ஆன்மிகம்
தலைமைப் பண்பு

கொள்கைகளுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்பவன் ஒருபோதும் சாதாரண மக்களை விட்டு விலகி இருக்க மாட்டான்.
“ஷைத்தான் மனிதர் களைத் தீமை செய்யும்படித் தூண்டு கிறான்; தீமைகளைச் செய்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறான். எனவே குற்றம் புரிபவர்களைத் திட்டுவதன் மூலம் நாம் அவர்களை ஷைத்தானின் பக்கம்- தீய சக்திகளின் பக்கம் தள்ளி விடுகிறோம்”

ஜாகிர் என்ற பெயருடைய ஒரு நபித்தோழர் இருந்தார். அழகற்றவரான அவர் மீது நபிகளார் அன்பு வைத்திருந்தார்கள். ஒருநாள் அவர் கடைத்தெருவில் தம் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் வந்த நபிகளார், அவர் பார்க்காத வண்ணம் அவருக்குப் பின்னால் சென்று அவரைக் கட்டிப் பிடித்தார்கள். அவர், “யாரது, என்னை விடுங்கள்” என்று கூறி விட்டு, திரும்பிப் பார்த்ததும் அவ்வாறு செய்தது நபிகள் நாயகம் அவர்கள் தான் எனத் தெரிந்து கொண்டவுடன், தம் முதுகை நபியவர்களின் மார்புடன் இணைத்துக் கொண்டார்.

அப்போது நபிகளார், “இந்த அடிமையை விலைக்கு வாங்குவோர் யார்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “இறைவனின் தூதரே! நீங்கள் என்னை விற்க முனைந்தால் என்னை எவரும் வாங்க மாட்டார்கள்” எனக் கூறியதும், நபிகளார், “இறைவனிடத்தில் நீர் விலை போகாதவர் அல்லர்; இறைவனிடம் உமக்கு அதிக விலை உண்டு” என்றார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்).

இந்தச் சம்பவத்தில் நமக்குப் பெரும் படிப்பினை உள்ளது. நாம் எவ்வளவு உயர்ந்தாலும் சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களை மதிக்கவும், நேசிக்கவும், அவர்களுடன் உறவாடவும் வேண்டும். ஒரு இயக்கமோ கட்சியோ தொடங்கப்படும் போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முதலில் தம்மை ஆர்வமாக இணைத்துக் கொள்பவர்கள் ஏழைகளும், அடித்தட்டு மக்களுமே. ஆனால் அவ்வியக்கம் வேர் விட்டு, கிளைகள் பரப்பி வளர்ந்த பிறகு, அவ்வியக்கத்தின் மூலம் பலன்களை அனுபவிக்க வசதி படைத்தவர்களும், பதவி ஆசை கொண்டவர்களும் அதில் இணைவார்கள். அவ்வேளையில், அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட சாமானியர்கள் மெல்ல ஓரங்கட்டப்படுவார்கள். தாம் வளர்த்த இயக்கத்தின் தலைவரைச் சந்திப்பதே பெரும்பாடாக ஆகி விடும். தலைவர்களும் ஏழைகளை நேசிப்பதுபோல பாவனை செய்து, சில நாடகங்களை நடத்துவார்கள்.

ஆனால் கொள்கைகளுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்பவன் ஒருபோதும் சாதாரண மக்களை விட்டு விலகி இருக்க மாட்டான். அதைத்தான் நபி களாரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. நபிகள் நாயகம் மதீனாவின் ஆட்சித் தலைவராக ஆன பின்னரும் ஏழைகளை மறக்கவில்லை.

தெருவில் பொருட்களை விற்றுக் கொண்டிருந்த ஒரு அடிமையை நபிகள் நாயகம் கட்டி அணைத்ததும், அவரிடம் நகைச்சுவையாகவும், அன்பாகவும் நடந்து கொண்ட விதம், ஒரு தலைவர், ஒரு சாதாரணத் தொண்டனையும் எப்படி மதிக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த இலக்கணமாகத் திகழ்கிறது.

“ஏழைகளை மதியுங்கள்! நேசியுங்கள்! ஏழைகளையும், தேவையுள்ளோரையும் உங்களுக்கு நெருக்கமாக ஆக்கிக் கொண்டால் இறைவன் உங்களை அவனுக்கு நெருக்கமானவர்களாக ஆக்கிக் கொள்வான்” என்ற அவரது வாக்கை செயல்படுத்தும் விதத்தில் நபிகளாரின் வாழ்வு அமைந்திருந்ததைப் பார்க்கிறோம்.

வெறுக்க வேண்டியது குற்றங்களையே! குற்றவாளிகளை அல்ல!

