திருமாலின் தரிசனம்

திருமால் ஸ்தாபித்த சிவலிங்கம் தென் கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. இது பேரூர் கோவிலில் இருந்து தென்திசையில் அமைந்து உள்ளது.

Update: 2018-02-07 07:39 GMT
‘ஆஹா...ஆஹா..! அற்புதம் சங்கரா.. சிவ சங்கரா... ' என்று பக்தி பெருக்கினால் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருக மனம் மகிழ்ந்தார் திருமால்.

‘எம்பெருமானே! தங்கள் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?' என்று ஆதிசேஷன் கேள்வி கேட்ட பிறகு சுயநினைவுக்கு வந்தார் திருமால்.

‘ஆதிசேஷா! அந்த சங்கரனின் திருநடன தரி சனத்தை தரிசிக்கும் பேறு பெற்றேன். அதனால் தான் என்னையறியாமல் கண்கள் கலங்குகின்றன' என்றார்.

‘எம்பெருமானே! தாங்கள் தரிசித்த அந்த பரமனின் திருநடன காட்சியை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கு தங்கள் திருவருள் வேண்டும்’ என்று வேண்டினார் ஆதி சேஷன்.

‘அப்படியே ஆகட்டும். மேரு மலையை நோக்கி தவம் இரு. பலன் கிடைக்கும்’ என்று திருமால் அருள்பாலித்தார். அதை தொடர்ந்து ஆதிசேஷன், மேருமலையை நோக்கி கடும் தவம் இருக்க, சிவன் தோன்றி, தில்லையம்பலத்தில் தனது தரி சனத்தை காண்பாய் என்று அருள்பாலித்தார்.

இதையடுத்து அத்திரி முனிவர் பத்தினியாகிய அனசூயையிடம் பதஞ்சலி முனிவராக ஆதிசேஷன் அவதரித்தார். பின்னாளில், வியாக்கிரபாத முனிவருடன் சேர்ந்து பதஞ்சலி முனிவர் அந்த பரமனின் திருக்கூத்தை கண்டு தரிசிக்க தவத்தில் ஆழ்ந்தார்.

இது பற்றி அறிந்த திருமால் அந்த தில்லையம்பலவாணனின் திருக்கூத்தை கண்டு தரிசிக்க விரும்பி கயிலாயம் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். அதற்கு அவர், ‘தில்லை அம்பலத்தில் பதஞ்சலி, வியாக்கிரபாதர் பொருட்டு அவர்களுக்கு அருளினோம். ஆகையால் தட்சிண கயிலாயம் சென்று மேலை சிதம்பர தரிசனத்தை காண ஏற்கனவே காலவமுனிவரும், காமதேனுவும் தவம் இருக்கிறார்கள். நீங்களும் அங்கு சென்று கோமுனியாக தவம் இருந்தால் அங்கே எமது வெள்ளியம்பல நடன தரிசனத்தை யாம் காட்சி தருவோம்’ என்று அருள்பாலித்தார்.

இதை தொடர்ந்து திருமால்.. கோமுனியாக மரவுரி (துறவி போல்) எடுத்து சடைமுடி தரித்து நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு ‘நமசிவாய' என திருவைந்தெழுத்தை சிந்தித்து கொண்டே ஆதிபுரியை அடைந்தார். அங்கு ஓடிய காஞ்சிமா நதியில் புனித நீராடி வெள்ளிமலை மீது சென்று அங்கு எழுந்தருளிய அம்மையும், அப்பனையும் தரிசித்து விட்டு அங்கிருந்து தென்திசையில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து திருக்கூத்தை தரிசிக்கும் நாளை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார் திருமால்.

திருமால் ஸ்தாபித்த சிவலிங்கம் தென் கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. இது பேரூர் கோவிலில் இருந்து தென்திசையில் அமைந்து உள்ளது. இன்றும் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தென் கயிலாயம் போல் பிரம்மதேவர் தோற்றுவித்த வடகயிலாயமும் இருக்கிறது.

