நீ கர்த்தரை தேடு உன் துக்கம் சந்தோ‌ஷமாக மாறும்

நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக ‘ஆண்டவரே, நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்’. (மத்.8:8).

Update: 2018-03-01 22:15 GMT
நூறு போர்ச்சேவகர்களுக்கு மேற்பட்ட அதிகாரியாக இருந்தவர், கர்த்தராகிய இயேசுவினிடத்தில் வந்து ‘தனது வேலைக்காரன் திமிர்வாத நோயினால் கொடிய வேதனைப்படுகிறான்’ என்றான்.

இயேசு, ‘நான் உன் வீட்டிற்கு வந்து அவனை குணமாக்குவேன்’ என்றார்.

அதற்கு நூற்றுக்கு அதிபதி ‘ஆண்டவரே, நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல, நீர் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்’ என்றார்.

இயேசு இதை கேட்டு ஆச்சரியப்பட்டு தமக்குப்பின் வந்தவர்களை நோக்கி ‘இஸ்ரவேலில் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தை மெய்யாகவே காணவில்லை’ என்றார்.

பின்பு நூற்றுக்கு அதிபதியை பார்த்து ‘நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது’ என்றார்.

நூற்றுக்கு அதிபதி இறை இயேசுவின் சொல்லிற்கு இருக்கும் அதிகாரத்தின் மேல் நம்பிக்கை வைத்தான். அவர் சொல்லுக்கு கொடிய வியாதியிலிருந்து சுகம் உண்டாகும் என்று விசுவாசித்தான். தனது வேலைக்காரன் சரீரத்தின் கொடிய வியாதியை தீர்ப்பார் என்று தேடிச்சென் றான். அவர் சொன்ன உடனே வியாதி அவனை விட்டு நீங்கியது. வேலைக்காரன் துக்கம் சந்தோ‌ஷமாக மாறிற்று.

பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப் போய் போஜனஞ்செய்தாள். அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை (1 சாமு.1:18).

எல்க்கானா என்ற மனிதனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒருத்தி பேர் அன்னாள், மற்றவள் பேர் பெனின்னாள். பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கோ பிள்ளைகள் இல்லை.

பெனின்னாள் அன்னாளை துக்கப்படுத்தி மிகவும் விசனப்படுத்தினாள். அன்னாள் ஆலயத்தில் சென்று மனங் கசந்து மிகவும் அழுது இறைவனிடம் விண்ணப்பம் செய்தாள்.

‘சேனைகளின் ஆண்டவரே, தேவரீர் அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து உமது அடியாளை மறவாமல் நினைத்தருளி ஒரு ஆண் பிள்ளையைத் தரவேண்டும்’ என்று தன் இருதயத்தை ஊற்றி தேவனை தேடினாள்.

சில நாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். அவள் துக்கம் சந்தோ‌ஷமாக மாறியது.

என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு... (1 இரா.17:20).

சாறிபாத் என்ற ஊரில் ஒரு விதவை இருந்தாள். எலியா என்ற தேவ மனிதன் தேவ சித்தத்தின்படி விதவை வீட்டிற்கு சென்றான். அந்த வீட்டின் மேல் அறையில் தங்கி இருந்தான்.

சில நாட்கள் சென்ற பின்பு விதவையின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக் கொண்டே போனது.

விதவை ஸ்திரீ எலியாவை பார்த்து ‘தேவனுடைய மனு‌ஷனே, என் குமாரனை சாகப்பண்ண வா என்னிடத்தில் வந்தீர்’ என்றாள்.

எலியா, ‘உன் குமாரனை என்னிடத்தில் தா’ என்று சொல்லி தான் தங்கியிருந்த மேல் வீட்டில் கட்டிலின் மேல் படுக்கவைத்து அந்த பிள்ளையின் மேல் மூன்றுதரம் குப்புற விழுந்து, ‘என் தேவனாகிய பிதாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனை சாகப்பண்ணினதினால் அவளுக்கு துக்கத்தை வருவித்தீரே’ என்று வருத்தப்பட்டு, ‘என் தேவனாகிய ஆண்டவரே, இந்தப் பிள்ளையின் ஆவி, ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரப்பண்ணும்’ என்று விண்ணப்பம் செய்தான்.

இறைவன் எலியாவின் சத்தத்தைக் கேட்டார். பிள்ளையினுடைய ஆவி, ஆத்மா அவனுள் திரும்பி வந்தது, அவன் பிழைத்தான்.

பின்பு எலியா மேல் வீட்டிலிருந்து பிள்ளையை எடுத்து கீழ் வீட்டிற்குள் கொண்டுவந்து தாயினிடத்தில் கொடுத்து ‘உன் பிள்ளை உயிரோடிருக்கிறான்’ என்றான்.

அந்த விதவை ஸ்திரீ எலியாவை பார்த்து ‘நீர் தேவனுடைய மனிதன். உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் தேவனின் வார்த்தை உண்மை என்று அறிந்திருக்கிறேன்’ என்றாள்.

எலியா கர்த்தரை தேடினான். விதவை ஸ்திரீயின் துக்கம் சந்தோ‌ஷமாக மாறியது.

கர்த்தர் அவளைப் பார்த்து அவள்மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி... (லூக்கா 7:13).

இயேசு எல்லோருக்கும் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார். அவருடைய சீடர்களும், திரளான ஜனங்களும் கூட சென்றார்கள். அவர் நாயீன் ஊரின் வாசலுக்குச் சமீபித்த போது மரித்துப்போன ஒரு வாலிப மகனை அடக்கம் பண்ணும்படி பாடையில் வைத்து தூக்கிக்கொண்டு சென்றார்கள். அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ இளவயது பெண்ணாக இருந்தாள். அவள் அனாதையாகி விட்டதை இயேசு கண்டார்.

தாய் அழுது புலம்பும் அவலக்குரல், திரள்கூட்ட ஜனங்கள் மனவேதனையுடன் அழுது புலம்புவது பார்த்து, அவள் மேல் மனதுருகி ‘அழாதே’, என்று சொல்லி பாடையைத் தொட்டார். அதை சுமந்தவர்கள் நின்றார்கள்.

அவர், ‘வாலிபனே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்’ என்று ஒரு வார்த்தை சொன்னார்.

மரித்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினான். அவனை தாயினிடத்தில் ஒப்படைத்தார். எல்லோரும் ஆச்சரியப்பட்டு தேவனை மகிமைப் படுத்தினார்கள்.

அவளோ துக்கத்தோடு தன் மகனை அடக்கம் பண்ண தேடிச் சென்றாள். கர்த்தராகிய இயேசு அவள் துக்கத்தை சந்தோ‌ஷமாக மாற்றினார்.

நாமும் அவரை தேடும்போது நமது துக்கமெல்லாம் சந்தோ‌ஷமாக மாறும், ஆமென்.

சி. பூமணி, ‘ஆசீர்வாத சுவிசே‌ஷ ஊழியம்’, சென்னை–50.

மேலும் செய்திகள்