முதற்பலன் விழா

விளைச்சலின் முதற்பலனை இறைவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே சுருக்கமான செய்தி.

Update: 2018-03-07 09:56 GMT
உலகைப் படைத்தவர் இறைவன். உயிர்களைப் படைத் தவர் இறைவன். பயிர்களைப் படைத்தவர் இறைவன்.

அவரன்றி எதுவும் உருவாகவில்லை என்பதே விவிலியம் சொல்லும் பாடம். படைத்தவருக்கு எப்போதும் முதலிடம் இருக்க வேண்டும் என்பதே இந்த விழா வலியுறுத்தும் பாடம்.

முதற்பலன் விழா, இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. விளைச்சலின் முதற்பலனை இறைவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே சுருக்கமான செய்தி.

“அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். குரு அந்தத்தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின் வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.

ஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள். இருபது படி அளவுள்ள மரக் காலில், பத்தில் இரண்டு பங்கான மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து எரிபலியாகச் செலுத்துங்கள். திராட்சைப்பழ ரசத்தை நீர்மப் படையலாகப் படையுங்கள். உங்கள் கடவுளின் காணி க்கையை நீங்கள் கொண்டுவரும் அந்த நாள்வரை, அப்பமோ, சுட்ட கதிரோ, பச்சைக் கதிரோ, உண்ணலாகாது.

இந்த விழாவுக்கான விதிமுறை களாக இறைவன் கொடுத்தவை இது. அதை இஸ்ரவேல் மக்கள் தவறாமல் நிறைவேற்றி வந்தார் கள். நிசான் மாதத்தின் 14-ம் நாள் பாஸ்காவைக் கொண்டாடி, 15-ம் நாள் முதல் புளிப்பற்ற அப்பத் திருவிழாவை ஆரம்பித்து, 16-ம் நாளில் முதல் பலன் விழாவைக் கொண்டாடினார்கள் இஸ்ரே வலர்கள்.

எகிப்தியரின் அடிமைத்தனத் திலிருந்து மீண்ட அவர்கள், வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறிய பிறகே இந்த விழா ஆரம்பமாகிறது. அலைந்து திரிந்த காலத்தில் அவர்கள் பயிர் செய்ய இயலாது என்பதே அதன் காரணம்.

இறைவனுக்கு முதலில் விளையும் கதிரைக் கொடுப்பது, இறைவனுக்கு தானியம் வேண்டும் என்பதால் அல்ல. இறைவன் நம் வாழ்வின் முதல் நபராக இருக்க வேண்டும் என்பதால்.

இந்த விழாவும் இறைமகன் இயேசுவை குறிப்பிடுகின்ற விழாவாகவே அமைந்திருக்கிறது. ‘முதற்பயன்’ என்பது இறைமகன் இயேசுவைக் குறிக்கிறது. அவர் தந்தையின் தலைமகன். அவர் மரணமடைந்து உயிர்த்த முதல் மனிதர்.

“இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது (1 கொரிந்தியர் 15:20)” எனும் இறைவார்த்தை அதை நமக்கு புரிய வைக்கிறது.

அந்தக்காலத்தில் விளைந்த முக்கிய தானியமான பார்லி இறைவனின் முன்பு வருகின்ற முதல் தானியமாக இருந்தது. ஏழைகளின் தானியமான பார்லி இயேசுவைக் குறிக்கிறது.

இறைமகன் இயேசு ஏழையிலும் ஏழையாய் வந்தவர். விண்ணகத்தில் கடவுளாக இருந்தவர், பூமியில் அனைத்தையும் துறந்து எளிமையாய் வந்தார். பணிவு எனும் குணத்திலும் அவர் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டவராய் இருந்தார்.

பார்லியானது ஆலயத்தில் அடிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, கடைசியில் அதிலிருந்து மாவு பெறப்படும். பெறப்படும் மாவு தூய்மையானதாய் இருக்கும். அதை குரு பலியாய் செலுத்துவார்.

இறைமகன் இயேசுவும் அடிக்கப்பட்டார், நசுக்கப்பட்டார், ஆனாலும் தூய்மை விலகாமல் இருந்தார். கடைசியில் அவர் பலியாய் மாறினார்.

உயிர்த்த இயேசுவை மகதலேன் மரியா அன்பினால் தொட முயல்கிறார். அப்போது இயேசு, ‘என்னை தொடாதே, நான் இன்னும் தந்தையிடம் செல்லவில்லை’ என்றார். அதன் பின் விண்ணகம் சென்று தந்தையை சந்தித்தார். தந்தையை அடைந்த முதல் உயிர்ப்பு, இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு தான். அவரே நமக்கெல்லாம் முதல் சகோதரராய் இருக்கிறார்.

“இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர், தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்” எனும் திருவெளிப்பாடு வசனமும் இதை தெளிவாக்குகிறது.

இப்படி இறைமகன் இயேசுவின் வாழ்க்கை முதற்பலன் பண்டிகையோடு பின்னிப் பிணைந்ததாய் மாறிவிடுகிறது.

இன்றைய சூழலில் நாம் இந்த விழாவை எப்படிக் கொண்டாட வேண்டும். இறைமகன் இயேசு ஏற்கனவே பூமியில் பிறந்து, வாழ்ந்து போதித்து, இறந்து, உயிர்த்து நம்மை மீட்டுக்கொண்டார். அந்த அடிப்படையில் இந்த முதற்பலன் விழா புதிய பரிமாணம் பெறுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி, முதலிடத்தை எப்போதும் இறைவனுக்கே வழங்கு, எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனுக்கே மரியாதை செலுத்து, என்பது போன்ற சிந்தனைகளே இந்த முதற்பலன் விழாவின் அடிப்படையாய் இன்றைக்கு இருக்கிறது.

நமது வாழ்வும், நமது வளமும் இறைவன் நமக்குத் தந்தவை என்பதை உணரும் போது அதை அவருக்கே சமர்ப்பிப்பதில் சஞ்சலம் இருக்காது.

“வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும், பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு” என்கிறார் இயேசு.

அந்த இறைவனிடம் நம்மை ஒப்படைப்பதில் இந்த விழா முழுமையடைகிறது.

மேலும் செய்திகள்