தட்சிணாமூர்த்தி சுவாமி தலைமேல் எழுந்த பேரொளி

சங்கர நாராயண சுவாமிகளின் வரலாறு பற்றியும், அவர் சமாதி அடைந்தது பற்றியும் கடந்த வாரம் பார்த்தோம். அவரை பனையூரில் சமாதி வைத்தபோது, ஒரு பிரச்சினை எழுந்தது.

Update: 2018-05-09 10:27 GMT
சங்கரநாராயண சுவாமிகள் ஜீவ சமாதி வைக்கப்பட்ட இடத்திற்கு, நெல் கட்டும் செவல் ஜமீனைச் சேர்ந்த காவலர்கள் சிலர் வந்தனர்.

‘இது நெல் கட்டும் செவல் ஜமீனுக்குச் சொந்தமான இடம். இதில் யாரை கேட்டு சமாதி வைத்தீர்கள். ஜமீன்தாரை உடனே வந்து பாருங்கள்' எனக் கூறினர்.

அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ந்தனர். இப்பிரச்சினை எப்படி தீருமோ.. என பயந்தனர்.

ஆனால் சங்கரநாராயண சுவாமிகளின் மகனான தட்சிணாமூர்த்தி சுவாமிகள், ஒரு தீர்க்கமான முடிவுடன் ஜமீன்தாரைப் பார்க்கப் புறப்பட்டார். அப்படி அவர் புறப்பட்டபோது, அவர் தலைக்கு மேல் ஒளி தோன்றி அவருடனேயே சென்றது. இதைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

அரண்மனை உப்பரிகையில் இருந்து இந்தக் காட்சியைப் பார்த்த ஜமீன்தாரும் அதிசயம் அடைந்தார். ‘இது என்ன ஒளி? ஏதோ நடக்க கூடாதது நடக்க போகிறதோ?' என அச்சமுற்று ராஜ குருவை கூப்பிட்டு ஆலோசனை செய்தார். அதற்குள் தட்சிணாமூர்த்தி சுவாமி அரண்மனைக்கு வந்து சேர்ந்து விட்டார். வானத்து ஒளி மறைந்தது. வந்துள்ளவர் மகான் என புரிந்து கொண்ட ஜமீன்தார் சுவாமியிடம் மன்னிப்பு கோரினார். ‘எம் பூமியில் இதுபோல ஒரு மகான் அடங்க நாம் என்ன புண்ணியம் செய்தோமோ..' என நெகிழ்ந்தார்.

பின்னர் ஜமீன்தார், குடும்பத்தோடு பனையூர் வந்து, சங்கர நாராயண சுவாமிகளின் ஜீவ சமாதியை வணங்கி நின்றார். சமாதியைப் பேணிக் காக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

அதன் பிறகு அப்பீடத்தில் அமர்ந்து தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பலருக்கும் அருள்புரிய ஆரம்பித்தார். அவர் தம் தந்தையார் அடக்கம் கொண்ட சமாதியில் பவுர்ணமித் திதியில் ‘செல்லியாரம்மன் வழிபாடு' செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு காலகட்டத்தில் இவர் பக்தியை மெச்சி எழில் கொஞ்சும் கன்னிப்பெண் வடிவில் செல்லியாரம்மன் அங்கு வந்து, சுவாமிகள் அளிக்கும் பூச்செண்டை பெற்றுச் சென்றுள்ளார். இதையறிந்த காரணத்தினால் பக்தர்களுக்கு இவர் மீது மேலும் பிரியம் ஏற்பட்டது.

தட்சிணாமூர்த்தி சுவாமிகள் காலத்திலும் பனையூர், சித்தரின் அருள் தலமாக விளங்கியது. அன்பர்கள் பாதயாத்திரையாகப் பனையூர் வந்து நெடுநாள் பிணி தீர்ந்து செல்வார்கள். தம்மை வணங்கி நிற்கும் ஏழை எளியவர்களை சுவாமிகள் ஆதரித்து நல்வழிக்காட்டினார்.

