உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

Update: 2018-01-29 23:15 GMT
திசையன்விளை,

தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அமைந்துள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலும் ஒன்றாகும்.

இக்கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடை பெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா, கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர் வீதிஉலாவும், இரவில் சுவாமி சந்திரசேகரர்- மனோன்மணி அம்பிகையுடன் கஜ வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், வெற்றிவேர் சப்பரம் உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மேலும் இரவில் சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, தோல் பாவை கூத்து, பரதநாட்டியம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

9-ந் திருநாளான நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. 1-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 10 மணிக்கு தெப்ப திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் செய்து உள்ளார்.

மேலும் செய்திகள்