ஆன்மிகம்
குழந்தை வரம் அருளும் திருவாழ்மார்பன்

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோவில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் அமைந்துள்ளது.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோவில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. நம்மாழ்வாரால் பாடல் பெற்ற பெருமைமிக்க தலம்.

தர்மங்கள் தலை சாய்ந்து அதர்ம சக்திகள் தலை விரித்தாடும் போது நல்லவர்களை காக்க தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காக திருமால் அவதாரம் எடுத்தார். அவர் எடுத்த தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று.

தனது பக்தன் பிரகலாதனுக்கு அவன் தந்தை இரணியனால் இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளை சகிக்க முடியாமல் திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை சம்ஹாரம் செய்தார். அதன்பிறகும் பரந்தாமனின் கோபாவேசம் அடங்கவில்லை. மிகவும் உக்ரமாக இருந்தார். இதைக்கண்டு பயந்துப்போன லட்சுமி திருமாலை விட்டு பிரிந்து இயற்கை எழில் சூழ்ந்த திருப்பதி சாரத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்க சாந்தமடைந்த பகவான் லட்சுமியை தேடி அவள் இருப்பிடத்திற்கு வந்தார். லட்சுமி ஆனந்தமடைந்து பகவானின் திருமார்பில் நித்யவாசம் செய்ததாகவும், அதனால் பகவானுக்கு ‘திருவாழ்மார்பன்’ என்ற திருநாமம் ஏற்பட்டதாகவும் ஊருக்கு திருப்பதிசாரம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஐதீகம்.

மேலும் வைணவர்கள் தெய்வமாக போற்றும் நம்மாழ்வாரின் தாயார் உடைய நங்கை பிறந்த தலமாகும். சிறு வயது முதலே உடைய நங்கை விஷ்ணுமிது மிகுந்த பக்தி கொண்டு இருந்தாள். வயது வந்தவுடன் அவரை குருகூரைச் சேர்ந்த காரி என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தனர். நீண்ட நாட்கள் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் அவர்கள் மனம் வருந்தி தனக்குப் புத்திரப்பேறு அருளுமாறு நாற்பத்தொரு நாட்கள் விரதமிருந்து ஆழ்வார் திருநகரி தலத்தில் ஆதிநாதனை வேண்டிக் கொண்டனர். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு வந்து 41 நாட்கள் திருவாழ்மார்பனை எண்ணி தவமிருந்தனர்.அவர்கள் பிரார்த்தனைக்கு கைமேல் பலன் கிடைத்தது. பெருமாளின் திருவருளால் திருஉடைய நங்கை கர்ப்பமுற்றாள். ஒரு வைகாசி விசாகத்தன்று அவருக்கு நம்மாழ்வார் மகனாக அவதரித்தார். அவரது பெற்றோர் மனமகிழ்ந்து பெருமாளின் கருணையைப் போற்றி புகழ்ந்தனர்.ஆனால் பிறந்தது முதல் எந்த இயக்கமும் இல்லாமல் பெற்றோருக்குப் பெருந்தவிப்பைத் தந்தார். குழந்தை நம்மாழ்வாரை தூக்கிக் கொண்டு அவரது பெற்றோர் குருகூரில் உள்ள ஆதிநாதன் சன்னிதியில் விட்டனர். அந்தக் குழந்தை மெல்ல நகர்ந்து, நகர்ந்து அருகில் இருந்த ஒரு புளிய மரப்பொந்தினுள் சென்று அமர்ந்து கொண்டது. இப்படி அவர் பதினாறு ஆண்டுகள் வாசம் செய்தார். மதுரகவியாழ்வார் இக்கோவிலுக்கு வந்தார். நம்மாழ்வார் மிகப்பெரிய மகான் என்று அடையாளம் கண்டு கொண்டு அவரை தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.

