ஆன்மிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ உதவும் முன்னோர் வழிபாடு

பித்ரு பூஜைகளை ஆண்டுதோறும் தவறாமல் செய்ய வேண்டியது குடும்ப ரீதியான கடமையாகும் என்று ஆன்மிக சான்றோர்கள் வழிகாட்டியுள்ளனர்.
பெற்றோர்களுக்கு ஆயுட்காலத்தில் அளிக்க வேண்டிய மரியாதை மற்றும் செய்ய வேண்டிய கடமைகள் அவரவர் நிலையைப்பொறுத்து நிறைய இருக்கின்றன. அவர்கள் மனம் மகிழும்படியான விஷயங்களை செய்திருக்கிறோமா..? என்ற கேள்விக்கு பலரிடம் சரியான விடைகள் இருப்பதில்லை. மேலும், ஒரு சிலர் அவர்களது இயல்பான வாழ்வியல் குறைகளை பெரிதுபடுத்தி, இளமைக்கால அனுபவங்களை மனதில் கொண்டு அவர்களுக்கான மதிப்பை அளிக்க மறுக்கிறார்கள்.

வாழ்வியல் ரீதியான உயர்வுகளுக்கு பெற்றோர்களது பங்கு போதிய அளவு இல்லை என்பதும் பலரது வாதமாக உள்ளது. ஆனால், கருவாக சுமந்து, இளமைப்பருவத்தில் கைபிடித்து அழைத்துச் சென்ற சொந்தங்களை மனதில் வைத்து வழிபடாவிட்டாலும், அவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்துவது என்பது நமது ஆன்மிக பண்பாட்டில் பிரதான நன்றிக்கடனாக குறிப்பிடப்படுகிறது. அவற்றை செய்பவர்கள் போற்று தலுக்கு உரியவர்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

அதன் அடிப்படையில் பித்ரு பூஜைகளை ஆண்டுதோறும் தவறாமல் செய்ய வேண்டியது குடும்ப ரீதியான கடமையாகும் என்று ஆன்மிக சான்றோர்கள் வழிகாட்டியுள்ளனர். பொதுவாக, பூமியில் ஒரு வருடமாக கணக்கில் கொள்ளப்படும் 365 நாட்கள் என்பது பித்ருக்கள் உலகில் ஒரு நாள் ஆகும். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் பித்ரு பூஜைகள் அவர்களுக்கு நாம் தினமும் அளிக்கும் உணவாக அமைவதாக ஐதீகம்.

ஆனால், தற்போதைய நாகரிக வாழ்க்கை முறைகள் காரணமாக பலரும் மேற்கண்ட பூஜைகளை செய்ய தவறி விடுவதால் கடன் தொல்லை, புத்திர பாக்கியம் தாமதம் ஆவது, கணவன்-மனைவி ஒற்றுமை இல்லாதது, குடும்ப ரீதியாக தொடர்ந்த அகால மரணங்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுவிடுவதாகவும் ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், ஒருவரது பிறந்த கால நவக்கிரக அமைப்புகளை கணக்கிட்டு அவருக்கு முன்னோர்கள் வழியில் செய்ய வேண்டிய கடமைகள் இருப்பதையும் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள். அத்தகைய பாதிப்புகள் நீங்கி இனிமையான வாழ்வை அடைய அவர்கள் காட்டும் வழிமுறைகளை இங்கே காணலாம்.

அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் அமாவாசை வருமானால், அன்றைய நாளில் பித்ருக்களுக்கான பூஜையை செய்தால், தோஷங்கள் விலகி நல்வாழ்வு மலரும். மேலும், மகாளய பட்சத்தில் வரக்கூடிய பரணி நட்சத்திரம், மகா பரணியாக சொல்லப்படும். அன்றைய தினம் முன்னோர்களுக்கான திதி பூஜைகளை செய்வது மிகவும் விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. மேலும், அட்சய திரிதியை நாளிலும் முன்னோர்களாகிய, பித்ருக்களுக்காக சிரார்த்தம் செய்வதும் பல நன்மைகளை அளிக்கக்கூடியதாக சொல்லப்படுகிறது.

மேற்கண்ட நாட்களில் பித்ரு பூஜைகளை கடல் அல்லது புண்ணிய நதிக்கரைகளில் செய்வது, ராமேஸ்வரம் அல்லது காளஹஸ்தி போன்ற தலங்களில் பித்ரு சந்துஷ்டி பூஜைகள் செய்வது ஆகியவற்றின் மூலம் பித்ரு தோஷங்கள் நீங்கப்பெற்று, நன்மைகளும் கிடைத்து குடும்பம் தழைத்து மேலோங்கும் என்பது சாஸ்திரங்கள் காட்டுகின்ற வழிமுறையாகும்.