எளிமைக்கு உதாரணம்

அறிமுகமில்லாத நபர் கூட இலகுவாகச் சந்திக்கும் அரசனாகத்தான் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தார்கள்.

Update: 2018-04-19 22:30 GMT
மண்ணுக்கும், ஆணிவேருக்கும் மத்தியில் இருக்கும் இறுக்கமான பிணைப்பு போன்று மக்களோடு மக்களாகப் பின்னப்பட்ட தலைமையைக் காணத் துடிக்கிறது இன்றைய சமூகம்.

மக்களோடு மக்களாகக் கலந்து நிற்கக்கூடிய தலைமையைக் காணக் கிடைப்பது அரிதான ஒன்றாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட தலைமையால் மட்டுமே சமூகத்திற்கு நேர்த்தியான பாதை அமைக்க முடியும் என்பதை, காலங்கள் விட்டு சென்ற சுவடுகள் பயிற்றுவிக்கின்றன.

ஒரு சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்ட நபி (ஸல்) அவர்கள், தன்னை எப்போதும் அரசனாக மக்களிடம் வெளிப்படுத்தியது கிடையாது. பொதுமக்கள் எப்போதும் சந்தித்து அவர்களின் புகார்களை தெரிவிக்கும் வண்ணம் அவர்களின் தலைமைச்  செயலகம் அமைக்கப்பட்டிருந்தது. அறிமுகமில்லாத நபர் கூட இலகுவாகச் சந்திக்கும் அரசனாகத்தான் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தார்கள். இதற்கு உதாரணமாகப் பல நிகழ்ச்சிகள் உள்ளது. அதில் ஒன்றை காண்போம்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசல் மையப்பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர் களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பின் கழுத்து சிவந்து விட்டது.

‘முஹம்மதே எனது இரு ஓட்டங்கள் நிறையப் பொருட்களை தருவீராக. உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ, உமது செல்வத்தில் இருந்தோ நீர் கொடுக்கப் போவதில்லை’ என்று அந்த மனிதர் கூறினார்.

‘இழுத்துக்கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களைக் கொடுக்க மாட்டேன்’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.

‘நான் விட மாட்டேன்’ என்று அவர் கூறினார்.

இவ்வாறு மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறியபோதும், மூன்று முறையும் அவர் விடமாட்டேன் என்றார்.

அந்தக்  கிராமவாசியின் கூற்றை நாங்கள் செவியுற்ற போது அவரை நோக்கி விரைந்தோம்.
‘நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது’ என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

பின்னர் கூட்டத்தில் இருந்த ஒருவரை நோக்கி ‘இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீர்களாக’ என்றார்கள்.
பின்னர் மக்களை நோக்கி ‘நீங்கள் புறப்படுங்கள்’ என்றார்கள்.

நபித்தோழர் அபு ஹுரைரா (ரலி) அவர்கள் இந்த செய்தியை நமக்கு கூறுகின்றார்கள் (அபூதாவூத் 4694)

சாதாரண சிறு பதவியில் இருப்பவரைக்கூட முன் அனுமதி இல்லாமல் பார்க்க இயலாது. ஆனால் ஒரு நாட்டின் அரசரின் அவைக்கு சென்று அவரது கழுத்தில் துணியைப் போட்டு தனது தேவையை ஒருவர் கேட்கிறார் என்பது நபி (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தார்கள் என்பதை நமக்குத் தெளிவு செய்கிறது.

நபி (ஸல்) அவர்கள், தன்னை எப்போதும் அரசனாகப் பாவித்து மக்களை விட்டு தனக்கு தடுப்பணை போடவில்லை என்பதற்கு உதாரணமான இந்த இன்னொரு நிகழ்ச்சி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அதை நாம் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் வழியில் சிலர் அம்பெய்யும் போட்டி நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘இஸ்மாயிலின் வழித்தோன்றல்களே அம்பெய்யுங்கள், உங்கள் தந்தை அம்பெய்பவராக இருந்தார். நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன்’ என்று கூறினார்கள்.

மற்றொரு அணியினர் அம்பெய்வதை நிறுத்திக் கொண்டார்கள்.

‘ஏன் நிறுத்தி விட்டீர்கள்?’ என்று அவர்களிடம் நபி (ஸல்) கேட்டார்கள்.

‘நீங்கள் அந்த அணியில் இருக்கும் போது உங்களுக்கு எதிராக நாங்கள் எப்படி அம்பெய்வோம்?’ என்று அவர்கள் கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘நான் உங்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கின்றேன். எனவே நீங்கள் அம்பெய்யுங்கள்’ என்றார்கள். (புகாரி 2899).

எல்லோரும் எண்ணுவது போன்று எளிமையாய் வாழ்வது எளிதானதல்ல. “எளிமை என்பது இயல்பால் பெறப்பட்ட குழந்தை”. அந்தக்குழந்தையை, காலம் முழுக்க நபி (ஸல்) அவர்கள் தன் மடியில் பாதுகாத்து வந்தார்கள்.

எளிமையானவர்களுக்கு ஆடம்பரமாக வாழ்வது எப்படி சிரமமான காரியமோ, அதைவிட சிரமமானது எளிமையற்றவர்கள் தங்களை எளிமையானவர்களென்று காட்டிக்கொள்ள எடுக்கும் முயற்சிகள். அந்த முயற்சி என்ற சீப்பில்தான் ஒவ்வொரு நாளும் தங்களை அலங்காரம் செய்து கொள்கிறார்கள் இன்றைய தலைவர்கள்.

மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க, தலைமைத்துவத்தின் மீது தீரா ஆசை கொண்டுள்ளவர்களும், தற்போது தலைமைத்துவத்தில் இருப்பவர்களும், நபி (ஸல்) அவர்களின் அரசியல் வாழ்வை முழுமையாகப் பயில வேண்டும்.

ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.

மேலும் செய்திகள்