இஸ்லாம் : உள்ளத்தால் உறுதிகொள்!

நல்ல செயலைச்செய்வதென தீர்மானம் எடுப்போம். அதனைச் செய்து முடிக்குமுன் இடையே மரணம் வந்தாலும் பரவாயில்லை. அதற்கான நற்கூலி கிடைத்து விடும்.

Update: 2017-11-08 12:04 GMT
ல்ல செயலைச்செய்வதென தீர்மானம் எடுப்போம். அதனைச் செய்து முடிக்குமுன் இடையே மரணம் வந்தாலும் பரவாயில்லை. அதற்கான நற்கூலி கிடைத்து விடும். ஆயினும் அந்தத் தீர்மானம் உண்மையானதாக இருக்க வேண்டும். உள்ளொன்றுவைத்து புறமொன்று பேசும் கபடதாரியாக அல்லாமல் உளப்பூர்வமாக இருக்க வேண்டும்.

ஒரேயொரு விநாடியே என்றாலும் உண்மையாக நடந்துகொள்ளும் பட்சத்தில் அவர் சொர்க்கத்தை அடைந்துவிடுவார் என்பதற்கான நிகழ்வுதான் பின்வரும் சம்பவம்.

சுட்டெரிக்கும் வெயில். தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தமது ஏதோ ஒரு தேவைக்காக மதீனாவின் எல்லையைத் தாண்டி வெளியே செல்லத் தயாராக இருந்த வேளை. தூரத்தில் ஒரு உருவம் வருவதுபோல் தோன்றியது. நபிகளார்அதன்பால் பார்வையைக் கூர்மையாக்கி நோக்கினார்கள். ஒட்டகத்தில் ஒருவர் வருவது தெரிந்தது.

வெகு சிரமத்துடன் தங்களை நோக்கித்தான் அவர் வருகின்றார் என்பது தெரிந்தது. தோழர்களிடம் கூறினார்கள்: அவர் நம்மை நோக்கித்தான் வருவதுபோல் தெரிகிறது.

சற்று நேரத்தில் அந்த மனிதரும் அருகே வந்துவிட்டார். பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருகே வந்தவர், அங்கிருந்தவர்களை ஒருகணநேரம் நோட்டம் விட்டார். கூர்மையாகப் பார்க்கத் தொடங்கினார். கலைந்த கேசம். தூசு படிந்த தேகம். பயணக் களைப்பும் சிரமங்களும் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது.

இறைத்தூதர் (ஸல்) அவரிடம் கேட்டார்கள்: ‘எங்கிருந்து வருகின்றீர்?’

அவர் கூறினார்: ‘எனது மனைவி, மக்கள், குடும்பம் அத்தனை பேரையும் விட்டுவிட்டு வெளி ஊரிலிருந்து வருகின்றேன்’.

நபி (ஸல்): ‘எங்கே செல்கின்றீர்?’

‘அல்லாஹ்வின் தூதரைச் சந்திக்க வேண்டும். அவர் எங்கே இருக்கின்றார்?’

‘அல்லாஹ்வின் தூதரோடுதான் நீங்கள் இப்போது பேசிக்கொண்டு இருக்கின்றீர்’.

உடனே அவரது முகம் பிரகாசமானது. உற்சாகம் பிறந்தது. ஒட்டகத்தில் இருந்து இறங்காமலே, ‘அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தைக் குறித்தும் இறைநம்பிக்கையைக் குறித்தும் எனக்குக் கற்றுத் தாருங்கள்’ என்று கேட்டார்.

நபி (ஸல்): ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவீராக. தொழுகையை நிலைநாட்டுவீராக. ஜகாத்தைக் கொடுப்பீராக. ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பீராக. ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவீராக. இதுதான் இஸ்லாம்’.

உடனே அவர் இஸ்லாத்தை ஏற்றார். அண்ணலாரின் உபதேசத்தை உள்ளத்தில் ஏந்தி அதனைச் செயல்படுத்துவதாக அப்போதே உறுதிபூண்டார். தமது உறுதி மொழியை அவர் கூறிக்கொண்டிருக்கும்போதே அவரது ஒட்டகம் அசையத் தொடங்கியது. அங்கிருந்த ஒரு பாறாங்கல்லில் ஒட்டகத்தின் முன்னங்கால்கள் சிக்கிக் கொண்டன. ஒட்டகத்தின் மீது அந்த மனிதர் இருக்கும் நிலையிலேயே ஒட்டகம் தரையில் விழுந்தது. அவரும் ஒட்டகமும் ஒருசேர கீழே விழுந்ததில் ஒட்டகம் அவருடைய உடலின் மேல் விழுந்தது. அங்கிருந்த ஒரு கல்லில் தலை பலமாக மோதியது. சற்று நேரத்தில் மூச்சுவிட சிரமப்பட்டார். பலத்த அடி.

