முக்தியை அருளும் மூலசேத்திரம்

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று விதத்தாலும் பிரசித்திப்பெற்றது அகரம் ஆதிமூலேசுவரர் ஆலயம்.

Update: 2018-04-04 07:56 GMT
கடலூர் மாவட்ட வரலாற்றில் பரங்கிப்பேட்டையின் பங்களிப்பு மிகமிக அதிகம். முற்கால சைவ, வைணவ மதத்தைத் தழுவிய மன்னர்களால் ‘முத்துகிருஷ்ணாபுரி’ என்றும், முகலாய அரசர்களால் ‘மகமதுபந்தர்’ என்றும், போர்த்துக்கீசியர்களால் ‘போர்ட்டோநோவோ’ என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது இந்த ஊர். இதன் மேற்குப் பகுதியில் அகரம் என்னுமிடத்தில் அமையப்பெற்றதுதான் மூலசேத்திரங்களில் ஒன்றான ‘அகரம் ஆதிமூலேசுவரர்’ திருக்கோவில்.

இக்கோவிலைப் பற்றி வடமொழியில் பிரம்மதத்தன், தென்மொழியில் பூதன்நாகன், தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை, குன்றத்தூர் அஷ்டாவதாணி சொக்கப்பநாவலர், மாயூரம் சாமிநாத கவிராயர் ஆகியோர் பாடியுள்ளனர். வடமொழியில் பிரம்மதத்தனால் எழுதப்பட்டது ‘வாருணமான்மியம்’ என்னும் தலவரலாறு. இதனை தச்சக்காடு பிரம்மஸ்ரீ பிரபாகரசாஸ்திரி என்பவர் தென்மொழியில் மொழி பெயர்த்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு, அகரம் ஆதிமூலேசுவரர் ஆலயத்தின் தலவரலாற்றுச் சுருக்கத்தை, அல்லமன் முத்துத்தாண்டவராய பிள்ளை என்பவர் எழுதியதாகக் கூறப்படுகிறது.

வாருணமான்மியத்தில் ‘சிதம்பரத்தில் உள்ள தில்லை மூலட்டானே (திருமூலநாதர்) திருவாருணமமர்ந்தான்’ என்றும், ‘தில்லையம்பதிக்குப் பாடப்பெற்ற பாடல்கள் அனைத்தும் இதற்கும் கொள்ளலாம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது.. சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் திருமூலநாதரே, திருவாருணம் எனப்படும் அகரத்திலும் எழுந்தருளியுள்ளார். ஆகவே தில்லையம்பதிக்குப் பாடப்பெற்ற பாடல்கள் யாவும், திருவாருணம் தலத்திற்கும் பொருந்தும் என்பதாகும். மேலும் சிதம்பர புராணத்திலும், புலியூர் வெண்பாவிலும் இத்தலத்தை தில்லை கமிஷசேத்திரமாகவும், தில்லைக்கு ஈசான்ய ஷேத்திரமாகவும் குறிப்பிடப்பட்டிருப்பது, இந்த ஆலயம் சிதம்பரத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஆலயம் என்பதை உணர்த்துகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று விதத்தாலும் பிரசித்திப்பெற்றது அகரம் ஆதிமூலேசுவரர் ஆலயம். விபூதி, விதேகம், காரணம் அல்லது மூலம் என்பதாக வகைப்படுத்தப்படும் சிவாலய வகைகளில், மூன்றாவது வகையைச் சார்ந்தது இந்த திருக்கோவில். இந்தியாவில் மூலசேத்திரங்கள் எட்டு மட்டுமே உள்ளதாக வாருணமான்மியம் உரைக்கின்றது. அவை:- கயிலை, காசி, கேதாரம், பத்ரி, காஞ்சி, திருவண்ணாமலை, சிதம்பரம், வாருணம் என்பவையாகும். இந்தப் பெருமை காரணமாக, இந்த எட்டு ஆலயங்களும் பெரியகோவில்கள் என்று அழைக்கப்பட்டிருக்கின்றன. இவைகளில் வாருணம் என்பது அகரம் ஆதிமூலேசுவரர் ஆலயத்தைக் குறிப்பதாகும்.

இத்தலத்தின் மகாத்மியத்தை சிவன் பார்வதிக்கும், பார்வதி குமரக்கடவுளுக்கும், குமரக்கடவுள் நந்திதேவருக்கும், நந்தி தேவர் சணற்குமார முனிவருக்கும், அவர் வியாசருக்கும் கூற, வியாசர் அதை தன் பிரமாண்ட புராணத்தில் சூதபுராணிகர் உட்பட பலருக்கும் உரைக்கும் விதமாக எழுதப்பெற்றுள் ளது.