மதுரகவியாழ்வார் எந்தப்பெருமாளையும் பாடாமல் தன் குருநாதரைப்பற்றி மட்டுமே பாடல்கள் இயற்றியுள்ளார். பல்வேறு திவ்ய தேசங்களில் கோவில் கொண்டிருந்த பெருமாள்கள் எல்லோரும் நம்மாழ்வாரிடம் வந்து தன்னைப் பற்றி பாடல் இயற்றுமாறு கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறார்கள். ஆனாலும், திருவண் பரிசாரம் என்ற தன் தாயாரின் பிறந்த ஊரில் கோவில் கொண்டிருக்கும் திருவாழ்மார்பன் இவர் மீது ஏதோ வருத்தம் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால்தான் யாராவது அந்தப் பெருமாளிடம் என்னைப் பற்றிச் சொல்ல மாட்டீ ர்களா என்று ஏக்கமாகக் கேட்கிறார்.அதன் பிரதிபலிப்பாக எழுந்த பாடல்.

வருவார் செல்வார் பரிவாரத் திருந்த என்
திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லா செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடு
ஒருபாடுழல்வான் ஓரடியாணுமுள னென்றே

நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் திருப்பதிசாரம். கருவறையில் திருவாழ்மார்பன், நான்கு கரங்களுடன், சங்கு-சக்கரதாரியாக, அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிகிறார். இத் தலத்தின் இறைவன் ஏழு முனிவர்களால் சூழப்பட்டு காட்சி தருகிறார். திருவாகிய லட்சுமி தனது பதியாகிய திருமாலை இவ்விடத்தில் சார்ந்ததால் இவ்வூர் ‘திருப்பதிசாரம்' என அழைக்கப் படுகிறது. இதனால் இக்கோவிலில் இறைவிக்குத் தனிக் கோவில் இல்லை. இறைவி கமலவல்லி நாச்சியார். தீர்த்தம்: லட்சுமி தீர்த்தம். விமானம்: இந்திர கல்யாண விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. இத்தலத்தின் மூலவர் கடுகு, சர்க்கரை மற்றும் மலை தேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்ந்துள்ளது போன்ற மிக அழகிய சிலை ஒன்று இத்தலத்தில் உள்ளது பிரதான வளைவைக் கடந்து கோவிலுக்குள் சென்றதும் நேரே தோன்றும் கருவறை விமானத்தை பிராகாரச் சுற்றாக தரிசிக்கலாம். இடப்புறம் மூலவர், பின்புறம் சாந்த யோக நரசிம்மர், வலப்புறம் தட்சிணாமூர்த்தி ஆகியோர் அந்த விமானத்தில் காட்சி தருகிறார்கள். திருவாழ்மார்பன் பெருமாள் கருவறைக்கு வலது பக்கம் ராமர்-சீதை-லட்சுமணர்-அனுமன் தனிச் சன்னிதியில் கொலு விருக்கிறார்கள். இவர்களுடன் விபீஷ்ணர், அனுமன், குலசேகர ஆழ்வார், அகத்தியரையும் சேர்த்து தரிசிக்கலாம். பெருமாளுக்கு எதிரே கருடாழ்வார் உள்ளார். கருவறைச் சுற்றில் கன்னிமூல விநாயகர் தரிசனமளிக்கிறார். கோவிலுக்கு வெளியே வந்தால் எதிரே சோமதீர்த்தம். அதற்கு இடப்புறம் ஒரு அரசமரம், அதனடியில் கட்டப்பட்ட மேடையில் விநாயகர் மற்றும் நாகர்கள் அமைந்திருக்கிறார்கள். சோமதீர்த்தக் கட்டத்திற்குள் சூரியநாராயணன் தனியே சிறு சன்னிதியில் நின்றிருக்கிறார்.

பக்கத்தில் சுதைச் சிற்பமாக அக்னிமாடன். கோவில் மதில் சுவரைச் சுற்றி வந்தால் வடக்கே உடைய நங்கையார் அவதரித்தப் பகுதியைக் காணலாம். நம்மாழ்வாரின் தாயாரின் இந்த ‘வீடு’, இப்போது ஒரு பஜனை மடமாக உள்ளது. சொர்க்க வாசல் வைகுண்ட ஏகாதசி அன்று காலை 5.30 மணி முதல் பகல் 1 மணி வரை தான் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் கருட சேவை விசேஷமாக நடக்கிறது.

-மருத்துவர் நா.மோகன்தாஸ், தஞ்சாவூர்.