நவக்கிரகங்கள் தரக்கூடிய நோய்கள்

மனித வாழ்வில் மட்டும் அல்ல.. உலக நடப்புகளுக்குக்கூட நவக்கிரகங்கள் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது.

Update: 2018-04-19 22:30 GMT
வக்கிரகங்கள் பற்றி கூறும் போது நாம் சற்று வேத காலம் வரை பின் நோக்கி சென்று வர வேண்டும். ஏனெனில் இந்த ஜோதிட சாஸ்திரம் மற்றும் நவக்கிரகங்கள் பற்றி ஒரே சமயத்தில் ஒரே நாளில் கூறப்படவில்லை. பல்வேறு நூல்கள், பல்வேறு ரிஷி, முனிவர்களின் கருத்துக்களின் தொகுப்பு தான் இன்று நாம் காணும் ஜோதிட சாஸ்திரமாகும்.

முதல் வேதமான ரிக் வேதத்தில் சூரியனை பற்றியே குறிப்பிடுகிறது. இதன்பின் வந்த வேதமாக கருதப்படும் யஜுர், சாம, அதர்வண வேதத்தில் உள்ள உட்பிரிவு காண்டமாக கருதப்படும் சீக்ஷா வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம் மற்றும் கல்பம். இதில் ஜ்யோதிஷம் மட்டும் வேத பாடத்தில் இருந்து பிரிந்து தனி பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

வேதத்தில் இருந்து ஜோதிட சாஸ்திரத்தை பிரித்து எடுத்து எழுதியவர் லக்கர் என்பவர். இவரிடமிருந்த 162 சுலோகங்கள் அடங்கிய ஓலைச்சுவடி தான், ஜோதிடத்தின் முதல் நூல். இவரைத் தொடர்ந்து ஜ்யோதிஷம் வேதாந்தம் என்னும் நூலில் அரிய வகையான கருத்துக்கள் அடங்கிய சாஸ்திர நூல் கிடைக்கப் பெற்றது. இதன் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை.

வேத காலம் முடிந்த பின்பு, வான சாஸ்திர ஆராய்ச்சி நூல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருந்தன. காசியப்ப சம்ஹிதையில் 18 சித்தாந்த நூல்களின் தொகுப்பு கொண்டு வரப்பட்டது. அன்றைய காலத்தில் அவரவர் பெயரில் சித்தாந்தங்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி (1) சூரியன் எழுதிய சூரிய சித்தாந்தம், (2) வசிஷ்டர் எழுதிய வசிஷ்ட சித்தாந்தம், (3) பராசரர் எழுதிய பராசர சித்தாந்தம், (4) பிதாமஹ எழுதிய சித்தாந்தம், (5) கஸ்யப்பர் எழுதிய கஸ்யப்ப சித்தாந்தம், (6) வ்யாஸர் எழுதிய வ்யாஸ சித்தாந்தம், (7) அத்ரி எழுதிய அத்ரி சித்தாந்தம், (8) மனு எழுதிய (இவர்தான் மனுதர்ம சாஸ்திரம் எழுதியவர்) மனு சித்தாந்தம், (9) கர்கர் எழுதிய கர்க சித்தாந்தம், (10) அங்கிரசர் எழுதிய அங்கிரச சித்தாந்தம், (11) யவனன் எழுதிய யவன சித்தாந்தம், (12) பிருகுமுனி எழுதிய பிருகு சித்தாந்தம், (13) நாரதர்முனி எழுதிய நாரத சித்தாந்தம், (14) லோமஸர் எழுதிய லோமஸ சித்தாந்தம், (15) செளனகர் எழுதிய செளனக சித்தாந்தம், (16) ச்யவனர் எழுதிய ச்யவன சித்தாந்தம், (17) மரீசியர் எழுதிய மரீசிய சித்தாந்தம், (18) பௌலசர் எழுதிய பௌலச சித்தாந்தம்.

இந்த 18 சித்தாந்த தொகுப்பில் ராகு-கேது பற்றி எங்குமே குறிப்பிடப்படவில்லை. 7 கிரகங்கள் பற்றியே குறிப்பிடுகிறார்கள். ராகு-கேது பற்றிய குறிப்புகள் தொடக்கக் காலத்தில் இல்லையென்றாலும், பின்நாளில் ராகு-கேது பற்றி புலிப்பாணி மற்றும் போகர் போன்றவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தை மொத்தமாக தொகுத்து இறுதி வடிவம் தந்தவர் வராகமிகிரர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.587 என்பதாகும். இவர் தொகுத்து வழங்கியதுதான் இன்றும் நடைமுறையில் உள்ளது. இவருக்கு பின் வந்த ஜோதிட சாஸ்திர நூல்கள் அனைத்தும், கணிதத்தை மையப்படுத்தி கணித முறைகளில் கையாளும் நிலைகளுக்கு சென்றபோதுதான் ஜோதிட ஆராய்ச்சிகள் பெருகின; நூல்கள் பெருகின.