குருவருளும், திருவருளும் கூடி நிற்கும், சிதம்பர எந்திரத் தகடுகளை சுவாமிகள் தம் திருக்கரங்களால் அன்பர்களுக்கு அணிவிப்பார். நோய் நீங்கும், துயர் நீங்கும், தொழில் நலம் பெருகும், மன நலம் உறுதிபெறும்.

இந்த ஒடுக்கத்தில் சுவாமிகள் செய்த அற்புதம் பல. அதில் சிலவற்றை காணலாம்.

பனையூர் அருகே உள்ள ராயகிரியைச் சேர்ந்தவர் புன்னவனத்தம்மாள். இவர் சுவாமியைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம், உணவு தயார் செய்து எடுத்துக் கொண்டு செல்வாராம். அவர் வரும் முன்பே, தன்னுடைய சீடர்களிடம் ‘இன்று எனக்கு உணவு வெளியில் இருந்து வருகிறது' என சுவாமி கூறிவிடுவாராம். அந்த அளவுக்கு முக்காலமும் உணர்ந்த ஞானியாகவே தட்சிணாமூர்த்தி சுவாமி வாழ்ந்துள்ளார்.

சித்திரை மாதம் 20-ந் தேதி குரு பூஜை அன்று பனையூர் அருகே உள்ள கொல்லன் பட்டறையில் மிக்கேல் என்பவர் செப்பு காசு ஒன்றின் பாதியை தங்கமாக்கி, அதை ஒருவரிடம் கொடுத்து ‘இதை கொண்டு போய் தட்சிணாமூர்த்தி சுவாமியிடம் கொடு' என்றாராம்.

அதை வாங்கிய சுவாமி ‘என்ன மிக்கேல் கொடுத்து விட்டாரா..?' எனக் கேட்டு, தனது எச்சிலை காசில் தடவியவுடன் அது முழுவதும் தங்கமாகி விட்டது. அதை புன்னவனத்தம்மாளிடம் கொடுத்து, ‘இதை வைத்துக்கொள். உன் குடும்பம் செழிப்பாகும். இன்று முதல் குரு பூஜைக்கு உங்கள் குடும்பம் தான் அன்னதானம் செய்யவேண்டும்' என்று கூறியிருக்கிறார். அதுபோலவே தங்கக் காசு கொண்டு செல்வச்செழிப்பான அவரது குடும்பம் கடந்த 174 வருட காலமாக அன்னதானம் செய்து வருகிறார்கள்.

நெல்கட்டும் செவல் ஜமீனுக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் மகனை அழைத்துக்கொண்டு பனையூர் வந்தார். சுவாமியை வணங்கி நின்றார். சுவாமி அவரின் மகனிடம் மந்திரம் ஒன்றைக் கூறினார். அதை தங்கு தடையின்றி அந்தத் தாயின் மகன் திருப்பி கூறிவிட்டார். இதையடுத்து சுவாமிகள் ‘இன்றிலிருந்து உன் மகன் சிவஞானம் என அழைக்கப்படுவான்' என கூறி அனுப்பி வைத்தார். சிவஞானம், தவவலிமை பெற்று வாழ்ந்து வந்தார்.

ஒருசமயம் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் சிவஞானம். அவர் உடல் அசைவின்றி இருந்தது. மூச்சுக்காற்று நின்றுவிட்டது. எனவே அவர் இறந்து விட்டார் என உறவினர்கள்அவரை அடக்கம் செய்ய முயற்சி செய்தனர். அப்போது தட்சிணாமூர்த்தி சுவாமிகள், ‘சிவஞானத்துக்கு ஆபத்து. இந்த மந்திரத்தினை அவன் காதில் ஓது.. அவன் எழுந்து விடுவான்' என்று கூறி ஒருவரை அனுப்பினார். அவரும் அங்கு சென்று சிவஞானம் காதில் மந்திரத்தை ஓத, உடனடியாக கண்களைத் திறந்தாராம்.

பனையூருக்கு அடுத்த சங்கு புரத்தில் பிச்சை என்ற பக்தர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைத்து வழிபட்டு வந்தார். ஆனால் கோவிலில் அருள் இல்லை. எனவே சுவாமியை சந்தித்தார். சுவாமி வேல் ஒன்றைக் கொடுத்து அனுப்பினார். வேலின் மகிமையால் தற்போது சங்குபுரம் சுப்பிரமணிய ஆலயம் சிறப்பு பெற்று விளங்குகிறது.

