காவல் காக்கும் கோவில் காளை

கிராமப்புறங்களில் அருள்பாலிக்கும் காவல் தெய்வங்கள் ஏராளம். இந்த தெய்வங்களின் பல ஆலயங்கள், கிராமங்களின் எல்லையில் தான் இருக்கும்.

Update: 2018-02-21 10:01 GMT
சோமரசம்பேட்டையில் அருள்பாலிக்கும் இளமாயி அம்மன் ஆலயமும் இப்படித்தான் அமைந்துள்ளது.

ஆலய அமைப்பு

மிகவும் பழமையான இந்த ஆலயம் அழகான திருச்சுற்று சுவற்றுடன் அமைந்துள்ளது. ஆலயத்தின் முகப்பு கீழ் திசை நோக்கி இருக்கிறது.

உள்ளே நுழைந்ததும் விசாலமான நடைபாதை. பறந்து விரிந்து கிடக்கும் வெட்ட வெளியில் நடக்கும் போது இடதுபுறம் மதுரை வீரன் மற்றும் பட்டவனின் தனி சன்னிதிகளை தரிசிக்கலாம்.

வலது புறம் அழகான காளை ஒன்றின் சிலை உள்ளது. அடுத்து தன்னை வெட்டை கருப்புசாமியின் சன்னிதி உள்ளது. அடுத்து பலிபீடம். பலிபீடத்தின் எதிரே அன்னை இளமாயி அம்மனின் சன்னிதி உள்ளது.

இளமாயி அம்மன்

ஆலயம் வடதிசை நோக்கி அமைந்துள்ளது. அர்த்த மண்டப நுழைவுவாசலில் துவார பாலகிகளின் அழகு சிலைகள் இருபுறமும் அலங்கரிக்க, உள்ேள கருவறையில் அன்னை இளமாயி அம்மன் அமர்ந்த கோலத்தில் புன்முறுவலுடன் அருள்பாலிக்கிறாள்.

அன்னை அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் இரு கரங்களில் சூலத்தை ஏந்தியும், இரு கரங்களில் அபய வரத முத்திரையுடன் அருள்பாலிக்கிறாள்.

இந்த அன்னை பல குடும்பங்களின் குல தெய்வமாகவும் விளங்குகிறாள். எனவே குலமக்கள் ஆலயம் வந்து அன்னைக்கு அபிஷேக ஆராதனை செய்து பொங்கல் இட்டு படைத்து மனம் மகிழ்வோடு இல்லம் திரும்பும் காட்சி அடிக்கடி காணக்கூடியது.

அன்னைக்கு காப்பு கட்டி மாசி மாதம் 15 நாட்கள் திருவிழா நடைபெறும்.

இந்த அன்னைக்கு உற்சவர் திருமேனி இல்லை. எனவே திருச்சி உறையூரில் உள்ள குழுமாயி அம்மனுக்கு ஓலையில் உருவம் செய்து தேரில் பவனி வர செய்வதுபோல் இங்கும் அன்னையை ஓலையில் உருவம் வடித்து தேரில் பவனி வர செய்கின்றனர்.

3 நாட்கள் அன்னை தேரில் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலம் வருவாள். அதுசமயம் ஊரே விழாக்கோலம் கொண்டிருக்கும்.

12.12.2010 இல் இந்த ஆலயத்திற்கு குடமுழுக்கு திருவிழா நடைபெற்றதால் ஆலயம் புதுப்பொழிவுடன் விளங்குகிறது.

கோவில் காளை

இந்த ஆலயத்திற்காக நேர்ந்துவிட்ட காளை ஒன்று இங்கேயே பல ஆண்டுகள் தங்கி ஆலயத்தை காவல் காத்ததாம். ஆலயத்தின் உள்ளே புல்வெளியில் படுத்தும், ஆலயத்தின் வெளியே திருச்சுற்று சுவர் அருகேயும் ஓய்வு எடுக்குமாம். ஆலயம் வரும் பெரியவர்களும் குழந்தைகளும் தரும் பழங்களை விரும்பி சாப்பிடும்.

முரட்டு காளையாக இருந்தாலும் இந்த காளை யாரையும் முட்டியது இல்லை. துரத்தியதும் இல்லை. சிறுவர் சிறுமியர்களுக்கு இந்த காளையின் மீது அலாதி பாசம் உண்டு.

பழக்கமானவர்களை காணும்போது அம்மா என வாய் நிறைய அழைக்கும். கேட்பவர்கள் மனம் நெகிழ்ந்து அந்த காளையின் அருகே வந்து முதுகை தடவி கொடுத்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்த காளை ஆலயத்தில் இருக்கும் துணிவில் வெளியூர் சென்று இரவு வீடு திரும்பும் ஊர் மக்கள் தைரியமாக ஆலயத்தை கடந்து செல்வார்கள்.

திடீர் என நோய்வாய்ப்பட்ட அந்த காளை ஒரு நாள் இறந்து விட்டது. ஊர் மக்கள் தங்கள் வீட்டில் உறவினர் தவறியது போல் கண்ணீர் விட்டனர்.

ஆலய முகப்பின் வலதுபுறம் அந்த காளைக்கு சிலை வைத்து நன்றியோடு இப்போதும் வழிபடுகின்றனர் ஊர் மக்கள்.

அன்னை இளமாயி அம்மனிடம் பக்தர்கள் வேண்டும் கோரிக்கைகள் யாவும் உடனுக்குடன் பலிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

குழந்தை வரம் கேட்டும், தேர்வில் தேர்ச்சி பெறவும், தொழில் நல்ல முறையில் நடக்கவும், விரைந்து திருமணமாகவும் வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் வேண்டுதல்களை அன்னை தவறாது நிறைவேற்றி வைக்கிறாள்.

தங்கள் வேண்டுதல் பலித்ததும் ஆலயம் வரும் பக்தர்கள் அன்னைக்கு பொங்கல் வைத்து படைத்து அபிஷேகம் செய்து தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றனர்.

தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் அங்கு நிலவும் அமைதியான சூழல் மனதை கொள்ளை கொள்வதுடன் நம் மனதில் நிம்மதி பிறப்பதும் நிஜம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோமரசம்பேட்டையில் உள்ளது இந்த இளமாயி அம்மன் ஆலயம். இங்கு செல்ல நிறைய நகரப்பேருந்துகள் உள்ளன. ஆட்டோ வசதியும் உண்டு. 

மேலும் செய்திகள்