ஆன்மிகம்
தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய ஆலயம்

தனது தாய் வழிபாடு செய்வதற்காக, ஆதிசங்கரர் உருவாக்கிய கோவில் ஒன்று கேரள மாநிலம் காலடியில் அமைந்துள்ளது.
காலடி கோவிலில் அட்சய திருதியை நாளில் நடைபெறும் கனகதாரா யாகத்தில் கலந்து கொண்டால், அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என்கின்றனர்.

தல வரலாறு

மூன்று வயதிலேயே தந்தையை இழந்த சங்கரர், தாய் ஆரியாம்பாள் அன்பிலேயே வளர்ந்து வந்தார். தாயிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்த அவர், சிறு வயதிலேயே வேதங்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். அவரது தாய் அவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பிய போது, திரு மணம் செய்ய மறுத்துத் துறவு மேற்கொள்ளப் போவதாகச் சொன்னார். ஆனால், அவரது தாய் அதற்கு அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் ஒருநாள், ஆதிசங்கரர் தன் தாயுடன் ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தார். அப்போது, ஆற்றில் இருந்த முதலை அவரது காலை கவ்வி இழுத்தது. மகனின் நிலையைக் கண்ட தாய், கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தும் சங்கரரை காப்பாற்ற முடியவில்லை.

உடனே சங்கரர் தன் தாயிடம், ‘அம்மா! என்னைத் துறவு செல்லத் தாங்கள் அனுமதித்தால், இந்த முதலை என்னை விட்டு விடும். இல்லையேல் இது என்னை விழுங்கி விடும்’ என்றார். அதைக் கேட்டுப் பயந்து போன அவரது தாய், தன் மகன் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்துத் துறவு செல்ல அனுமதித்தார். என்ன ஆச்சரியம்.. முதலை சங்கரரின் காலை விட்டு விட்டது. அதன் பிறகு துறவு மேற்கொண்ட சங்கரர், தாயின் மேல் கொண்ட அன்பால், அடிக்கடி அவரை வந்து சந்தித்துக் கொண்டிருந்தார்.

சங்கரரின் தாய், சிறிது தொலைவிலிருக்கும் பெரியாறு ஆற்றில் தினமும் குளித்து, அங்கிருக்கும் கண்ணனை வழிபட்டு வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வயதான காரணத்தால் அந்த வழக்கத்தை கடைப்பிடிப்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இதனை ஒரு முறை சங்கரரிடம் சொல்லி வருந்தினார்.

அதைக் கேட்ட சங்கரர், கண்ணனை நினைத்து வணங்கினார். அப்போது, ‘குழந்தையே! நீ காலடி எடுத்து வைக்கும் இடத்திற்குப் பெரியாறு தேடி வரும்’ என்று அசரீரி கேட்டது. அதனைக் கேட்ட சங்கரரும் தனது காலடியை எடுத்து வைக்க, பெரியாறு சங்கரரின் தாயிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. அதுவரை ‘சசலம்’ என்று அழைக்கப்பட்ட அந்தக் கிராமம், அதன் பிறகு ‘காலடி’ என்று பெயர் மாற்றம் பெற்றது. பெரியாற்றிலிருந்து பிரிந்து வந்த அந்த ஆறு ‘பூர்ணா ஆறு’ என்று அழைக்கப்படுகிறது.

சங்கரர் தாயின் விருப்பத்திற்கேற்ப அவர் வழிபடுவதற்காக அங்கு கண்ணனுக்கு ஒரு கோவிலைக் கட்டி, அதில் கண்ணன் சிலையையும் நிறுவினார். ஆதிசங்கரர் நிறுவிய இந்தக் கோவில் தற்போது ‘திருக்காலடியப்பன் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.