சுற்றி நின்ற தோழர்களுக்கு அதிர்ச்சி. தோழர்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்’.

அம்மர்பின்யாஸர்(ரலி) அவர்களும் ஹுதைபா(ரலி) அவர்களும் அவரை அண்ணலார் (ஸல்) அவர்களிடம் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.

உட்கார வைக்க முயன்றார்கள். முடியவில்லை. கை கால்களைஅசைக்க முயன்றார்கள். அசையவில்லை. உடனே பெருமானார் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! இவர் மரணித்துவிட்டார்போல் தெரிகிறது’ என்றார்கள்.

அவரை நோக்கி அதிர்ச்சியுடன் திரும்பினார்கள் பெருமானார் (ஸல்). உண்மைதான். மரணித்துவிட்டார். ஆயினும், அதே வேகத்தில் தமது முகத்தை உடனே வேறு பக்கம் திருப்பினார்கள் பெருமானார் (ஸல்). அவருடைய மரணத்தால் அதிர்ச்சியுற்றிருந்த தோழர்களுக்கோ பெருமானார் (ஸல்) அவர்களின் இந்தச் செயல் ஆச்சரியத்தைத் தந்தது.

தோழர்களிடம் கூறினார்கள்: ‘அவரைவிட்டு முகத்தைத் திருப்பியதைத்தானே ஆச்சரியமாகப் பார்க்கின்றீர்கள்..? நீங்கள் காணாத ஒரு காட்சியை நான் கண்டேன். இரண்டு வானவர்கள்அவருக்கு இப்போது சொர்க்கத்து உணவை ஊட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். பசியுடன் அவர் இறந்திருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டேன். ஆகவேதான் எனது முகத்தைத் திருப்பிக் கொண்டேன்’. (அஹ்மத்)

உளப்பூர்வமாக ஒன்றை ஏற்றுக்கொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானமும் செய்துவிட்டால்.. அதனைச் செயல் படுத்துமுன்னரே மரணம் வந்துவிட்டாலும் அதற்கான கூலியும் சொர்க்கமும் நிச்சயம் என்பதை இந்த நிகழ்வு கற்றுத்தருகின்றது.

இங்கே நோக்கங்களும் லட்சியங்களும்தான் கவனிக்கப்படுகின்றன தவிர, செயல்களும் வார்த்தைகளும் அல்ல. இறைவனின் சன்னிதியில் ஒருமுறை கூட சிரவணக்கம் (ஸுஜுத்) செய்யாத பலர் ‘ஷஹீத்’ எனும் (இறைப்பாதையில் உயிர் தியாகம்செய்யும்) பாக்கியம் பெற்றுள்ளனர். வரலாற்றின் பக்கங்களில் பல இடங்களில் இதனை அவதானிக்கலாம்.

பிர்அவ்னின்அவையில் மூஸா (அலை) அவர்களுக்கு எதிராக சூனியம் செய்ய வந்த மந்திரவாதிகள், உண்மை தெரிய வந்தபோது இறைநம்பிக்கைக் கொள்கின்றனர். அவர்களைக் கொலை செய்வதாக மிரட்டுகின்றான் பிர்அவ்ன். அதற்கு அவர்களின் பதில் என்ன தெரியுமா..?

அதற்கு சூனியக்காரர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: “எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக! தெளிவான சான்றுகள் எங்கள் கண்ணெதிரே வந்த பின்னரும் நாங்கள் (சத்தியத்தை விட) உனக்கு ஒருபோதும் முன்னுரிமை தரமாட்டோம். எனவே, நீ என்ன செய்ய விரும்புகின்றாயோ செய்துகொள். (அதிகபட்சம்) இவ்வுலகவாழ்வில் மட்டுமே உன்னால் தீர்ப்பு வழங்க முடியும். திண்ணமாக, நாங்கள் எங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொண்டுவிட்டோம்” (திருக்குர்ஆன்20:72)

பின்னர் பிர்அவ்ன் அவர்கள் அனைவரையும் கொலை செய்தான். ஆம், காலையில் மந்திரவாதிகளாக இருந்தவர்கள், மாலையில் ஷஹீத்களாக மாறினர். ஒருமுறை கூட இறைவனுக்கு முன் சிரவணக்கம் செய்யாமலேயே இந்த பாக்கியத்தை அவர்கள் பெற்றனர். காரணம், உள்ளத்தில் கொண்ட உறுதி. அது மட்டுமே வெற்றியைத் தேடித்தரும்.

நூஹ் மஹ்ழரி, குளச்சல். 

மேலும் செய்திகள்