ராமாயணத்தை எழுதிய வால்மீகி, ராமர் பிறந்த போது ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தன என்கிறார். ராமர்... நவமியில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார் எனவும், அப்போது சூரியன், செவ்வாய், குரு, சுக்ரன், சனி ஆகிய கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தன எனவும் குறிப்பிடுகிறார். ராமர் பிறந்த சமயத்தில் ராகு-கேது பற்றி குறிப்பிடவில்லை. அதே வால்மீகி சுந்தர காண்டம், யுத்த காண்டம் எழுதும் போது ராகு-கேது பற்றி குறிப்பிடுகிறார். இவை ஒரு பக்கம் இருந்தாலும் ஜோதிடத்தின் கடைசியாக தொகுப்பு வெளியிட்ட வராகமிகிரர், இவருடைய மகன் பிருதுயசன், இவருக்கு பின் வந்தவர்கள் தான் நவகோள்களுக்கும் உபநவகோள்கள் உள்ளது என்பதை வெளியிட்டனர். இதில் மாந்தி என்னும் குளிகன், எமகண்டன், அர்த்தப் பிரகரணன், பரிவேடன் கலைஞானபாதன், இந்திரதனுஸ், வியதீபாதன், தூமகேது, தூமன்சுரேசேன், காலன் என உப நவக்கிரகங்கள் தோன்றின. இதில் இன்றைய நடைமுறையில் மாந்தி என்னும் குளிகன் கிரகம் மட்டுமே அதிக சக்தி வாய்ந்த கிரகமாக உள்ளது என்பதை அனுபவப் பூர்வமாக உணரமுடிகிறது.

இன்றைய விஞ்ஞானம்... சூரியனைச் சுற்றியே அனைத்து கோள்களும் நகர்கிறது என்று கூறுகிறது. இதனை அன்றைய காலத்திலேயே ரிஷிகள், முனிகள் கூறியிருக்கிறார்கள். இன்றைய விஞ்ஞான அறிவை மிஞ்சும் அளவிற்கு ஜோதிட சாஸ்திரத்தில் பல விந்தைகளும், மறுக்கமுடியாத அதிசயமும், ஆச்சரியமும் தரக்கூடிய கருத்துக்கள் பொதிந்து உள்ளன.

நாம் கோவிலில் பார்த்து இருப்போம். நவக்கிரகங்களை தனி பீடத்தில் வைத்து இருப்பார்கள். இதில் என்ன விசேஷம் என்றால், ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தைப் பார்த்து கொள்ளாது. நான்கு திசைகள் பார்த்தவாறு கிரகங்களை அமைத்து இருப்பார்கள். இதில் சூரியனை மட்டும் நடுநாயகமாக கிழக்கு திசையைப் பார்த்தவாறு வைத்து இருப்பார்கள். கோவிலில் உள்ள நவக்கிரகங்கள் ஒன்றுக்கொன்று பார்க்காதபடி அமைக்கப்பட்டிருந்தாலும், ஜோதிட சாஸ்திரத்தில் நவக்கிரகங்களுக்குள் பார்வை உண்டு.

மனித வாழ்வில் மட்டும் அல்ல.. உலக நடப்புகளுக்குக்கூட நவக்கிரகங்கள் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் ெதரிவிக்கிறது. இந்த கிரகங்கள் இன்றி எதுவும் நடப்பது இல்லை. உலக நிகழ்வான ஆட்சி மாற்றங்கள், தலைவர்களின் மரணங்கள், நாடுகளுக்கு இடையே ஏற்படும் போர், இயற்கை சீற்றத்தால் ஏற்படும் நிலநடுக்கம், புயல், பெரும் மழை, சூறாவளிக் காற்று, பருவநிலை மாற்றங்கள் என்று எல்லாமே கிரகங்களின் சுழற்சியின் அடிப்படையில் தான் நடக்கிறது.

இதே போல் மனிதர்களுக்கு உடல் அமைப்பும், அவர்களது அறிவு, புத்தி வேலை செய்யும் விதம், மனிதனுக்கு வரக்கூடிய நோய்கள், மரணம் என எல்லாமே நவக்கிரகங்களின் பார்வைப்படியும், விதிப்படியுமே நடைபெறுகிறது.

மனிதனுக்கு அளவிற்கு மீறிய சோதனைகள் வரும்போது ‘எந்தக் கிரகம் என்னை பிடித்ததோ’ என்றும், ‘எந்தக் கிரகம் என்னைப் பிடித்து இப்படி ஆட்டிப் படைக்கிறதோ’ என்றும் புலம்புபவர்களின் எண்ணிக்கை ஏராளம். இதற்கெல்லாம் கிரகங்கள் தான் காரணம் எனில், ஒவ்வொரு கிரகமும் அதன் தன்மைக்கு ஏற்றவாறு நமக்கு நோய்களைத் தருகிறது. அதன் நிலைக்கு ஏற்றவாறு நோய்களின் வீரியத்தை உண்டாக்குகிறது. அதே கிரகங்களின் சுழற்சிக்கு ஏற்றவாறு நோய்கள் நீங்குவதும் உண்டு. 

மேலும் செய்திகள்