சிலுவை மொழிகள்

“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் (லூக்கா 23:47)

Update: 2018-05-23 06:00 GMT
இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார்.

ஊருக்கு திரும்பும் ஒரு தொலை தூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் குதூகல மனநிலையாய், இயேசு தனது மண் வாழ்வை முடித்து வைக் கிறார்.

நமது உயிர் இறைவனின் உயிர் மூச்சினால் உருவானது. அந்த உயிர்மூச்சு இறைவனிடமே திரும்பிச் செல்லும் எனும் உத்தரவாதமே இவ்வுலக வாழ்வை மகிழ்ச்சியாக்கும். உயிரின் பிறப்பிடமும், உயிரின் புகலிடமும் இறைவனின் கரங்களே.

“உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்” (சங் 31:5) எனும் இறைவாக்கின் நிறைவேறுதல் இது. இயேசு இங்கே, தந்தையே என்பதை சேர்த்துக் கொள்கிறார். உலகின் பாவத்தைச் சுமந்ததால் இறைவனின் அருகாமையை விட்டு விலகிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் விழுந்தவர் இயேசு. அப்போது, “இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்” என கதறினார்.

இப்போது எல்லாம் நிறைவேறியபின் மீண்டும் ‘தந்தையே’ என அழைத்து தன் உறவை உறுதி செய்து கொள்கிறார்.

சிலுவையில் இயேசு ஏழு வார்த்தைகளைச் சொன்னார். ‘ஏழு’ என்பது முழுமையைக் குறிப்பது. தனது வாழ்வின் முழுமையை இயேசு வெளிப்படுத்துகிறார்.

முதல் வாசகம் மன்னிப்பைப் பேசியது, இரண்டாவது வாசகம் மீட்பைப் பேசியது, மூன்றாவது வாசகம் பரிவைப் பேசியது, நான்காவது வாசகம் துயரத்தைப் பேசியது, ஐந்தாவது வாசகம் ஏக்கத்தைப் பேசியது, ஆறாவது வாசகம் வெற்றியைப் பேசியது, ஏழாவது வாசகம் ஆறுதலைப் பேசியது.

ஆன்மிகத்தின் முழுமையும், செழுமையும் இயேசு பேசிய வார்த்தைகளுக்குள் அடங்கி விட்டன எனலாம்.

‘தந்தையே உம் கைகளின் என் உயிரை ஒப்படைக்கிறேன்’ எனும் வார்த்தையில் நம்பிக்கை வெளிப்படுகிறது. தந்தை தன்னை கைவிடமாட்டார் என முழுமையாய் நம்பும் மழலையின் மனநிலை அது. “நீங்கள் குழந்தையாய் மாறவேண்டும்” என இயேசு குறிப்பிட்டது தந்தை மீது கொள்ளவேண்டிய முழுமையான நம்பிக்கையையும் குறிக்கும்.

தந்தையின் கரங்கள் ஆறுதலின் கரங்கள். தந்தையின் தோள்களில் துயிலும் மழலை எத்தனை சத்தங் களுக்கு இடையே வாழ்ந்தாலும் நிம்மதியாய் உறங்கும். பெற்றோரின் அருகாமை இல்லையேல் நிசப்தமான பஞ்சு மெத்தை கூட அவர்களை கலங்கடிக்கும். தூங்க விடாமல் செய்யும். இறைவனின் கரங்களில் நமக்கு ஆறுதல் கிடைக்கிறதா?

தந்தையின் கரங்களில் கிடைப்பது முழுமையான பாதுகாப்பு. தந்தையின் விரலைப் பிடித்துக் கொண்டு செல்லும் மழலையின் முகத்தைப் பார்த்திருக் கிறீர்களா? உலகின் எந்த பெரிய வீரன் வந்தாலும் தந்தை தன்னைப் பார்த்துக் கொள்வார் எனும் அதிகபட்ச நம்பிக்கை அந்த கண்களில் மின்னும். இதைவிடப் பெரிய பாதுகாப்பு இனிமேல் இல்லை எனும் நிம்மதி அந்த முகத்தில் தெரியும்.

நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இந்த வாசகம் கேட்கிறது. இறைவனின் சித்தத்தை நிறைவேற்று பவர்களுக்கு மட்டுமே தந்தையின் கரம் கிடைக்கும். தந்தையின் விருப்பத்தை நிராகரித்து நடப்பவர்கள் எப்போதுமே அந்த கரங்களுக்குள் அடைக்கலம் புகுவதில்லை.

அந்த நம்பிக்கையைப் பெறுவதற்குரிய வகையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தந்தையின் கரத்தோடு இணைந்து இருப்பவர்களுக்கே ஆறுதல் கிடைக்கும். நமது வாழ்க்கை எதில் ஆறுதல் அடைகிறது. உலகத்தின் கரங்களிலா? அல்லது உன்னதரின் கரங்களிலா?

தந்தையோடு இருப்பதே உண்மையான பாதுகாப்பு. நமது வங்கிக்கணக்குகளும், நில புலன்களும் நமக்கான பாதுகாப்பல்ல. களஞ்சியத்தை எவ்வளவு தான் இடித்துக் கட்டினாலும் ஆன்மா இழந்து போனால் என்ன பயன்?

நமது நம்பிக்கையை அழிந்து போகும் செல்வங்களிலிருந்து மாற்றி, இறை வனின் அருகாமையில் வைப்போம்.

“என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்..” என யோவான் 10:27-28 ல் இயேசு கூறினார்.

இயேசுவின் கரங்கள் ஆயனின் கரங்கள். அவை நம்மைப் பற்றிக்கொள்ள ஆயத்தமாய் இருக்கின்றன. பற்றிக்கொண்டால் விட்டு விடாமல் பாதுகாக்கவும், ஆறுதல் அளிக்கவும், நம்பிக்கை அளிக்கவும் அவை தயாராக இருக்கின்றன.

நமது இதயம் எங்கே இருக்கிறது? இறைவனின் கரங்களிலா? உலகத்தின் கரங்களிலா?

“நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்.

“அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்” எனும் எபிரேயர் 12:2 வசனத்தில் நம்பிக்கை வைப்போம்.

- சேவியர்

(நிறைவு பெற்றது) 

மேலும் செய்திகள்