ஏற்கனவே பிரம்மதேவர் நித்திரையில் ஆழ்ந்ததாக பார்த்தோம் அல்லவா?.. அப்படி நித்திரையில் இருந்த பிரம்மதேவர் விழித்தார். தனது ஞான கண்ணால் இவ்வுலகை பார்த்தார். படைப்பு தொழில் அறவே இல்லாததால் உலகம் வெறுமையாக காணப்பட்டது. எங்கும் உயிர்கள் இருப்பது அரிதாக இருந்தது.

‘ஐயையோ..! எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன். சிவயோகத்தில் இருக்கும் போது ஆழ்ந்து நித்திரையில் மூழ்கி விட்டேன். உலகில் அனைத்து ஜீவராசிகளும் இல்லாமல் போய் விட்டதே. சிவ... சிவா... நான் இப்போது என்ன செய்ய போகிறேன்’ என்று பதற்றமானார் பிரம்மன்.

உடனே அவசர, அவசரமாக உயிர்களை படைக்கும் தொழிலில் ஈடுபட்டார். ஆனால் அது கைகூடவில்லை. சிவயோகத்தில் ஆழ்ந்து இருந்தபோது உயிர்களை படைப்பதற்கான வேதங்களை அவர் மறந்து இருந்தார். வேதங்களை மறந்ததால் அவரால் உயிர்களை படைக்க முடியவில்லை.

எப்படி கர்ணன் தான் வில்வித்தை உள்ளிட்டவைகளை கற்கும் போது பரசுராமரிடம் தான் ஒரு சத்ரியன் என்பதை மறைத்து கற்றானோ, பின்னர் அவன் சத்ரியன் என்று அறிந்து பரசுராமர் நீ கற்ற வித்தை உனக்கு ஆபத்து நேரும் காலங்களில் மறக்க கடவது என்று சாபமிட்டாரோ அது போல் கற்ற மந்திரங்கள் எல்லாம் மறந்து உயிர்களை படைக்க முடியாமல் திணறினார் பிரம்மன்.

அவசரத்தில் எந்த முடிவும் எடுக்க கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். அவசர, அவசரமாக செய்வதால் தான் உயிர்களை படைக்க முடியவில்லையோ என்று நினைத்து பிரம்மன் நிதானத்துடன் படைக்கும் தொழிலை மேற்கொண்டார். அப்போதும் படைக்கும் தொழில் முற்றிலும் கைகூடவில்லை.

போரில் எதிரியிடம் போராடும் போது கையில் இருக்கும் அத்தனை ஆயுதங்களையும் இழந்து விட்டு நிற்கும் ஒரு வீரனை போல் படைக்கும் கர்த்தா என்று பெயர் வாங்கிய தன்னால் ஒரு சிறு உயிரை கூட படைக்க முடியவில்லையே என்று வருந்தினார்.

‘சிவ... சிவா எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன். நித்திரையில் ஆழ்ந்த போது என்னையே நான் மறந்து விட்டேன். இப்போது படைக்கும் தொழில் கைகூடவில்லை என்று வருந்தினால் எப்படி?’ என்று தன்னையே கடிந்து கொண்டார்.

‘ஆமாம்! உண்மை தான் தூக்கத்தில் தான் நம்மை நாம் மறக்க முடியும். இந்த சரீரம் எங்கு இருக்கிறது என்பதையே உணர முடியாது. எதைப்பற்றியும் கவலை இல்லை. ஆனால் அதே தூக்கத்தில் இருந்து விழிக்கும் போது இவ்வுலக ஆசை, பந்தங்கள் நம்மை கவலைக்கு அழைத்து சென்று விடுகிறது. இது தான் தினம், தினம் மனிதர்களுக்குள் நிகழும் ஒரு நிகழ்வு. இதை ஆழ்ந்து சிந்தித்தால் நம் வாழ்க்கையின் ரகசியம் புலப்படும்’

பிரம்மன் தன் தவறை எண்ணி வருந்தி படைக்கும் தொழில் மீண்டும் கைகூட வேண்டும் என்றால் அந்த பரமனின் திருவருள் இருந்தால் தான் முடியும் என நினைத்து அவரை சரணாகதி அடைவதே ஒரே வழி என்று தீர்மானித்தார்.

