சீனிவாச திருக்கல்யாணம் இன்று நடக்கிறது

சென்னையில் நடந்து வரும் இந்து ஆன்மிக கண்காட்சியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் இன்று நடக்கிறது.

Update: 2018-01-28 22:09 GMT
சென்னை,

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 9-வது இந்து ஆன்மிக கண்காட்சி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் விருக்ச மற்றும் நாக வந்தனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி மரங்களையும், வனங்களையும் பேணி பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் 1,008 தென்னை மரக்கன்றுகளையும், 1,008 நொச்சி செடிகளையும், 1,008 பள்ளி மாணவ-மாணவிகள் பூஜை செய்து வழிபட்டனர். நாக வந்தனம் எனும் பூஜையும் நடத்தப்பட்டது.

மாநில சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் மதிப்பீடு ஆணைய தலைவர் டாக்டர் என்.கிருஷ்ணகுமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில், “நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு 33 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் 23 சதவீதம் தான் உள்ளது. காடுகளை பாதுகாக்கவும், அதிகரிக்கவும் மாணவர் சமுதாயம் முன்வர வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில் விவேகானந்தா பள்ளிகளின் மாணவ-மாணவிகள் வன விலங்குகளை பாதுகாத்தல் தொடர்பான நாடகங்கள், நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினர். பின்னர் மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கண்காட்சி வளாகத்தில் தமிழ்நாடு குறும்பர் பேரவை சார்பில் குறும்பர்களின் ஆன்மிக கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தர்மபுரி மாவட்டத்தில் இருந்து குறும்பர் இன தெய்வங்களின் வெண்கல சிலைகள் கொண்டு வரப்பட்டன.

இவற்றை குறும்பர் இனத்தவர்கள் தலையில் சுமந்தபடி மேளதளம் முழுங்க மேடைக்கு கொண்டு வந்தனர். 10 பெண்கள் பாடல்களை பாட 40 ஆண்கள் இசைக்கருவியை இசைத்து, தலையில் தேங்காய் உடைத்து பிரமிக்கவைக்கும் வகையில் நிகழ்ச்சியை நடத்தினர்.

தொடர்ந்து செவரப்பூண்டி ராஜகோபாலின் காட்சியம்மன் நாடகக்குழு சார்பில் ‘கண்டன் கார்கோடகன்’ தெருக்கூத்து நடந்தது. கண்காட்சியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் கே.பாண்டியராஜன், நடிகர்கள் விவேக், கிட்டி உள்பட பலர் பார்வையிட்டனர். கண்காட்சி வளாகத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங் கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கோவில் ரதங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு 1,200 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவு நாளான இன்று (திங்கட்கிழமை) காலை பசுக்களுக்கும், யானைகளுக்கும் பூஜை நடத்தப்படுகிறது. தொடர்ந்து துளசி வந்தனம் நடக்கிறது. மாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை அறங்காவலர்கள் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, ஆர்.ராஜலட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்