பெண்களின் நலன் காக்கும் பகவதி அம்மன்

கோவிலில் கிழக்கு நோக்கிய நிலையில் கிருஷ்ணர் சன்னிதியும், மேற்கு நோக்கிய நிலையில் பகவதியம்மன் சன்னிதியும் இருக்கின்றன.

Update: 2018-03-07 10:01 GMT
பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைய வேண்டி வழிபடும் கோவிலாகக் கேரள மாநிலம், பாலக்காடு, வடக்கன்தரை திருப்புரைக்கால் பகவதியம்மன் கோவில் அமைந்திருக்கிறது.

தல வரலாறு

கணவன் கோவலனைக் கள்வன் என்று குற்றம் சாட்டி மரண தண்டனை அளித்த பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்று நீதி கேட்டாள் கண்ணகி. அவளுக்கு பதிலளிக்க முடியாமல், தான் அமர்ந்திருந்த அரியணையில் இருந்து கீழே விழுந்து உயிர் துறந்தான் பாண்டியன். அரசனைத் தொடர்ந்து அரசியும் உயிரை விடுகிறாள். அதன் பிறகும் கண்ணகிக்குக் கோபம் குறையவில்லை, தனது கற்பின் வலிமையால் மதுரை மாநகரத்தையே நெருப்புக்கு இரையாக்குகிறாள். அந்தக் கோபத்துடனே அங்கிருந்து வெளியேறிச் சேரநாட்டை சென்றடைந்தாள்.

அவளுக்குத் துணையாகக் கன்னடத்துப் பகவதி, கண்ணுகொட்டுப் பகவதி மற்றும் புல்லுக்கோட்டை ஐயன் ஆகியோரும் செல்கின்றனர். சேர நாட்டின் ஓரிடத்தில், இந்தத் தெய்வங்களின் வரவை அறிந்த அப்பகுதி மக்கள் கண்ணகிக்கு நடப்பதிமன்னம் என்னும் இடத்திலும், கன்னடத்துப் பகவதி மற்றும் கண்ணுகொட்டுப் பகவதி ஆகியோருக்குப் பிராயரி என்னும் இடத்திலும் கோவில் கட்டி வழிபட்டு வந்தனர்.

பிற்காலத்தில் அன்னியப் படையெடுப்பில் அங்கிருந்த கோவில்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டன. கோவில்களில் இருந்த சிலைகளும் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன. அங்கு எஞ்சியிருந்த சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தை எடுத்துக் கொண்டு போய், வடக்கன்தரை என்ற இடத்திலிருந்த விஷ்ணு கோவில் அருகில் வைத்து வழிபட்டனர், பக்தர்கள்.

நாளடைவில் அந்தப் பீடத்திற்கும், அங்கிருந்த அத்திமரத்துக்கும் பகவதியின் அருள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்ற பகவதி அங்கு வந்து தங்கிக் கொண்டாள். வழிபடும் பக்தர்கள் வேண்டி யதையெல்லாம் வழங்கத் தொடங்கினாள். பிற்காலத்தில், அங்கிருந்த பீடத்தில் பகவதி யின் வடிவமாகக் கல் தூண் ஒன்று நிறுவப்பட்டுப் பெரிய கோவில் ஒன்று எழுப்பப்பட் டதாக கோவில் தல வரலாறு கூறுகிறது.

ஆலய அமைப்பு

கோவிலில் கிழக்கு நோக்கிய நிலையில் கிருஷ் ணர் சன்னிதியும், மேற்கு நோக்கிய நிலையில் பகவதி யம்மன் சன்னிதியும் இருக்கி ன்றன. இக்கோவில் வளாகத் தில் அழகிய தீர்த்தக் குளம் ஒன்றும் அமைக்கப்பட்டி ருக்கிறது. கேரளாவில் அமைந்திருக்கும் ஒரே கண்ணகி கோவில் எனச் சொல்லப்படும் இந்த ஆலயத்தில், கணவனை இழந்த கண்ணகி, பகவதி தோற்றத்தில் இருப்பதால், முல்லைப்பூ, பத்தி, குங்குமம் போன்றவை பயன்படுத்தப் படுவதில்லை

ஆலயம் தினசரி காலை 5 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இக்கோவிலில் தோற்றப்பாடல், ரத்தப் புஷ்பாஞ்சலி, இரட்டி மதுரம் எனும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இவை தவிர, ஆண்டுதோறும் நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி போன்றவை சிறப்பு விழாக்களாக நடத்தப்பட்டு வருகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வேலைத் திருவிழா எனும் சிறப்பு விழா ஒன்றும் நடத்தப் பெற்று வருகிறது.

அமைவிடம்

கேரள மாநிலம், பாலக்காடு நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு நகரப் பேருந்து வசதிகள் அதிக அளவில் இருக்கின்றன. 

மேலும் செய்திகள்