* நபித் தோழர்களில் ஒருவர் குடிப்பழக்கம் உள்ளவராக இருந்தார். அதற்குத் தண்டனையாக, நபிகள் நாயகத்திடம் இருந்து கசையடிகளைப் பெற்றார். ஆனால் மீண்டும் குடித்து, மீண்டும் கசையடிகளைப் பெற்றார். அவ்வேளையில், இன்னொரு நபித் தோழர், அவருக்கெதிராக இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தித்தார்: “இறைவா! இவரைச் சபிப்பாயாக! எத்தனை தடவை இவர் இவ்வாறு தண்டனை பெறுவார்”

இதனை செவியுற்ற நபிகளார், “அவ்வாறு அவரைச் சபிக்காதீர்கள். அவர் இறைவனையும், இறைத்தூதரையும் நேசிக்கிறார்; அவருடைய விஷயத்தில் ஷைத்தானுக்கு உதவி செய்யாதீர்கள்; ‘இறைவா! இத்தோழரை மன்னிப்பாயாக; அவருக்குக் கருணை காட்டுவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்” (நூல்: புகாரி)

பொதுவாக நாம் தவறு செய்பவர் களைக் கண்டால் வெறுக்கிறோம்; திட்டுகிறோம்; இந்தத் தண்டனையும், அவமானமும் அவனுக்குத் தேவை தான் என்றும் சொல்கிறோம். ஆனால் பிரச்சினையின் இன்னொரு பக்கத்தைப் பார்க்க தவறி விடுகிறோம். தவறைச் செய்வதற்கான காரணம் என்ன? தவறைச் செய்ய அவனைத் தூண்டியது எது? அவனைத் திருத்துவது எப்படி? என்பனவற்றை மறந்து விடுகிறோம். எல்லோரும் இப்படி அவனைச் சபித்தால், அவனைத் திருத்துபவர் யார்? எல்லோரும் சேர்ந்து அவனைத் திட்டினால், அவன் தவறுகளின்பால் மேலும் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இதனைத்தான் நபிகள் நாயகம், “அவனுக்கு எதிராக ஷைத்தானுக்கு நீங்கள் உதவி செய்யாதீர்கள்” என்றார்கள். ஷைத்தான் மனிதர்களைத் தீமை செய்யும்படித் தூண்டுகிறான்; தீமைகளைச் செய்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறான். எனவே குற்றம் புரிபவர்களைத் திட்டுவதன் மூலம் நாம் அவர்களை ஷைத்தானின் பக்கம்- தீய சக்திகளின் பக்கம் தள்ளி விடுகிறோம்.

நபிகள் நாயகம் அந்தக் குடிகாரன் மீது இரக்கம் கொண்டு அவனுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரி, அவனுக்குக் கருணை காட்டுமாறு பிரார்த்தித்ததைப் பார்த்தோம். எனவே நாம் வெறுக்க வேண்டியது குற்றங்களையே! குற்றவாளிகளை அல்ல!

குற்றவாளிகளைத் திட்டுவது எளிது; திருத்துவதே கடினம். ஆனால் நாம் திட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறோமே தவிர, திருத்துவதற்கு முயற்சி செய்வதில்லை. அவர்களை அவமானப்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை, அவர்களைத் திருத்துவதில் காட்டுவதில்லை. குற்றவாளிகளிடம் நாம் நடந்து கொள்ளும் இந்த முறை, அவர்களை மேலும் குற்றத்தின் பக்கம் தள்ளி விடுவதாக அமைந்து விடுகிறது. குழியில் விழுந்து விட்ட மனிதனை, கை கொடுத்துத் தூக்கி விடுவதே நம் கடமையாகும். மாறாக மேலும் அவனைக் குழியில் தள்ளி மண்ணைப் போடுவதாக நமது செயல்கள் அமைந்து விடக்கூடாது.

* பிறர் குறைகளைத் தேடித் திரியாதீர்கள்.

* குறைகளைப் பகிரங்கப்படுத்தாதீர்கள்.

* பிறர் குறைகளைக் கண்டு மகிழாதீர்கள்.

“எவர் பிறரின் குற்றங்களைத் தேடுகிறார்களோ, அவர்களின் குறைகளை இறைவன் தேடுகிறான். எவருடைய குறைகளை இறைவன் தேடுகிறானோ, இறைவன் அவனைக் கேவலப்படுத்தி விடுவான். அவர் தம் வீட்டில் மறைந்திருந்தாலும் சரியே” என்ற நபிகள் நாயகத்தின் எச்சரிக்கையை மனதில் வையுங்கள். (நூல்: திர்மிதி)

-டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்