ஆன்மிகம்
மூன்று கண்களுடன் சரஸ்வதி

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் வெண்ணிற ஆடையில் வெண் தாமரையில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் சரஸ்வதி தேவி அருள்பாலித்து வருகிறாள்.
தேவிக்கு சிவபெருமானைப் போல மூன்று கண்கள் காணப்படுகின்றன. நெற்றியில் உள்ள மூன்றாவது கண் ‘ஞானக் கண்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சரஸ்வதி தேவியை வழிபாடு செய்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

உப்பில்லாத சாதம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு அதிக விலைஉயர்ந்த ஆடைகளாக இருந்தாலும், அப்படியே புதிதுபோல சாத்துவது கிடையாது. அந்த ஆடையை தண்ணீரில் நனைத்து, காய வைத்து சாத்துவதுதான் நடைமுறை வழக்கமாக இருக்கிறது. அதே போல் இத்தல இறைவனுக்கு தினமும் உப்பில்லாத சாதம்தான் நைவேத்தியமாக படைக்கிறார்கள்.

அனுமன் பாதத்தில் சனீஸ்வரன்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இங்கு தன்னுடைய காலில் சனி பகவானை வைத்து அழுத்திய திருக்கோலத்தில் ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். சுயம்பு ஆஞ்சநேயராக அருளும் இந்த இறைவன், 11 அடி உயரத்தில் கையில் சஞ்சீவி மலையை சுமந்தபடி தரிசனம் தருகிறார். இவரை வழிபட்டால் சனி பகவானின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.

16 கரங்களுடன் நரசிம்மர்

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் நரசிம்மர் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் அருள்புரியும் நரசிம்ம மூர்த்தியானவர், 16 கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் விதமாக திரிபங்கி நிலையில் அபூர்வ வடிவத்தோடு சிறப்புடன் காட்சியளிக்கிறார். சூரியனும், சந்திரனும் வெண் சாமரங்கள் வீச, வெண் கொற்றக் குடையுடன் தியானித்தபடி இவர் வீற்றிருக்கிறார்.

எமதர்மனே வாகனம்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலுக்கு வெளியில் தென்கிழக்கில் எமதர்மன் சன்னிதி அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சிவபெருமானுக்கு, எமதர்மனே வாகனமாக இருப்பதாக கூறப்படுகிறது. பக்தர்கள் முதல் வழிபாட்டை இவருக்குத்தான் செலுத்த வேண்டுமாம். இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது, எம வாகனத்தில் இறைவன் எழுந்தருள்கிறார்.

தொகுப்பு: நெ.ராமன், சென்னை.