ஆன்மிகம்
ஆற்றில் மிதந்து வந்த வில்லியாண்டவர்

குழந்தை வரம் வேண்டுவோர் இறைவன் சன்னிதியில் மரத்தால் ஆன தொட்டிலைக் கட்ட அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
அணைக்கரை. இந்த ஊரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஆற்றில் ஒரு குழந்தை மிதந்து வந்தது.

“என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அந்த மழலையின் குரல் கேட்கவே, ஊர் மக்கள் ஒன்று கூடினர். ஆற்றில் மிதந்து வரும் குழந்தையைப் பார்த்தனர், பதறினர். குழந்தையை எப்படி காப்பாற்றுவது? என்று புரியாமல் மக்கள் திகைத்து நிற்க, ஒரு அசரீரி ஒலித்தது.

“குழந்தையைக் காப்பாற்றுங்கள். நீங்கள் நடந்தால் நீர் முன்னே வற்றும். பின்னே பெருகும்” என்ற அந்த அசரீரியின் குரலை கேட்ட மக்கள் ஆற்றில் இறங்கினர்.

அவர்கள் ஆற்றில் இறங்கியதும் நீர் முன்னே வற்றியது, பின்னே பெருகியது. குழந்தையைக் காப்பாற்றிய மக்களில் ஒருவர் அக்குழந்தையை தோளில் சுமந்தபடி ஊரை நோக்கி நடந்தனர்.

குழந்தையின் சுமை தாங்காது அக்குழந்தையை அருகே இருந்த ஏரழஞ்சி மரத்தடியில் வைத்தனர். அக்குழந்தை தெய்வக் குழந்தை என உணர்ந்த மக்கள், அதை அங்கேயே விட்டு விட்டு அகன்றனர். அக்குழந்தையே வில்லியாண்டவர் என்னும் திருநாமத்தோடு மக்களை காத்து வருகிறார்.

அவர் அருள்பாலிக்கும் ஆலயமே அருள்மிகு வில்லியாண்டவர் திருக்கோவில்.

இறைவனைக் காண ஆலயத்திற்கு வந்த நல்ல நாயகி என்ற பெண் அங்கேயே தங்கிட, அவளைத் தேடி பெண்ணின் உறவினர்கள் ஆலயத்திற்கு வந்தனர்.

“கவலை வேண்டாம். இவள் என் தென்புறத்தே கோவில் கொண்டு ‘நல்ல நாயகி அம்மன்’ என்னும் பெயரோடு விளங்குவாள்” என அசரீரி ஒலிக்க, அதன்படி ஆலயம் அமைக்கப்பட்டு விட்டது.

ஆலய அமைப்பு

ஆலயத்தின் வெளியே தென்புறம் வெள்ளங்காத்த விநாயகர் ஆலயமும், வடபுறம் அகோர வீரபத்ரர் திருக்கோவிலும் உள்ளன. அடுத்த தாக தூண்டில் கருப்பன் சன்னிதி உள்ளது. ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் விஸ்தாரமான பிரகாரம் உள்ளது. வலதுபுறம் பைரவர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அடுத்து உள்ள மகாமண்டபத்தை அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் காவல் நிற்க, இடதுபுறம் பிள்ளையார் மற்றும் வலதுபுறம் ஆதி வில்லியாண்டவர் திருமேனிகள் உள்ளன.

கருவறையில் இறைவன் வில்லியாண்டவர், பூரணை புஷ்கலை சமேதராக அருள்பாலிக்கிறார். வலதுபுறம் உள்ள அம்மன் சன்னிதியின் அர்த்த மண்டப வாசலில் துவார பாலகிகள் கம்பீரமாக நிற்க, கருவறையில் இறைவி நல்ல நாயகி தன் தோழியோடு அருள்பாலிக்கிறாள்.

இக்கோவிலில் உள்ள சுதை வேலைபாடுகளைக் காணும் போது இந்த ஆலயம் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முதலை சவாரி

கொள்ளிடத்தில் ஆங்கிலேயர் அணை கட்டிய காலத்தில் இக்கோவிலின் வடமேற்கே உள்ள கோடலி கருப்பூர் என்னும் ஊரிலிருந்து பூஜை பொருட்களுடன் ஆலய பூசாரி கொள்ளிடம் ஆற்றில் உயிருடன் இருக்கும் முதலையின் மேல் பயணம் செய்து ஆலயத்துக்கு வருவாராம். பூஜையை முடித்துவிட்டு அதே முதலைமேல் அமர்ந்து கருப்பூர் துறைக்கு திரும்புவாராம். சுவாமிக்கு படைத்த நைவேத்தியத்தையும் முதலைக்கு உணவாகக் கொடுப்பாராம்.

இதை மெய்பிக்கும் வகையில் ஆலயத்தின் தென்புறத்தில் கர்ப்பக் கிரக கோபுரத்தின் மேல் பகுதியில் முதலைச் சுதையின் மீது பூரணை - புஷ்கலை சமேதராக வில்லியாண்டவர் காட்சி தருவதைக் காணலாம்.

பிரார்த்தனைகள்

குழந்தை வரம் வேண்டுவோர் இறைவன் சன்னிதியில் மரத்தால் ஆன தொட்டிலைக் கட்ட அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். திருமணம் நடந்தேற மணப்பெண் அல்லது மணமகன் ஜாதகத்தை இறைவனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து தருகின்றனர். அவர்கள் திருமணம் விரைந்து நடக்கிறது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

தங்களது உடைமைகளை பறிகொடுத்த மக்கள் தங்களது வேதனையை ஒரு சீட்டில் எழுதி வீரபத்ர சுவாமியின் கரத்தில் கட்டி ஆராதனை செய்தால் களவு போன பொருள் திரும்ப கிடைத்துவிடுவது நிஜம் என்கின்றனர் ஊர்மக்கள்.

கோவிலைப் புதுப்பிக்கும் போது இறைவன் கருவறை அருகே ஒரு பெரிய நாகம் பொக்கலின் இயந்திரத்தில் அடிபட்டு இறக்க கோவிலுக்கு வெளியே அந்த நாகநாதருக்கு தனி ஆலயம் அமைத்து வழிபடுகின்றனர். ஆலயத்தின் தல விருட்சம், ஏரழஞ்சி மரம்.

கொள்ளிடம் ஆற்றை தன் கழுத்தில் மாலை போல் அணிந்து வெள்ள அபாயத்திலிருந்து அனைவரையும் காத்து நிற்கும் வில்லியாண்டவருக்கு ‘அனை காத்த குட்டியாண்டவர்’ என்ற பெயரும் உண்டு.

பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் இந்த ஊருக்கும் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கும் காவல் தெய்வமாய் விளங்குவது உண்மையே.

கும்பகோணம் - சென்னை நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது அணைக்கரை.