கண்ணனின் புல்லாங்குழலில் ஏகலைவன் கட்டைவிரல்

மகாபாரதத்தில் சொல்லப்படும் அனைத்து உப கதைகளிலும் வாழ்வியலுக்கான அடிப்படை அம்சங்கள் மனதில் எளிதாக பதியும்படி சொல்லப்பட்டிருக்கும்.

Update: 2018-01-30 07:09 GMT
அக்கால இந்திய பண்பாட்டையும், மேன்மையையும் விளக்கும் பல்வேறு கதைகளும், கதை மாந்தர்களும் இடம் பெற்ற இதிகாசமாக இருப்பதால் மாறுபட்ட பல கதைக்களங்களை காண முடிகிறது. அந்த வகையில் வரக்கூடிய இக்கதை ஆன்மிக சான்றோர் ஒருவரால் குறிப்பிடப்பட்ட தாகும்.

பஞ்ச பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள் ஆகியோர் தங்களது மாணவ பருவத்தில் துரோணரிடம் தனுர் வித்தை என்ற வில் வித்தையை கற்று வந்தனர். அவர்களில் தலை சிறந்த மாணவனாகவும், வில் வித்தையில் சிறந்தவனாகவும் அர்ச்சுனன் திகழ்ந்தான். ஒரு சமயம், மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, விளையாட்டாக தங்களுக்கு தெரிந்த வித்தைகள் பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு நாய் குரைத்துக் கொண்டே ஓடி வந்தது. அதைக் கண்ட துரியோதனன், அர்ச்சுனனைக் கிண்டல் செய்யும் விதத்தில், ‘அர்ச்சுனா, நீ பெரிய வில்வித்தை நிபுணன் என்றால் இந்த நாயிடம் உன்னுடைய திறமையைக் காட்ட முடியுமா..?’ என்று கேட்டான்.

உடனே அர்ச்சுனன் அந்த நாயின் மேல் ஓர் அம்பை எய்தவுடன் அது பிரிவாக பிரிந்து, தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த நாயை வீழ்த்தியது. பாண்டவர்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். அப்போது, அவர்கள் முன்னால் வேறொரு நாய் உடம்பில் அம்பால் துளைக்கப்பட்ட ஆயிரம் ஓட்டைகளுடன் ஓடி வந்தது. ஆனால், அந்த நாய் எந்த வித வேதனையும் அடையாமல் அவர்கள் எதிரே ஓடிச்சென்றது. அர்ச்சுனனை சிறந்த வில்வீரன் என்று நினைத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனது அம்பைப் போல் நூறு மடங்கு சக்தி உள்ள அம்புகளால் தாக்கப்பட்ட ஒரு நாய் உயிருடன் ஓடுவதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

விஷயத்தை அறிந்த துரோணருக்கும், அந்த விசித்திர அம்பை எய்த திறமைசாலி யார் என்று தெரியவில்லை. அவர் தனுர் வேத நுட்ப முறையில் ஒரு விசேஷ அஸ்திரத்தை கிழக்கு திக்கு நோக்கி எய்தார். அது, சம்பந்தப்பட்ட ஒரு இடத்தில் அம்பு எய்தவரின் பெயர், குலம், கோத்திரம், ஆச்சாரியார் போன்ற அனைத்து விவரங் களையும் சேகரித்துக் கொண்டு வரும் தன்மை பெற்றது.

சில நொடிகளில் சகல விவரங் களுடன் அந்த அஸ்திரம் துரோணாச்சாரியார் முன் வந்து விட்டது. அந்த திறமைசாலி யார் என்று எல்லையில்லா ஆர்வத்துடன் அனைவரும் பார்த்தனர். அந்த நாயின் மேல் அஸ்திரம் எய்தவன் ஏகலைவன். அவனுடைய தனுர் வேத குரு துரோணர் என்ற விவரங்கள் அஸ்திரம் மூலம் ெதரிய வந்ததும் துரோணர் உள்பட அனை வரும் திடுக்கிட்டனர். அது நாள் வரை துரோணர் ராஜகுமாரர்களுக்கு மட்டும்தான் குரு என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த புது எதிரி யார் என்ற கேள்வியுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

துரோணாச்சாரியாரின் நிலை மிகவும் தர்ம சங்கடமாக ஆகி விட்டது. அவர் குறிப்பிட்ட வில்லாளி அங்கு வரவேண்டும் என்பதற்காக மற்றொரு விசேஷ அஸ்திரத்தை எய்தார். அதன் அடிப்படையில் அவர்கள் முன்னால் ஏகலைவன் வந்துவிட்டான். அவனைக் கண்டு அதிசயித்ததோடு, அவன் கூறிய செய்தி அவர்களை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. அதாவது, துரோணரை மானசீக குருவாக ஏற்று அவன் அனைத்து வில் வித்தை நுட்பங் களையும் கற்றுத் தேர்ந்தான் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை.

