ராவணன் உருவாக்கிய நகுலேஸ்வரம்

கிருதாயுகத்தில் தோன்றிய தலம், இலங்கை நாட்டின் பழம்பெரும் ஆலயம், பஞ்சேஸ்வரத் தலங்களுள் முதன்மையானது.

Update: 2017-12-08 01:00 GMT
கிருதாயுகத்தில் தோன்றிய தலம், இலங்கை நாட்டின் பழம்பெரும் ஆலயம், பஞ்சேஸ்வரத் தலங்களுள் முதன்மையானது, பரமசிவன் தோற்றுவித்த தீர்த்தம் கொண்ட கோவில், இலங்கை வேந்தன் ராவணன் எழுப்பிய ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்கிறது, இலங்கையில் உள்ள கீரிமலை எனும் நகுலேஸ்வரர் திருக்கோவில்.

பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்தபோது, அதன் துளிகள் இத்தலத்தில் விழுந்து, தீர்த்தம் உருவானதாக புராணம் கூறுகிறது. தவிர அன்னை பார்வதியின் குளியலுக்காக, பரமசிவன் தீர்த்தம் உருவாக்கினார் என புத்த சமய நூலான மகாவம்சம் சொல்கிறது. அர்ச்சுனன் இத்தலத்தில் தவமிருந்து தான், பாசுபத அஸ்திரத்தைப் பெற்றதாக கூறப்படுகிறது. நகுலமுனிவர் நீராடி வழிபட்டு, தனது கீரி முகம் நீங்கி நலம்பெற்ற சிறப்பு மிக்க தலம் இது. எனவேதான் இத்தலத்தை கீரிமலை என்றும், நகுலேஸ்வரம் என்றும் அழைக்கிறார்கள்.

இத்தலம் 19–ம் நூற்றாண்டிற்கு முன்பே கடல் கோள் சீற்றத்தினால் நீருக்கு அடியில் அமிழ்ந்து போன விவரத்தை அறிந்த யாழ்ப்பாணப் புலவர் ஆறுமுகநாவலர் எழுதிய கீரிமலைச் சிவன் கோவில் வரலாறு மூலம் இவ்வாலயத்தின் சிறப்பு வெளிவந்தது.

ஆலய அமைப்பு

ஆலயம் கிழக்கு முகமாய் நான்கு மாட வீதிகளைக் கொண்டும், மூன்று பிரகாரங்களைக் கொண்டும் விளங்குகின்றது. 117 அடி உயர ஒன்பது நிலை ராஜகோபுரம் 9 கலசங்களைத் தாங்கி, விண்ணை முட்டி நிற்கிறது. ஆலயத்தில் கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் நம்மை வரவேற்க, ஈசான்ய மூலையில் சித்தர் மூலம் உருவான சகஸ்ரலிங்கம் மற்றும் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில்   வசந்த மண்டபம் மற்றும் துர்க்கை சன்னிதி உள்ளன.

கருவறையில் இலங்கையின் பெரிய சிவலிங்கத் திருமேனியராக ஐந்தரை அடி உயர நகுலேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி அருளுகிறார். கருவறைச் சுற்றில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர் அமர்ந்துள்ளனர். சண்டிகேஸ்வரர் தனிச் சன்னிதி கொண்டுள்ளார்.

தெற்கு வாசலில் அன்னை நகுலாம்பிகை அம்பாள், நின்ற கோலத்தில் கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரை தாங்கியும், மேல் இரு கரங்களில் பாசம், அங்குசம் கொண்டும் அருள்காட்சி தருகின்றாள். பஞ்சலிங்கம், ஸ்ரீதேவி– பூதேவி சமேத மகாவிஷ்ணு, சரபேஸ்வரர், மகாலட்சுமி, வள்ளி– தெய்வானை சமேத சண்முகர் சன்னிதிகளும் அமைந்துள்ளன.

உள்பிரகாரத்தில் உற்சவமூர்த்திகள் அறை அமைந் துள்ளது. இதில் விநாயகர், பிரதோ‌ஷ மூர்த்தி, இலங்கையின் பெரிய வடிவிலான சோமாஸ்கந்தர் தனி அறையிலும், வழக்கத்திற்கு மாறாக கூப்பிய செஞ்சடையோடு காட்சிதரும் அபூர்வ நடராஜர் மகா   மண்டபத்தின் தனிச்சன்னிதியிலும் வீற்றிருக்கின்றனர்.

மாசிமாதம் மகாசிவராத்திரியை முன்னிட்டு 15 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. மகா சிவராத்திரியன்று காலை தேரோட்டம்  நடைபெறுகிறது. இதுபோல, பங்குனி– சித்திரையில், நகுலாம்பிகைக்கு 10 நாட்கள் பிரம்மோற்சவமும் சித்திரை ஒன்றாம் நாள் தேரோட்டமும் நடத்தப்படுகிறது.

ஆடி அமாவாசையன்று மாவைக்கந்தன் எழுந்தருளல், நவராத்திரி புரட்டாசி சனி, ஐப்பசியில் கேதார கவுரி விரதம், ஐப்பசி கடைசி வெள்ளிக்கிழமை எம சம்ஹார விழா, விநாயகர் சதுர்த்தி, பிரதோ‌ஷம், கிருத்திகை உள்ளிட்ட அனைத்து விழாக்களும் சிறப்போடு நடத்தப்படுகின்றது. இவ்விழாக்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டுச் செல்வார்கள்.