கோவில் அமைப்பு

ஆலயத்தின் கருவறையில் திருக்காலடியப்பன் (கண்ணன்), வலது கையில் வெண்ணெய் வைத்தபடி, இடது கையை இடுப்பில் வைத்திருக்கிறார். மேலிருக்கும் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் உள்ளது. கருவறைக்கு வலது புறம் சிவன், பார்வதி, கணபதி, கிருஷ்ணர் ஆகியோருக்கான சன்னிதிகளும், வழிபாட்டு மண்டபத்தில் பரசுராமர், ஆதிசங்கரர் ஆகியோரது சன்னிதிகளும் இருக்கின்றன. சுற்றுப்பகுதியில் ஐயப்பனுக்குச் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலின் எதிரில் ஆரியாம்பாள் சமாதியும் இருக்கிறது. கண்ணன் கோவில்களில் கண்ணனின் அருகில் சிவன், பார்வதி சன்னிதிகள் இருப்பது இங்கு மட்டும் தான் என்கின்றனர் பக்தர்கள்.

ஆலயம் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் ஆதிசங்கரர் சிலை, தட்சிணாமூர்த்தியாக வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு வியாழக்கிழமை வழிபாடு சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும், திருவோணம், நவராத்திரி, மகர சங்கராந்தி போன்ற நாட்களிலும் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இதேபோல் ஆண்டுதோறும் அட்சய திருதியை, கண்ணன் சிலை நிறுவப்பட்ட நாள் ஆகிய தினங்களும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவ்விழாவின் போது கலசாபிஷேகம், நவதானிய பூஜை போன்றவை நடத்தப்பெற்று வருகின்றன.

வழிபாட்டுப் பலன்கள்

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இக்கோவிலின் வழிபாட்டு மண்டபத்தில் இருந்து, கண்ணனை வேண்டிக் கொண்டால் விரைவில் குழந்தைப்பேறு உண்டாகும்.

இக்கோவில் இறைவனான சின்னக் கண்ணனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால், கடன்கள் அனைத்தும் நீங்கி, அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும்.

கிரகப் பாதிப்புகளில் இருந்து விடுபடவும், திருமணத் தடை நீங்கவும், குழந்தைப்பேறு பெற்றிடவும், வணிகம் வளர்ச்சியடையவும், கல்வி மேன்மையடையவும் இக்கோவிலில் நடைபெறும் நவதானிய பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இக்கோவிலில் ஆண்டுதோறும் அட்சயதிருதியை நாளில் கனகதாரா யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அமைவிடம்

கேரளாவில் எர்ணாகுளம் நகரில் இருந்து திருச்சூர் செல்லும் வழியில் 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அங்கமாலி சென்று, அங்கிருந்து தெற்கு நோக்கி 8 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இந்த ஆலயத்திற்குச் செல்லலாம். இக்கோவிலுக்கு எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. அங்கமாலியில் இருந்து நகரப்பேருந்து வசதிகள் இருக்கின்றன.

கனகதாரா வேள்வி

ஆதிசங்கரர் ஒரு வீட்டில் பிச்சை கேட்கச் சென்ற போது, அங்கிருந்த ஏழைப் பெண்மணி அவருடைய வீட்டில் பிச்சையிட உணவு எதுவுமில்லாத நிலையில், அவருக்குக் காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைப் பிச்சையிட்டார். ஆதிசங்கரர் அந்த ஏழைப் பெண்மணியின் வறுமை நீங்க, லட்சுமி தேவியை வேண்டிக் கனகதாரா சுலோகத்தைப் பாடி வணங்கினார். அப்போது அந்த வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனி மழை போல் பொழிந்தது. அவரது வறுமை நீங்கிச் செல்வச் செழிப்பு மிகுந்தது.

ஆதிசங்கரர் உருவாக்கிய இக்கோவிலில் ஆண்டுதோறும் அட்சயதிருதியை நாளில் கனகதாரா வேள்வி நடத்தப்படுகிறது. இந்த வேள்வியில் சங்கரர் 32-ம் வயதில் முக்தியடைந்ததை நினைவு கொள்ளும் வகையில், 32 வேள்வி நடத்துபவர்கள், தங்கம் மற்றும் வெள்ளியிலான நெல்லிக்கனிகளை வைத்துக் கனகதாரா சுலோகத்தை 1008 முறை படித்து வழிபாடு செய்கின்றனர். அதன் பின்னர் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்குத் தங்க, வெள்ளி நெல்லிக்கனிகள் வழங்கப்படுகின்றன. இவ்வழிபாட்டில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அதற்குரிய பணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.