விஷ்ணு, வருணன், இந்திரன், சூரியன், அவனது மகன் சாவண்ணி, அக்னி, நாரதர், சித்திரகுப்தன், தட்சன் போன்றவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றியது, அகத்தியர், காசியபர், பிருகு, தீந்து, சுதந்து, காஞ்சிபெரியவர் போன்ற மகான்களுக்கு அருள்பாலித்தது, காஷ்மீரதேசத்து மன்னன் கமனீயன், குப்தவசம்சத்து முதலரசன் சந்திரகுப்தமெளரியன், அவனது அரசியல்குரு சாணக்கியர், லாடதேசத்து மன்னன் போன்ற அரசர்களின் மனதை மாற்றியது, பிரசண்மன், மாறன், துரந்தன் என்னும் சாமானியர்களுக்கும் வரமருளியது, இவ்வூரில் மகாவிஷ்ணுவின் நந்தவனத்தில் பொற்சீந்தல் கொடியாக பிறந்த பார் வதிதேவியை சிவபெருமான் கரம்பற்றியது என பல வரலாற்று நிகழ்வுகளுக்கும், பெருமைக்கும் உரியதாக திகழ்கிறது அகரம் ஆதிமூலேசுவரர் திருத்தலம். இவை யாவும் வாருணமான்மியத்தில் பதினைந்து படலங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஆனால் இத்தனை புகழுக்குரிய இத்தலம், ஏனைய பிற ஏழு தலங்களைப் போல பெரும்புகழ் அடையாத காரணம்தான் விளங்கவில்லை.

ஒரு முறை காசியப முனிவர் யாகம் செய்தபோது, அதைத் தடுக்கும் விதமாக வருண பகவான் மழையைப் பொழிவித்தான். இதனால் வருணன், காசியப முனிவரின் சாபத்திற்கு ஆளானான். இதையடுத்து சாபத்தால் தன்னைப் பிடித்த ஜலரோகத்தில் இருந்து விடுபட வழி தேடினான். அப்போது ஒரு நாகணவாய் பறவை (மைனா)யின் வழிகாட்டலில், இங்குள்ள சுவேதநதி எனப்படும் வெள்ளாற்றில் நீராடி ஆதிமூலேஸ்வரரை வணங்கிப் பணிந்தான்.

இதையடுத்து சிவபெருமான், லிங்கத்தில் இருந்து சூலபாணியாய் வெளிப்பட்டு, தனது சூலாயுதத்தால் கோவில் மதில் சுவரின் கீழ்பாகத்தில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். பின்னர், ‘இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள், சிவானந்தப் பேறு பெறுவார்கள்’ என்று கூறி மறைந்தார்.

இதையடுத்து வருண பகவான் அந்தத் தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கிவர, ஒரு சிவராத்திரி வேளையில் வருணனின் சாபம் நீங்கி, முழு குணம் பெற்றான். தன் சாபம் நீங்கியதில் மகிழ்ச்சி யடைந்த வருணன், ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததுடன், ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் உள்ள நீரைக் கொண்டு அந்த சிவலிங்கத்தை அபிஷேகித்து வழிபட்டான். அத்துடன் வேதம் படித்தவர்கள் தங்குவதற்காக ஒரு பகுதியையும் உருவாக்கினான். அவன் உருவாக்கிய ஊர் என்பதால் அது ‘வருணாபுரி’, ‘வாருணஸ்தலம்’ என்று அழைக்கப்பட்டது.

வருணன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம், பெரியகோவிலுக்கு தென் கிழக்கு திசையில் உள்ள சாமியார்மடம் எனப்படும் இரட்டைக்கோவிலாகும். செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்தக்கோவில் தற்போது வழிபாடின்றி இருந்து வருகிறது. இதில் முன்னால் இருப்பது வருணன் ஸ்தாபித்த லிங்கத்திற்கான சன்னிதி, பின்னால் இருப்பது வருணன் தவம் செய்த இடம். வருணன் உருவாக்கிய தீர்த்தம் தற்போது காணப்படவில்லை. ஒருவேளை தூர்ந்து போயிருக்கலாம். 

இந்திரன் வழிபட்ட லிங்கம்

தேவலோகத்தின் தலைவனான இந்திரனுக்கு, ஒரு முறை நமுசி என்ற அசுரனால் பிரச்சினை ஏற்பட்டது. அவனது கொட்டத்தை அடக்க, ஒரு சூலாயுதத்தை எடுத்து அசுரனை நோக்கி வீசினான் இந்திரன். ஆனால் அந்த சூலாயுதம் அசுரனின் தலைக்குள் சென்று மறைந்தது. செய்தவறியாது திகைத்த இந்திரன், குயில் உருவம் எடுத்து வருணாபுரி வந்து ஆதிமூலேசுவரரை வழிபட்டான். பின்னர் தனியாக ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தும் பூஜித்து வந்தான்.

இதையடுத்து சிவபெருமான் இடப வாகனத்தில் காட்சியளித்து, ‘பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித படி அருகில் உள்ள கடற்கரைக்குச் சென்று, கடல்நுைரயை எடுத்து அசுரனின் மீது ஏவிவிடு’ என்று கூறி மறைந்தார்.

இந்திரனும் அவ்வாறே செய்ய, கடல் நுரை யானது கடினமான ஆயுதமாக மாறி, நமுசியை வதம் செய்தது. இதையடுத்து இந்திரன் மீண்டும் தேவலோகம் சென்று தன்னுடைய பதவியில் தொடர்ந்தான்.

இந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம், பெரியகோவிலுக்கு கிழக்குதிசையில் முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் விசுவநாதர் என்ற பெயரில் அருள்பாலித்து வருகிறார். 

மேலும் செய்திகள்