அப்போது வானத்தில் ஓர் ஒளிக் கீற்று தோன்றியதை தொடர்ந்து கால பைரவர் அங்கே பிரசன்னமானார். அனைவருக்கும் தன்னுடைய ஆசியை வழங்கிய கால பைரவர் பேசினார்.

‘ஏகலைவன் தனுர் வேதம் மட்டுமல்லாது குரு பக்தியிலும் சிறந்தவன். குருபக்தி மற்றும் தனுர் சாஸ்திரத்தில் அவனுக்கு நிகர் யாருமில்லை. அவனுடைய தனுர் சாஸ்திர தேர்ச்சியை உங்கள் முன் காட்டுகிறேன்’ என்று கூறி, அர்ச்சுனன் அஸ்திரத்தால் இறந்த நாயை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்ய ஆணை இட்டார்.

உடனே ஏகலைவன் ஓர் அஸ்திரத்தை நாயை நோக்கி எய்தான். அது 8,000 அஸ்திரங்களாக பிரிந்து எட்டு திக்குகளிலும் சென்று, உயிரை மீட்கும் மூலிகைகளை கொண்டு வந்து இறந்த நாயின் மேல் தூவியதும், நாயின் உடலில் இருந்த பத்து ஓட்டைகளும் மறைந்தன. நாயும் தூக்கம் கலைந்து எழுந்ததுபோல வாலை ஆட்டியபடி அங்கிருந்து ஓடி மறைந்து விட்டது.

பின்னர் ஏகலைவனின் கட்டை விரலை துரோணர் குரு தட்சணையாகப் பெற்றது அனைவரும் அறிந்ததுதான். ஏகலைவனின் கட்டை விரலை குரு தட்சணையாகப் பெற்ற துரோணர் அதை ஒரு பொக்கிஷமாகப் போற்றி, ஒரு தாயத்தில் மறைத்து வைத்து தனது கழுத்தில் கட்டிக் கொண்டார். இதன் பின்னால் உள்ள தேவ ரகசியம் எவருக்கும் தெரியாது. அதாவது குரு தட்சணையாகப் பெற்ற பொருள் குருவின் உயிரைக் காக்கும். இந்த ரகசியத்தை அறிந்தவர் கிருஷ்ண பரமாத்மா ஒருவர்தான்.

பாரதப்போரில் துரோணர் கவுரவர்கள் பக்கம் நின்று போரிட்ட நிலையில் தர்மத்தை காக்க அவரை மாய்க்க வேண்டும். அவர் குரு தட்சணை என்ற தர்ம கவசத்தை தன்னுடைய கழுத்தில் அணிந்து கொண்டிருக்கும் நிலையில் அவரை யாராலும் வெல்ல முடியாது.

தர்மத்தை நிலை நாட்ட முயற்சிப்பவரை தர்மம் அவரை காப்பாற்றும் என்ற வேத வாக்கின்படி கிருஷ்ணருக்கு தர்ம தேவதை துரோணரை வீழ்த்தும் உபாயத்தை அவர் காதில் சொன்னது. அதன்படி ஒரு முதியவர் வேடத்தில் கிருஷ்ணர் துரோணரிடம் சென்றார்.

‘சுவாமி, என்னுடைய ஒரே பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இப்போது ஒரு வரன் அமைந்திருக்கிறது. ஆனால், மாங்கல்யம் வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. நீங்கள்தான் கருணை கூர்ந்து உதவி செய்ய வேண்டும். உங்களால் முடியாது என்று சொல்லிவிட்டால் நான் உயிரை விடுவதைத் தவிர வேறு வழி இல்லை’ என்று சொல்லி விட்டு துரோணரின் கழுத்தில் தொங்கிய தாயத்தையே அந்த முதியவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட துரோணர், முதியவரின் யாசகத்தை நிராகரிக்க முடியாமல், மன வேதனையுடன் கழுத்தில் இருந்த தாயத்தை கழற்றி அவரது கைகளில் கொடுத்து, ‘ஐயா, பெரியவரே, இது மிகவும் மதிப்பு வாய்ந்த தங்கத் தாயத்து. இதை அப்படியே உங்கள் மகளுக்கு மாங்கல்யமாக அளித்து திருமணத்தை நடத்தி விடுங்கள்’ என்று கூறி மானசீகமாக மணமக்களை போர் முனையில் இருந்தே ஆசீர்வதித்தார்.

வந்த வேலை முடிந்தவுடன் முதியவரான கிருஷ்ணர் துரோணருக்கு வணக்கம் செலுத்தி விட்டு திரும்பினார். துரோணரிடமிருந்து பெற்ற ஒப்பற்ற பரிசான, குரு பக்திக்கு உதாரணமான ஏகலைவனின் கட்டை விரலை தன்னுடைய புல்லாங்குழலில் பதித்து வைத்துக்கொண்டார். அதன் மூலம் குரு பக்திக்கு உரிய மரியாதையையும், குருவை போற்றும் உத்தம சீடனின் மேன்மையையும் அனைவருக்கும் உணர்த்தினார்.

-ஸ்ரீஜானகிராம்

மேலும் செய்திகள்