக, மயில் அழகுற காட்சி தருகின்றது. இந்த வடிவம் சோழர் காலத்தைச் சார்ந்தது என ஆய்வாளர்கள்  கூறுகின்றனர்.

இவ்வாலயத்தில் மாருதப்புரவீகவல்லி வழிபட்ட செம்புவேல், சிவலிங்கம்,  தான் தோன்றி விநாயகர்  மூன்றுமே இன்றும் காட்சி தருகின்றன.  முதல் மரியாதை இவர்களுக்கு செய்த பிறகே பிற தெய்வங்களுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

விழாக்கள்

ஆடி அமாவாசையில் கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பு. தைப்பூசம் லட்சார்ச்சனை, ஆனி, ஆடியில் 25 நாட்கள் பிரமோற்சவம், அலங்காரத் திருவிழாவாக நடைபெறுகிறது. இவ்விழாவில் இலங்கையின் அனைத்துப் பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இது தவிர, ஐப்பசி  சுக்ர வாரம், நவராத்திரி, கந்தசஷ்டிவிழா, கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவெம்பாவை என விழாக்கள் குறைவின்றி  நடைபெறுகின்றன.

இவ்வாலயம் மாவை ஆதீனம் வாயிலாக சிறப்புடன் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கி.பி. 789–ம் ஆண்டில் பெரியமனத்துளார் என்ற தீட்சிதரால் தொடங்கப்பட்ட ஆலயம். இன்று 39–வது ஆதீனமாக ரத்தினசபாபதி குருக்கள் நிர்வாகம் செய்துவருகிறார்.

ஆறுகால பூஜை நடைபெறும் இவ்வாலயத்தை, காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தொடர்ச்சியாக தரிசனம் செய்யலாம். பூஜைகள்அனத்தும் குமார தந்திரப்படி மேற்கொள்ளப்படுகிறது.

தலமரம்

காஞ்சீபுரத்தில் இருந்து கொண்டு வந்த மாமரமே, தலமரமாகும். தலத் தீர்த்தம் கண்டகித் தீர்த்தம் என்னும் இந்து மகா சமுத்திரம் ஆகும். இது சிவபெருமானால்,   பார்வதியின் குளியலுக்காக உருவாக்கப்பட்ட புண்ணிய தீர்த்தமாகும். இது யுகங்களைக் கடந்து, கலியுகத்திலும் தன் அருளையும், சக்தியையும் தொடர்ந்து  வழங்கி வருகிறது.  இத்தீர்த்தத்தில் நீராடிய பிறகே,  மாருதப்புரவீகவல்லியின் நோயும், குதிரை முகமும்  குணம் பெற்றது.

பரிகாரத் தலம்

மாவைக் கந்தன் எவ்விதவேண்டுதலையும் நிறைவேற்றித் தரும் வள்ளலாக விளங்குகின்றான். வேண்டுதலுடன் வருபவர், கண்டகி  தீர்த்தத்தில் நீராடி, நகுலேசுவரரை வழிபட்டு, மாவைக் கந்தனிடம் வந்து மனமுருகி பிரார்த்திக்க வேண்டும். வேண்டுதலை ஓராண்டுக்குள் நிறைவேற்றித் தருவது, மாவைக் கந்தனின் வழக்கம் என்பது, பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக அமைந்துள்ளது.

அமைவிடம்

இவ்வாலயம்,  இலங்கை நாட்டின் வட பகுதியான யாழ்ப்பாணம் மாவட்டத்தில்,  தெல்லிப்பழை வட்டத்தில், காங்கேசன்  துறைமுகத்தில் இருந்து  தெற்கே 5 கி.மீ., யாழ்ப்பாணத்திற்கு வடக்கே 17 கி.மீ., தொலைவில், மாவிட்டபுரம்  திருத்தலம் அமைந்துள்ளது. பலாலி விமான தளம் மேற்கே 2 கி.மீ. தொலைவிலும்,  அமைந்துள்ளது. மாவிட்டபுரத்திற்கு  பேருந்து,  ரெயில் வசதிகள் உள்ளன.

பல்வேறு பெருமைகள் கொண்ட மாவைக் கந்தன் திருக்கோவில் திருப்பணிகள், யுத்த சூழலுக்குப் பின்பு, நிதானமாக நடந்தேறி வருகிறது.  கந்தன் அடியார்கள்ஆதரவு இருந்தால், விரைந்து நிறைவேறி குடமுழுக்கும் நடை பெறும். உதவியவர்களுக்கு மாவைக் கந்தனின் அருளும்  பூரணமாய்க் கிடைக்கும்.

– பனையபுரம்  அதியமான்.

மேலும் செய்திகள்