சங்கரநாராயண சுவாமிகள் ஜீவ சமாதி பெற்றுச் சரியாக ஐம்பத்து ஐந்தாவது ஆண்டு கடந்தது. அது வரை தட்சிணாமூர்த்தி சுவாமிகள் அனைவருக்கும் அருளிவந்தார்.

ஒரு நாள் தான் அடங்கும் நாளை குறித்து, ‘இந்நாளில் அடங்குவேன். என் சமாதி அருகே புற்று ஒன்று வளரும். அதைப் பாதுகாத்து வணங்கி வாருங்கள். இங்கு வந்து வணங்குவோருக்கு கேட்ட வரம் கிடைக்கும்' என அருளினார். 1890-ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27-ம் நாளில் பனையூர் இரண்டாவது ஆண்டவராகத் திகழ்ந்த தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார். தந்தையின் ஒடுக்கத்திற்குப் பக்கத்திலேயே தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் சமாதியும் அமைக்கப்பெற்றது.

இந்த சமயத்தில் குன்றக்குடி மேலமடத்து அறப்பணிகளின் பொறுப்பாளராக விளங்கிய கணபதி சுவாமிகள் பனையூருக்கு வந்தார். தினமும் தந்தை, மகன் அடங்கியிருக்கும் இடத்தில் அமர்ந்து பூஜை செய்தார். இந்த இடத்தில் அபிஷேகம் செய்ய இயலாது. தானே வளர்ந்து நிற்கும் புற்றையும் பாதுகாக்க வேண்டும். எனவே சிறப்பான முறையில் இக்கோவிலை கட்டி சிறப்பு செய்ய வேண்டுமென ஆசைப்பட்டார். அதற்கான பணியிலும் இறங்கினார்.

அதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, ஒரு சிறப்பு தரிசனம் அவருக்குக் கிடைத்தது. சுமார் 60 வருடங்களுக்கு முன்பு அடங்கிய சங்கரநாராயணர் உடல் அப்படியே கெடாமல் இருப்பதைக் கண்டார். ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று விட்டார். எனவே இனி இப்படியே ஆலயம் அமையக்கூடாது என எண்ணியவர்் ஜீவ சமாதி ஸ்தலத்தினை சுரங்கக் கோவிலாகவும், அதன் மேல் சிவனையும், முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்து தற்போதுள்ள கோவிலையும் கட்டினார்.

இந்த ஆலயத்தில் சிவனுக்கும், அவர் மகன் முருகனுக்கும் செய்யப்படும் அபிஷேகம், சுரங்கத்தினுள் இருக்கும் பனையூர் ஆண்டவர்களான தந்தைக்கும், மகனுக்கும் கிடைக்கிறது.

மூலஸ்தானத்தில் சிவனையும், முருகப்பெருமானையும் வணங்கி விட்டு, ஒரு ஆள் மட்டும் இறங்குவது போல அமைக்கப்பட்ட சுரங்க பாதை வழியாக உள்ளே நுழைந்து சித்தர்கள் பீடத்தில் அமர்ந்து தியானிக்கலாம்.

கோவிலின் வலது பக்கத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவருக்கு அருகில் ‘ஆசனக்கல்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டவர்களின் அருட்சக்தி கொண்ட அந்த ஆசனக் கல்லில் எவர் அமர்ந்தாலும் அவரைப் பிடித்துள்ள பிணிகள், பீடைகள், பேய், பிசாசுகள் விலகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

சிதம்பரச் சக்கர எந்திரத் தகட்டை அணிந்து கொண்டு பனையூர் ஆண்டவர்கள் ஒடுக்க தலத்தில் நாற்பத்தெட்டு நாட்கள் ‘வயனம் காத்தல்' என்னும் நோன்பிருந்தால் குழந்தைப் பாக்கியம் கிட்டுகிறது.

சிதம்பரச் சக்கர எந்திரத் தகடுகளைப் பனையூர் ஆண்டவர்களின் திருவருட் பிரசாதமாகப் பெற்றுக் கொள்ளும் பக்தர்கள் அகமகிழ்ந்து செல்கின்றனர்.

