ஆன்மிகம்
24 ஆண்டுகளுக்கு பிறகு தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

24 ஆண்டுகளுக்கு பிறகு தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தாரமங்கலம்,

24 ஆண்டுகளுக்கு பிறகு தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் சிற்ப கலைக்கு ஒப்பற்ற சான்றாக விளங்குகிறது. குறிப்பாக கோவில் வளாகத்தில் உள்ள கல் தூண்களில் சாமி சிலைகள் கலை நுணுக்கத்துடனும், ஏராளமான சிற்பங்கள் கலைநயத்துடனும் திகழ்வதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள்.

இந்த கோவிலில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்து கடந்த 2 மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்றது. இதனிடையே, கும்பாபிஷேக விழாவின் முதல் நிகழ்வாக கடந்த 19-ந் தேதி தாரமங்கலம் அணைமேடு பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் தீர்த்தகுடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

அதைத்தொடர்ந்து கோவிலின் முன்புறம் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் 1,600 சதுரடி பரப்பில் 38 யாக சாலைகள் அமைத்து சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இந்தநிலையில், விழாவின் முக்கியநிகழ்வாக நேற்று காலை கைலாசநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி காலை 6 மணியில் இருந்து 7 மணி வரை பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜையும், அதைத்தொடர்ந்து 9.30 மணிக்கு ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் மற்றும் இதர சாமி சன்னதிகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், கோபுர கலசங்களுக்கு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது.

அப்போது, அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் ஓம் நமச்சிவாயா..! ஓம் சக்தி..! என கோஷங்களை எழுப்பி வணங்கியதை காணமுடிந்தது. இதையடுத்து மூலவர் கைலாசநாதர், சிவகாமி அம்பாள் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், நடராஜர், விநாயகர், அவினாசியப்பர், சகஸ்ரலிங்கம் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவை 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் முன்னின்று நடத்தினர். தாரமங்கலம், மேச்சேரி, நங்கவள்ளி, மேட்டூர், சேலம், ஓமலூர் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை அரசு செயலாளர் அபூர்வ வர்மா, ஆணையர் ஜெயா, மாவட்ட கலெக்டர் ரோகிணி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன், எம்.எல்.ஏ.க்கள் ராஜா, வெற்றிவேல், சின்னதம்பி, மருதமுத்து, சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன், உதவி ஆணையர் உமாதேவி, கோவில் செயல் அலுவலர் கலைச்செல்வி, தக்கார் ராஜா, ஊர்க்காவல் படை துணை கமாண்டர் பெரியசாமி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை தலைவர் கண்ணையன், தாரமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சின்னுசாமி, நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் செங்கோடன், முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவையொட்டி கூட்டநெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவிலில் நேற்று மாலையில் கைலாசநாதர் உடனுறை சிவகாம சுந்தரி உற்சவ மூர்த்திகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர், திருமண கோலத்தில் கைலாசநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து சாமி ஊர்வலம் நடந்தது.