அதுபோல் பக்தியை பொறுத் தவரை சரணாகதி முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படி ஒரு குழந்தை தான் விரும்புவதை அழுது அடம்பிடிக்கிறதோ அது போல் நாமும், இறைவனிடம் நமக்கு தேவையானவற்றை பெற மனம் உருகி அழுது வேண்டுங்கள். தன்னை நினைத்து மனம் உருகி அழும் பக்தர் களின் துயரை போக்க இறைவன் தயங்க மாட்டான். ஏனெனில் கருணை உள்ளம் படைத்தவன் இறைவன். உன்னை தவிர வேறு யாரையும் எதிர்பார்க்க மாட்டேன் என்று அந்த இறைவனை பற்றி வேண்டி கொள்ளுங்கள். நிச்சயம் பலன் கொடுக்கும்.

அதுபோல தான் பிரம்மனும், கயிலாயம் வந்தார். அங்கே.. ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உமாமகேஸ்வரரை வணங்கி வழிபட்டார்.

‘எம்பெருமானே..! தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. சிவயோகத்தில் ஆழ்ந்த நான் எனது சிறு தவறினால் ஆழ்ந்த நித்திரை கொண்டு விட்டேன். இப்போது படைக்கும் தொழில் கைகூடாததால் பெரும் பாவத்துக்கு ஆளாகி விட்டேன். இந்த பாவத்தை மன்னித்து மீண்டும் படைக்கும் தொழில் கைக்கூட எம்பெருமானே தாங்கள் தான் அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினார்.

‘பிரம்மதேவரே! நீவிர் செய்த தவற்றை யாம் பொறுத்து கொள்வோம். நீங்கள் மீண்டும் படைக்கும் தொழிலை கைக்கூட வேண்டும் என்றால் தான் வீற்றிருக்கும் தென் கயிலாயத்தில் பட்டி முனியாய் சென்று பட்டிநாதரை தரிசித்து தவம் இருங்கள். தான் அங்கே திருநடனம் புரியும் காலம் வரும். அப்போது அந்த திருநடன காட்சியை கண்டு களிக்கும் பேறும், எண்ணற்ற வரங்களும் பெறலாம்’ என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்தார்.

அவரை வணங்கி விடைப்பெற்று கொண்டு பிரம்மதேவர் பூலோகம் வந்தார். இங்கு வெள்ளியம்பலத்தின் தென் கயிலாயமான காஞ்சி நதிக் கரையோரம் அரசமரத்தடியில் எழுந்தருளி ஆதிலிங்க மூர்த்தியை கண்டு உணர்ந்தார். பின்னர் அவர் பட்டிமுனியாய் தண்டம், கமலங்களை சுமந்து காஞ்சிமாநதியில் புனித நீராடி ஆதிலிங்கமூர்த்திக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார்.

அதன்பிறகு நதிக்கரையோரம் ஒரு யாகம் வளர்த்து, அங்கு ஒரு தீர்த்தம் தோற்றுவித்து தமது கமலகுண்டலத்தில் இருந்து நீரை எடுத்து மனம் உருகி தியானித்து அதை சிவலிங்கமாக பிடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரம்மதேவர் தோற்றுவித்த ஆலயம் இப்போதும் வடகயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. அவர் தோற்றுவித்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், குண்டிகை தீர்த்தம் என்றும், யாக குண்டத்திற்கு திருநீற்றுமேடு என்றும் பெயர் உண்டு.

அடுத்த வாரம்: சிவபெருமானின் திருநடனத்தைத் தரிசிக்கலாம். 

மேலும் செய்திகள்