இறைவனின் நிழலில் அந்த ஏழு நபர்கள்

வெயிலின் கொடுமையை வெறுப்பவர் உண்டு. நிழலை விரும்பாதவர் எவரேனும் உண்டா? அதிலும் குறிப்பாக இறைவன் தரும் நிழலை விரும்பாதவர் யார் இருக்கிறார்?

Update: 2018-01-19 00:30 GMT
உலகில் கிடைக்கும் சாதாரண நிழலை பெறுவதற்காக ஓடி இடம் தேடும் நம்மில் பலர், இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் அந்த நிழலை பெறுவதற்காக நாம் என்ன முயற்சிகள் செய்தோம் என்று ஒரு நொடி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

‘மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு மிகவும் சமீபமாக இருக்கும். சூரியனுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு மைல் தூரம் தான் இடைவெளி இருக்கும். (அதன் வெப்பத்தால்) மக்கள் தங்களுடைய செயல்களுக்குத் தக்கவாறு வியர்வையில் மூழ்கி இருப்பார்கள். ஒருவரின் செயல் எந்தளவு தீயதாக இருக்குமோ, அந்தளவுக்கு வியர்வை அதிகமாக இருக்கும். சிலரின் வியர்வை கரண்டைக்கால் வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை முழங்கால் வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை இடுப்பு வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை வாய் வரை இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் தமது வாயின் பக்கம் கையால் சமிக்கை செய்து காட்டி கூறுவார்கள்’. (அறிவிப்பாளர்: மிக்தாத் (ரலி), நூல் : முஸ்லிம்)

பூமியில் இருந்து ஒரு மைல் தூரத்தில் சூரியன் உதிக்கும் மறுமை நாளில் சூரிய வெப்பத்தில் இருந்தும், வியர்வையில் இருந்தும் மனிதர்கள் தப்பிக்க ஒரே வழி, இறைவனுடைய நிழல் மட்டுமே. அப்போது வேறெந்த நிழலும் இருக்காது. மரங்கள் கருகிவிடும். மலைகள் தூள் தூளாக ஆகிவிடும். பூமியும் தூள் தூளாகத் தகர்க்கப்படும் என்று திருக்குர்ஆனும், நபிமொழி போதனைகளும் பின்வருமாறு கூறுகிறது:

‘இன்னும், பூமியும், மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவை இரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால், அந்த நாளில் தான் நிகழவேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்’ (69 : 14, 15)

‘வானமும் பிளந்து, அந்நாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்துவிடும்’ (69 : 16)

மேலும், ஒரு மைல் தொலைவில் சூரியன் மிகச் சமீபமாக இருக்கும் நேரத்தில் அதன் வெப்பத்தால் கடல்களின் நிலை எப்படி இருக்கும்? என்பதை திருக்குர்ஆன் கூறுவதை பார்ப்போம்.

‘பொங்கும் கடலின் மீது சத்தியமாக’ (52:6), ‘கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது’ (82:3), ‘கடல்கள் தீ மூட்டப்படும் போது’ (81:6).

‘மறுமை நாள் நெருங்கும்போது கடல் நீர் கொந்தளித்து கடலில் ஒரு சொட்டு நீர் கூட இருக்காது’ என இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) கூறுகிறார். (புகாரி)

இத்தகைய சிரமமான சமயத்தில் இறைவனின் நிழல் இளைப்பாறுவதற்காக தேவைப்படுகிறது. அத்தகைய இறைவனின் நிழல் ஏழு நபர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த 7 நபர்கள் யார் தெரியுமா?

1) நீதிமிக்க ஆட்சியாளர்: ‘ஓர் அடியானுக்கு குடிமக்களின் பொறுப்பை இறைவன் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்’ என நபி (ஸல்) கூறினார்கள் (அறிவிப்பாளர் : மஅகில் (ரலி), நூல்: புகாரி)

2) இறைவழிபாட்டில் வளர்ந்த இளைஞன்: ‘மறுமை நாளில் நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை எந்த ஒரு அடியானின் இரண்டு கால்களும் அந்த இடத்தைவிட்டு நகராது. அவை: அவன் தமது ஆயுளை எவ்வாறு கழித்தான், அவன் தமது வாலிபத்தை எவ்வாறு செலவழித்தான், அவன் பொருளை எவ்வாறு சம்பாதித்து, எவ்வாறு செலவு செய்தான், அவன் கற்றபடி எவ்வாறு அமல் செய்தான்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : முஆத்பின் ஜபல் (ரலி)  நூல் : பைஹகீ)

3) பள்ளிவாசலுடன் தொடர்புடைய இதயமுடையவர்: ‘ஊர்களில் இறைவனுக்கு மிகவும் பிடித்தமானது, அதில் அமைந்திருக்கும் பள்ளிவாசல்களாகும். ஊர்களில் இறைவனுக்கு மிகவும் வெறுப்பு தரக்கூடியது அங்கு அமைந்திருக்கும் கடைவீதிகளாகும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (நபிமொழி)

4) இறைவனுக்காகவே நேசித்து, அவனுக்காகவும் பிரியும் இருவர்: ‘எவர் அல்லாஹ்விற்காக மட்டும் பிறருக்கு கொடுக்கிறாரோ, மேலும், அல்லாஹ்விற்காக மட்டும் கொடுப்பதை நிறுத்துகிறாரோ, மேலும் அவரை அல்லாஹ்விற்காக மட்டும் நேசிக்கிறாரோ, மேலும் அவர் அவரை அல்லாஹ்விற்காக மட்டும் வெறுக்கிறாரோ, அத்தகைய மனிதரின் இறை நம்பிக்கை பரிபூரணம் அடைந்து விட்டது’ என நபி (ஸல்) கூறினார்கள். (நூல் : திர்மிதி)

5) பாதுகாக்கும் பொறுப்பு: ‘எவர் தமது இரு தொடைகளுக்கு மத்தியிலுள்ள மறைவிடத்தையும், தமது இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ள நாவையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறாரோ, அவருக்கு சொர்க்கம் உண்டு என்பதை நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸத் (ரலி), நூல்: புகாரி)

6) தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் அறியாத வகையில் ரகசியமாகத் தர்மம் செய்தவர்: ‘தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், ரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்’ (திருக்குர்ஆன் 2:274).

7) தனிமையில் இறைவனை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதர்: ‘இரண்டு கண்களை நரகம் தீண்டாது, 1) இறையச்சத்தால் அழுத கண், 2) இறைவழியில் விழித்திருந்து பாதுகாத்த கண்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : திர்மிதி)

மறுமையில் நிழலே இல்லாத அந்த நாளில் இறைவனுடைய நிழலில் இளைப்பாறும் பாக்கியமும், சுவன பாக்கியமும், சொர்க்கத்தின் சகலவிதமான பாக்கியங்களும், நற்பேறுகளும் இந்த ஏழு அம்சங்கள் நிறைந்த மனிதர்களுக்கு கிடைக்கும்.

நாமும் இந்த ஏழு அம்சங்களைப் பெற்ற பாக்கியவான்களாக மாற, மாசற்ற முறையில் முயற்சிக்க வேண்டும், ஆமீன்.

–மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி.

மேலும் செய்திகள்