தங்கையின் கோபம் தீர்த்த தனயன்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள காடாளப் பெருமாளின் வைப்புத்தலம் ஒன்று இருக்கிறது. அந்தத் தலத்தின் பெயர் ஸ்ரீனிவாசபுரம். இங்குள்ளது ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில்.

Update: 2018-05-09 10:12 GMT
 கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த அழகான ஆலயம். இந்தக் கோவிலின் முகப்பை கடந்தவுடன் கருடாழ்வார் தனி சன்னிதியில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகாமண்டப நுழைவு வாசலின் இடதுபுறம் விநாயகர், வலதுபுறம் கிருஷ்ணன் திருமேனிகள் உள்ளன.

மகா மண்டபத்தின் உள்ளே வலதுபுறம் நிகமாந்த மகாதேசிகர், உடையவர், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் திருமேனிகள் தனி மண்டபத்தில் உள்ளன. இடதுபுறம் சுதர்சன பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வார் தனி சன்னிதிகளில் ஒரு சேர அருள்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தின் நுழைவு வாசலில் இடதுபுறம் மணிகள் மற்றும் வலதுபுறம் பிரபந்தன் என்ற இரு துவாரபாலகர்கள் கம்பீரமாக காவல் நிற்கின்றனர்.

பொதுவாக ஆலயங்களில் துவாரபாலகர்களின் திருமேனிகள் சுதையில் செய்யப்பட்டவையாக இருக்கும். ஆனால் இங்கு இந்த இரண்டு துவாரபாலகர்கள் திருமேனிகள் கருங்கற்களில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இருவருக்கும் பிற பரிவார தெய்வங்களுக்கு நடைபெறுவது போல் தினசரி பூஜைகள் உண்டு. இது இந்த ஆலயத்தின் தனி சிறப்பு.

அடுத்துள்ள கருவறையில் பெருமாள் ‘ஸ்ரீனிவாசன்’ என்ற திருநாமம் தாங்கி, நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளுக்கு இங்கு நான்கு கரங்கள். வலது மேல் கரத்தில் சுதர்சன சக்கரமும் இடது மேல் கரத்தில் வாஞ்ச ஜன்ய சங்கும், வலது கீழ் கரத்தில் வரத முத்திரையுடன் சேவை சாதிக்கும் பெருமாளின் இடது கரம் பூமியை நோக்கி தாழ்ந்துள்ளது. பெருமாளின் இருபுறமும் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி காட்சி தருகின்றனர்.

காளியம்மன்

பெருமாளின் பெயரான ஸ்ரீனிவாசன் என்ற பெயரிலேயே இந்த தலம் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் இத்தலம் தற்போது காளி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதற்கு காரணமும் உண்டு. இந்த ஊரில் மந்தகரை காளியம்மன் என்ற காளியை ஊர் மக்கள் சிலர் ஓர் நதியில் கண்டெடுத்தனர். அந்த காளியை ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்து வைத்தனர். ஊருக்கு புதிதாக வந்த அம்மன்தானே என எண்ணிய ஊர்மக்கள் அந்த காளியை வழிபடாமல், ஊரின் வடபால் இருந்த மாரியம்மனை மட்டும் வழிபட்டு வந்தனர்.

பொறுத்துப் பார்த்தாள் காளி. காளியின் மனம் உக்கிரமடைந்ததால் ஊர் மக்களில் பலருக்கு நோய் வந்தது. பயந்துபோன மக்கள் ஸ்ரீனிவாசப் பெருமாளை சேவித்து காரணம் கேட்டனர். பெருமாள் தனது தங்கையான காளியம்மனை சாந்தமாகும்படி கூற அவள் உக்கிரம் தணிந்தது. ‘இனி இந்த ஊர் உன் பெயரால் அழைக்கப்படும்’ என பெருமாள் அவளுக்கு வரம் அளித்தார். அதுமுதல் ‘ஸ்ரீனிவாசபுரம்’ எனும் இந்த ஊர், ‘காளி’ என அழைக்கப்படலாயிற்று.


தினசரி இரண்டு கால பூஜைகள் நடக்கும் இந்த ஆலயம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள ஆஞ்சநேயர் சக்தி உள்ளவர் என பக்தர்கள் நம்புகின்றனர். அமாவாசை தோறும் இங்கு மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.

தங்கள் வேண்டுதல்களை ஒரு சீட்டில் எழுதி, ஒரு தேங்காயையும் அதனுடன் இணைத்து ஒரு துணியில் கட்டுகின்றனர். பின்னர் ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்து, அந்த துணி முடிப்பை ஆஞ்சநேயருக்கு அருகே உள்ள விட்டத்தில் கட்டுகின்றனர். அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது. பின்னர் திரும்ப வந்து தாங்கள் கட்டிய துணி முடிச்சியை அவிழ்த்துவிட்டு, ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி, தயிர்சாதம் படைத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து நிம்மதி பெறுகின்றனர்.

திருவிழாக்கள்

இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. வைகாசி திருவோணத்தில் கருடசேவை நடைபெறும். அப்போது பெருமாளின் திருக்கல்யாணம் உற்சவமும், கருட வாகனத்தில் வீதியுலா காட்சியும் உண்டு. ஆனி மாத திருவோண நட்சத்திரத்தில் புஷ்ப விமானத்தில் பெருமாள் தன் தேவியர்களுடன் வீதியுலா வருவர். தைமாதம் மாட்டுப்பொங்கலன்று பாரிவேட்டை என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று பெருமாளும், தேவியர்களும் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். மார்கழி மாதம் திருமஞ்சனமும் வைகுண்ட ஏகாதசியில் இறைவனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகளும் நடைபெறுகின்றன.

ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணஜெயந்தி திருவிழாவில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மார்கழி மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் உண்டு. ஆவணி சுவாதியில் கருடாழ்வாருக்கும் வைகாசி விசாகத்தில் நம்மாழ்வாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சித்திரையில் வரும் சக்கரத்தாழ்வார் ஜெயந்தியில் சக்கரத்தாழ்வாருக்கு பிரத்யேக சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

பிரதோஷ நாட்களில் இங்குள்ள சுதர்சன பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு வெல்லம், பானகம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். இங்குள்ள சுதர்சன பெருமாள் வெளியே புறப்பட தயாராக இருக்கும் நிலையில் அவரது பாத அமைப்பு உள்ளது. தவிர அவரது கோலமும் சற்றே உக்கிரமாக இருப்பதும் நிஜம். இவரை பிரார்த்தனை செய்தால் பில்லி, சூனியம், பகை விலகி வாழ்வில் நிம்மதி நிலவும் என பக்தர்கள் நம்புகிறார்கள். கேட்டதை கொடுக்கும் பெருமாளை நாமும் ஒரு முறை காளிக்கு சென்று தரிசித்து வரலாமே.

நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு தென்மேற்கே 13 கிலோமீட்டர் உள்ளது காளி என்ற இந்த தலம். இந்த ஆலயம் செல்ல மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதியும், மினிபஸ் வசதியும், ஆட்டோ வசதியும் உண்டு.

- ஜெயவண்ணன் 

மேலும் செய்திகள்