பெருமாளின் ஆசிபெற்ற உடையவர் ஆலயம்

உடையவரான ராமானுஜர் பல நூல்களை இயற்றியவர். குரு பக்திக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர். துறவரத்திற்கு பெருமை சேர்த்தவர். விரும்பி இறைவனடி சேர்ந்தவர்.

Update: 2018-04-17 08:03 GMT
காஞ்சியில் இருந்த ராமானுஜர், ஒரு முறை ரங்கநாதரை தரிசிக்க ஸ்ரீரங்கம் வந்தார். ஆலயத்திற்கு உள்ளே சென்று ரங்கநாதரின் திருவுருவையையும், அழகிய கண்களையும் கண்டு மயங்கி நின்றார் ராமானுஜர். ரங்கநாதப் பெருமாள், ராமானுஜரை ஆசீர்வதித்து அவருக்கு ‘உடையவர்’ என்ற நாமத்தை வழங்கினார்.

120 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்த ராமானுஜர் பல்வேறு துன்பங்களையும் போராட்டங் களையும் சந்தித்தாலும் இறை வழிபாடு மூலம் அனைத்தையும் வென்றார்.

தனது கடைசி காலத்தில் உடையவர், இறைவனை அடைய எண்ணம் கொண்டார். ஸ்ரீரங்கனை வேண்டினார். ரங்கனும் அவருக்கு அருள்புரிந்தார்.

‘உன்னுடைய தொடர்பு யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்கள் அனை வருக்கும் நான் நற்கதியை அளிக்கிறேன்’ என்றார் பெருமாள்.

மனம் மகிழ்ந்தார் உடையவர். ஆனால் அவருடைய சீடர் களுக்கு அவரை பிரிய மனம் இல்லை. எனவே தன்னைப் போலவே ஒரு விக்கிரகத்தை செய்யச்சொன்னார் உடையவர்.

சீடர்களும் அவரைப்போலவே ஒரு விக்கிரகத்தை செய்தனர். அதைக் கட்டி அணைத்து தன்னுடைய சக்தியை அந்த விக்கிரகத்தின் உள்ளே செலுத்தினார். அதனை ஸ்ரீபெரும்புதூரில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் எண்ணப்படியே தை மாதம் புஷ்ய நட்சத்திரத்தன்று அந்த விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இத்தனை பெருமைகளுக்கும் உரிய உடைய வருக்கு திருச்சியில் ஓர் ஆலயம் உள்ளது. ‘உடையவர் ஆலயம்’ என்பது தான் ஆலயத்தின் பெயரே.

சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பை தாண்டி உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம். எதிரே கருவறையில் உடையவர் எனும் ராமானுஜரின் திருமேனி உள்ளது.

இங்கு உடையவருக்கு கோடை உற்சவம் 5 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் திருவாதிரை அன்று உடையவர் வீதிவுலா வருவதுண்டு.

உடையவரை வேண்டுவதால் தடைபட்ட திருமணம் நல்ல முறையில் நடந்தேறும் என்றும், நாள்பட்ட பிணிகள் விலகும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

யாராவது இறந்துபோனால் 13-ம் நாள் அவருக்காக அவரது உறவினர் இங்கு வந்து உடையவர் சன்னிதியில் ‘ரியல் சாத்து’ என்ற சடங்கை நடத்துகின்றனர். 5 பேர் திவ்ய பிரபந்தம் ஓதுகின்றனர். இதனால் இறந்தவர் வைகுண்டம் செல்வதாக நம்பிக்கை.

உடையவரின் சன்னிதிக்கு வடதுபுறம் வெங்கடேச பெருமாள் சன்னிதி உள்ளது. கருவறையில் பெருமாள், பத்மாவதி தாயாருடன் சேவை சாதிக்கிறார். இங்கு பெருமாள் நின்றுகொண்டிருக்க தாயார் அமர்ந்த நிலையில் சேவை சாதிக்கும் அமைப்பு சிறப்பானது என்கின்றனர் பக்தர்கள்.

பெருமாளுக்கு எதிரே சக்கரத்தாழ்வார் காட்சி தரு கிறார். இவரும் அமர்ந்த நிலையிலேயே உள்ளார்.

இங்கு தாயாரிடம் வேண்டியது அனைத்தும் 3 மாதங்களில் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் தாயாருக்கு சேலை வாங்கி சாத்துவதுடன், 18 மூலிகைகளுடன் அபிஷேகம் செய்து தங்கள் நன்றிக்கடனை தெரிவிக்கின்றனர்.

தைமாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று பெருமாள்- தாயார் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. ஆடி மாதம் ஏகாதசி அன்று பெருமாள்- தாயாருக்கு ஜேஷ்டா அபிஷேகம் நடக்கிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இங்கு வரும் பக்தர்கள், பெருமாள் மற்றும் தாயாரை வணங்குவதுடன் உடையவரையும் வணங்கி அருள்பெற தவறுவதில்லை என்பது உண்மையே.

அமைவிடம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லலாம். ஆட்டோ வசதியும் உள்ளது. 

மேலும் செய்திகள்