லட்சுமி நரசிம்மசாமி-சோமேஸ்வரர் கோவில் தேரோட்டம்

நங்கவள்ளியில் உள்ள லட்சுமி நரசிம்மசாமி- சோமேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2018-03-31 22:40 GMT
மேச்சேரி,

சேலம் அருகே உள்ள நங்கவள்ளியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மசாமி - சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நாள் தோறும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், சேஷ வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், கருட வாகனம், ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலாவும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் லட்சுமி நரசிம்மசாமி-சோமேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் நிலை அமர்த்தப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை கோவில் முன்பு இருந்து தொடங்கியது. முதலில் விநாயகர் தேரும், அடுத்து சோமேஸ்வரர் தேரும், 3-வதாக லட்சுமி நரசிம்மசாமி பெரிய தேரும் புறப்பட்டது. இந்த தேர்களை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். பின்னர் நங்கவள்ளியில் உள்ள தாரமங்கலம் பிரிவு சாலையோரம் தேர்கள் நிறுத்தப்பட்டன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாரமங்கலம் பிரிவு சாலையில் இருந்து புறப்பட்டு நங்கவள்ளி பஸ்நிலையம் வரையும், நாளை பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு பேரூராட்சி அலுவலகம் வரையும், நாளைமறுநாள் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு தோப்பு தெரு பிரிவு வரையும், 4-ந்தேதி தோப்பு தெரு பிரிவில் இருந்து புறப்பட்டு கோவில் முன்பு வந்து தேர்கள் நிலை சேர்கிறது. 5-ந்தேதி இரவு 9 மணிக்கு சத்தாபரண நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்