ஆன்மிகம்
ஆலங்காட்டு ரகசியம்

நாம் எல்லோரும் சிதம்பர ரகசியத்தைப் பற்றி அறிந்திருப்போம். நடராஜப்பெருமான் சிதம்பரம் திருத்தலத்தில் ஆகாய வெளியாக இருப்பதையே ‘சிதம்பர ரகசியம்’ எனப் பெரியோர்கள் கூறியுள்ளனர்.
ஆலங்காடு எனும் திருவாலங்காட்டிலும் ரகசியம் புதைந்துள்ளது. இந்த ஆலங்காட்டு ரகசியம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

நடராஜர் ஆனந்த நடனமாடிய பஞ்ச சபைகளுள் முதல் தலமாகிறது திருவாலங்காடு. ரத்தினசபை எனப் போற்றப்படும் இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரர் எனும் பெயரில் அருள்புரிகிறார். இத்திருத்   தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பக்தியில் சிறந்த பெண்மணியான காரைக்கால் அம்மையார், ஒருமுறை சிவபெருமானை சந்திக்க கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்தே சென்றார். அப்போது ஈஸ்வரனின் அருகிலிருந்த பார்வதிதேவி ‘யார் இவர்?’ என வினவ, அதற்கு ‘என் அம்மை வருகிறார்’ என இறைவன் பதிலளித்தாராம்.

‘அம்மையே உமக்கு என்ன வரம் வேண்டும்?’ என காரைக்கால் அம்மையாரிடம் இறைவன் கேட்க, அதற்கு காரைக்கால் அம்மையார், ‘எப்போதும் உன் நாட்டிய தரிசனம் கிடைக்கும் நல் பாக்கியத்தை அருள வேண்டும் இறைவா’ என வேண்டினார். இறைவனும் ‘அப்       படியே ஆகட்டும்’ என அருள்புரிந்தார்.

அதே வேளையில் திருவாலங்காடு நகரை ஆட்சி புரிந்து வந்த மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், அங்குள்ள தன் கோவிலுக்கு வந்து காரைக்கால் அம்மையார் தங்குவார் எனவும், தனக்குப் பின்புறம் அவருக்காக தனி சன்னிதியை எழுப்பும்படியும் உத்தரவிட்டு மறைந்தார். அதன்படியே அம்மன்னனும் நடராஜருக்கு பின்புறம், சன்னிதியில் பாதியை மறைத்து சுவர் எழுப்பினான். அங்கு வந்த காரைக்கால் அம்மையார் அதனுள் ஐக்கியமானார். இன்றும் அங்கு காரைக்கால் அம்மையார் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதுவே ஆலங்காட்டு ரகசியம் என்றழைக்கப்படுகிறது.

கருவறை  தீப ஒளி தரிசனம்

கருவறை தெய்வத்தை தீபஒளியில் மட்டுமே தரிசிக்க வேண்டும். ஏன் தெரியுமா?. ஆண்டவன் குடியிருக்கும் ஆலயங்கள், மிகுந்த ஆசாரங்களுடனும், சரியான விதிமுறைபடியும் கட்டப்படும். முக்கியமாக மூலவர் இருக்கும் கருவறை தெய்வீக ஒளி, மிதமான வெப்பம், கட்டுப்படுத்தப்பட்ட காற்று இவைகளுடன் ஐதீக முறைப்படியும், சாஸ்திர சம்பிரதாயங்களுடனும் கட்டப்பட்டு, நம்பிக்கையுடன் தேடிவரும் பக்தர்களுக்கு நல்வழி காட்டும். வெகுகாலமாக கருவறையினுள் எண்ணெய்களால் எரியும் தீப ஒளியினால் மட்டுமே தெய்வ தரிசனைத்தைக் கண்டோம். நவீன காலங்களில் நமது பகட்டைக் காட்ட அலங்கார விளக்குகள், வண்ண வண்ண டியூப் லைட்டுகளால் கருவறையை அலங்கரிப்பதால், அதிலிருந்து வெளிப்படும் அதிக வெப்பமானது கர்ப்பக்கிரகத்தில் உள்ள மின்காந்த அலைகளை பாதிக்கிறது.

கருவறை தெய்வத்தை தீப ஒளியில் தரிசிக்கும்போது, நம் மனதில் உள்ள கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். கோவிலை நம் உடலாகவும், அங்குள்ள கருவறையை நம் மனம் போன்று இருள் கொண்டதாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். இருளானது எண்ணெய் தீபம் கொண்டு விளக்கேற்றுவதால் அகன்று, அங்குள்ள தெய்வ விக்கிரகம் நம் கண்களுக்குத் தெரியும். அதே போல நம் மனதில் நிலைகொள்ளும் அஞ்ஞானம் ஏற்படுத்தும் இருளை அகற்றி, ஆத்மாவை ஞானம் பெறச் செய்ய இறையருள் துணை செய்யும்.

தற்போதுள்ள வண்ண வண்ண விளக்குகளின் அதீத ஒளியால், ஒருமுகப்படுத்த வேண்டிய மனது அடங்க மறுத்து கவனம் சிதறும். இதனால் முழு மனதுடன் நம்மால் தெய்வத்தை வணங்கமுடியாது . ஆகவே தான் மனதுக்கு சாந்தம் தந்து, உடலுக்கு நன்மை தரும் தீபத்தின் வெளிச்சமே கருவறை தெய்வங்களுக்கு ஏற்றது என்று கூறியிருக்கிறார்கள், சான்றோர்கள்.

தொகுப்பு– சேலம் சுபா.