திருநெல்வேலியில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் இருக்கிறது கரிவலம்வந்த நல்லூர். இங்கிருந்து 10 கிலோ மீட்டர்தொலைவில் பனையூர் உள்ளது.

-சித்தர்களைத் தேடுவேம்.

- முத்தாலங்குறிச்சி காமராசு


தட்சிணாமூர்த்தி சுவாமியின் முதல் சீடர்


சுந்தரபாண்டியபுரம் பழனிக்குமார் என்பவர், தட்சிணாமூர்த்தியின் அருட்கடாட்சத்தை அறிந்து அவரைப் பார்க்கப் புறப்பட்டார். வெறுங்கையுடன் சென்று சுவாமிகளைத் தரிசிக்கக்கூடாதென, தன்னுடைய தோட்டத்தில் பழுத்திருந்த சில மாங்கனிகளைப் பறித்து எடுத்துக்கொண்டு, பாதயாத்திரையாகப் புறப்பட்டார். பாதி வழியில் செல்லும்போதே இருட்டி விட்டது. எனவே சோழபுரத்திலுள்ள சாவடிக்குள் நுழைந்தார். துணிப்பைக்குள் இருந்த மாங்கனிகளைத் தலைமாட்டில் வைத்து விட்டுத் துண்டை விரித்துத் தலையைச் சாய்த்தார். சாவடியில் படுத்திருந்த ஒருவர் ‘ஐயா! தலைமாட்டில் ஏதோ வைத்திருக்கிறீரே! பை பத்திரம். இங்கு எருமை மாடுகளைப் போல் எலிகள் நடமாடும். இழுத்துச் சென்றுவிடப் போகிறது’ என்றார்.

பழனிக்குமார் படக்கென எழுந்து தட்சிணாமூர்த்தி சுவாமிகளை நினைத்து வழிபட்டு, பையை எலி இழுத்துச் சென்று விடாமல் பாதுகாத்துத் தரவேண்டினார். காலையில் தூங்கி எழுந்த போது, பை பத்திரமாக இருப்பதைக் கண்டு நிம்மதி அடைந்தார்.

பின்னர் பனையூர் சென்று தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் முன் தாம் கொண்டு வந்த மாங்கனிகளை பையில் இருந்து எடுத்து வைத்து வணங்கி நின்றார்.

பழனிக்குமாரை அன்போடும், பரிவோடும் நோக்கிய சுவாமிகள், சற்றே புன்னகைத்து ‘என்னப்பா? இரவு முழுவதும் நம்மை எலிகளை விரட்டிக் கொண்டிருக்குமாறு செய்து விட்டாயே’ என்றார்.

வியப்பும், திகைப்பும் கொண்ட பழனிக்குமார் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்து விட்டது. ‘மாங்கனியை காப்பாற்ற வேண்டும் என வேண்டியது இவருக்கு புரிந்து காவலாகவே வந்து விட்டாரே?’ என்று ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

அதன் பிறகு பழனிக்குமார், சுவாமியின் சீடராக அங்கேயே தங்கி விட்டார். அவர்தான் சுவாமியின் முதல் சீடர். பிற்காலத்தில் அவர் நித்தியானந்த சுவாமிகள் என்ற பெயர் பெற்று சுவாமிகளுக்குத் தொண்டாற்றி வந்தார்.

சுவாமிகளின் திருவருளுடன் வடக்கே பயணம் செய்தார். குன்றக்குடியில் 1878 ஜூலை மாதம் 5-ந் தேதி திருமடம் ஒன்றை நிறுவினார். அன்னக்காவடி எடுத்து திருமடத்துக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு அன்னதானச் சேவை புரிந்து வந்தார். இந்தச் சேவை அப்பகுதியிலுள்ள நகரத்தார்களின் கவனத்தைக் கவர்ந்தது. அவர்கள் பல உதவிகளை புரிந்து ஆதரித்தனர். நித்தியானந்த சுவாமிகள் உருவாக்கிய மடம் ‘மேலமடம்’ என்று அழைக்கப்பட்டது. இம்மடத்தில் வழி வந்தவர்களே, தற்போது பனையூர் ஒடுக்கத்தினை பராமரித்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்