பலன் தரும் பரிகாரத்தலம்


இத்தலம் காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு இணையான தலமாகப் போற்றப்படுகிறது. இங்கே வந்து தலத் தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு சென்றால், அனைத்துவித தோ‌ஷங்களும் நீங்கி பலன் பெறலாம். இந்நாட்டில் உள்ள சிங்களவர்களும் வந்து செல்வது இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதேபோல, சனிக்கிழமைகளில் நீராடி வணங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது. சனிதோ‌ஷம் நீங்க, காலசர்ப்பதோ‌ஷம் நீங்க, பித்ருக்கள்  சாபம் நீங்க, தீர்த்தமாடி வழிபடுவது நல்ல பலனைத் தரும்.     மகப்பேறு பெற உகந்த தலம் இது. குழந்தை பெற்றவர்கள் தங்கள் குழந்தையைத் தத்து கொடுத்து, பின் காணிக்கை செலுத்தி குழந்தையை திரும்பப் பெற்றுக் கொள்வது இன்றும் நடைமுறையில் உள்ளது.

எண்ணற்ற  சைவப்பெருமக்கள் தங்கள் பித்ருக் கடன்களை கீரிமலைத்  தீர்த்தத்தில் செலுத்தி வருகின்றனர். அதன்பின் ஆலயம் சென்று மோட்ச தீபம்ஏற்றி, ஆத்ம  சாந்தி பிரார்த்தனை செய்து வேண்டுதலை, நிறைவு செய்கின்றனர்.

இந்த ஆலயத்தில் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சுவாமி தரிசனம்  செய்யலாம்.

அமைவிடம்

யாழ்ப்பாணம் மாவட்டம், தெல்லிப்பழை வட்டத்தில் நகுலேஸ்வரம் எனும் கீரிமலை அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து வடக்கே 400 கி.மீ., யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கே 19 கி.மீ., காங்கேயன் துறைமுகத்தில் தென்மேற்கே 3 கி.மீ., இளவாலையில் இருந்து கிழக்கே 1 கி.மீ., பலாலி விமான நிலையத்தில் இருந்து மேற்கே 6 கி.மீ., மாவிட்டபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது.

– பனையபுரம் அதியமான்

பஞ்சேஸ்வரம்

சிவபெருமானுக்காக இலங்கையைக் காக்க, ஐந்து திசைகளில் எழுப்பப்பட்ட பஞ்சேஸ்வரங் களில் ஒன்றாக நகுலேஸ்வரம் விளங்குகின்றது. வடக்கே யாழ்ப்பாணத்தில் நகுலேஸ்வரம், வடமேற்கே மன்னாரில் திருக்கேதீஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் திருகோணேச்சரம், மேற்கே புத்தளத்தில் முன்னேச்சுரம், தெற்கே மாத்துறையில் தொண்டீச்சரம் என ஐந்து சிவாலயங்கள், இலங்கை வேந்தன் ராவணனால் எழுப்பப்பட்டன. இதில் ஐந்தாவது தலம் கடலில் அமிழ்ந்துவிட்டது. அதற்கு சாட்சியாக நந்தி சிலை மட்டும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பதிலாக, தெய்வத்துறையில் சந்திரலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயம் எதிர்கொண்ட இன்னல்கள்

பதினேழாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் வசம் யாழ்ப்ப£ணம் பகுதி வந்த போது, ஆலயம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டது. உள்நாட்டு யுத்த காலமான, 1990–ம் ஆண்டு அக்டோபரில் தீபாவளி பண்டிகையையொட்டி, ஏராளமான பெண்கள் கேதார கவுரி விரத வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது விமானப்படை மற்றும் கடற்படையின் குண்டு மழைத் தாக்குதலால் மீண்டும் ஆலயம் பலத்த சேதம் அடைந்தது. அதன்பிறகு ஏழு ஆண்டுகளில் தொடர் முயற்சி மேற்கொண்ட, ஆலயத்தின் பிரதம குருவான ராஜ ராஜ ஸ்ரீ நகுலேஸ்வர குருக்கள் மற்றும் உலகளாவிய சைவப் பெருமக்களின் ஒத்துழைப்பால் 1998–ல் புனரமைப்பு பணி தொடங்கியது. 2012–ம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.



கீரிமலைத்  தீர்த்தம்

இத்தலத்தின் சிறப்பே தீர்த்தம் தான். பகீரதனின் முயற்சியால் பூமிக்கு கொண்டு வரப்பட்ட கங்கையின் துளிகள், இம்மண்ணில் விழ, அது புனித தீர்த்தமானது. பரமசிவன் பார்வதிக்காக உருவாக்கிய தீர்த்தம் இது என்றும் கூறுவார்கள். கீரிமலைத் தீர்த்தம், கண்டகித் தீர்த்தம், சாகர தீர்த்தம் என பலவாறு இந்தத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. நகுலமுனிவர் கீரி முகம் நீங்கியது, சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லியின் குதிரை முகம் நீங்கியது என பெருமை வாய்ந்த தீர்த்தம் இது. மாசிமகம், மகா சிவராத்திரி, ஆடி அமாவாசை நாட்களில் பஞ்சமூர்த்திகள், மாவைக்கந்தன் எழுந்தருள்வார்கள். ஆகையால்தான் இந்த தீர்த்தம் காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு இணையான மகத்துவம் பெற்று விளங்குகின்றது.

மேலும் செய்திகள்