வறுமையிலும் வள்ளல் தன்மை

“இவர்கள் தங்கள் நேர்ச்சைகளையும் நிறைவேற்றுவார்கள். நீண்ட வேதனையுடைய மறுமை நாளை பயந்து கொள்வார்கள்.

Update: 2018-05-23 06:57 GMT
மேலும் அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள்” (திருக்குர்ஆன் 76:7-8)

அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கண்டு மனம் மகிழ்ந்த அல்லாஹ், இந்த வசனத்தை திருமறையில் இறக்கி வைத்து, நபிகளார் (ஸல்) மூலம் அன்னை பாத்திமா (ரலி) அவர்களுக்கு சுபச்செய்தி சொன்னான். இந்த நிகழ்வை காண்போம்.

நபி பெருமானார் (ஸல்) அவர்கள் எப்படி தன் வாழ்க்கையை வறுமையோடு ஒன்றிணைந்து அமைத்துக் கொண்டார்களோ, அதே அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரது மகள் பாத்திமா (ரலி) அவர்களும் தன் வாழ்வை வறுமையோடு தோழமை கொண்டே வாழ்ந்து வந்தார்கள்.

பாத்திமா (ரலி) அவர்கள் வீரர் அலி (ரலி) அவர்களின் வாழ்க்கைத் துணையாய் ஆனபோதிலும், அவர்கள் வாழ்வில் வசந்தத்தைக் காணவில்லை. இஸ்லாமிய தத்துவங்களால் அவர்கள் இதயங்கள் இன்பத்தில் திளைத்திருந்தன. ஆனால் வாழ்க்கையோ வறுமையில் தான் உழன்று கொண்டிருந்தது. ஒரு நாள் உண்டால் பலநாட்கள் பட்டினி கிடக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

ஒரு முறை பாத்திமா (ரலி) அவர்களின் மகன்கள் இருவரும் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டனர். அந்த சூழ்நிலையில் அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:

‘என் அருமைச் செல்வங்கள் இந்த நோயிலிருந்து வெகுவிரைவில் மீண்டு வருவார்களேயானால், நான் இதற்கு பதிலாக, இறைவனுக்கு நன்றி செலுத்த மூன்று நாட்கள் நோன்பு நோற்பேன்’.

இதனை அறிந்த அலி (ரலி) அவர்களும் பாத்திமா (ரலி) அவர்களோடு தானும் இணைந்து, நோன்பு வைக்க பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.

அல்லாஹ்வும் அவர்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு, அருமைச் செல்வங்கள் இருவரையும் அந்த நோயிலிருந்து காப்பாற்றி சுகமளித்தான். எனவே அவர்கள் இருவரும் நேர்ச்சையை நிறைவேற்ற எண்ணம் கொண்டார்கள்.

கடும் கோடை வெயில், அலி (ரலி) அவர்கள் ஒரு ஈச்சமரத் தோப்பிற்கு நீரிறைத்து விடும் வேலையை ஒப்புக்கொண்டார்கள். மிகவும் குறைந்த தினக்கூலிக்கு வேலை செய்தார்கள். வேலை முடிந்த மாலை வேளையில் சொற்பமான கூலியை பெற்றுக் கொண்டு கடைத்தெருவிற்கு வந்தார்கள்.

அங்கே அவர்கள் கைவசம் இருந்த சொற்பத் தொகையில், நன்றாக சலிக்காத கோதுமை மாவைத் தான் அவர்களால் வாங்க முடிந்தது.

பாத்திமா (ரலி) அவர்களும் கல் திருவையில் போட்டு முடிந்த அளவிற்கு அதனை அரைத்து ரொட்டிக்கான மாவை தயார் செய்தார்கள். நோன்பு திறக்கும் நேரம் நெருங்கியது. மாவை தண்ணீர் விட்டு பிசைந்து ரொட்டிகளைத் தயார் செய்தார்கள்.

கணவன்-மனைவி இருவரும் நோன்பு திறப்பதற்காக அமர்ந்திருந்த வேளையில், அவர்கள் வீட்டு வாசலில் ஒரு அபயக்குரல்.

“சொர்க்கத்தின் தலைவியே! அன்னை பாத்திமாவே! நான் ஒரு பரம ஏழை. பசியாறி பல நாட்கள் ஆகிவிட்டன. என்னால் நடக்க முடியாத அளவு பலவீனப்பட்டு போனேன். அன்னையே! என் பசி தீர ஏதாவது உணவளியுங்கள்” என்று வேண்டி நின்றார்.

நோன்பு திறக்கும் வேளை. இருப்பதோ குறைந்த உணவு, என்ன செய்வது? இருவருமே அந்த உணவை ஏழைக்கு வழங்கி விட முடிவு செய்தார்கள். அதன்படி ஏழைக்கு அந்த உணவை வழங்கி விட்டு, அன்றைய தினம் தண்ணீரைக் கொண்டே நோன்பை நிறைவு செய்தார்கள்.

மறுநாள் இரண்டாம் நோன்பு. அதே கடின உழைப்புக்குப் பின் அதே சொற்பமான கூலியைப் பெற்று கோதுமை மாவினை வாங்கி வந்தார் அலி (ரலி) அவர்கள். அன்றும் நோன்பு திறக்கும் நேரம் வாசலிலிருந்து ஒரு அழுகுரல். “நானோ அநாதை, ஆதரிப்பார் யாருமில்லை. பசியை போக்க வழியும் தெரியவில்லை. அருமை நபிகளாரின் அன்பு மகளே, பாத்திமாவே! எனக்கு உணவு தந்து உதவுங்கள்” என்று குரல் ஒலித்தது.

சற்றும் சிந்திக்கவில்லை. தம்பதியர் இருவரும், அன்று தயார் செய்த ரொட்டியையும் அந்த அநாதையின் பசி தீர்க்க வழங்கி விட்டு தண்ணீர் மட்டும் குடித்து நோன்பினை நிறைவு செய்தார்கள்.

மூன்றாம் நாள், அன்றும் இருவரும் நோன்பு நோற்றார்கள். நோன்பு திறக்கும் நேரத்தில் வாசலில் அதே வேண்டுகோளோடு ஒரு புதிய குரல். “நான் சற்று முன்பு தான் சிறையிலிருந்து மீண்டு வந்த சிறைக்கைதி. என்னை இங்கே யாரும் ஆதரவு கரம் நீட்டி அரவணைக்கவில்லை. மாறாக சிறைக்கைதி என்று என்னை விரட்டியடிக்கிறார்கள். திக்கற்ற நிலையில் உங்களிடம் வந்து விட்டேன். அன்னையே! எனக்கு உணவு தந்து ஆதரியுங்கள்” என்றது.

கணவன்-மனைவி இருவரும் மனம் இளகியவர்களாக, அன்றும் தங்களிடம் இருந்த உணவைக்கொடுத்தார்கள்.

பின்னர் இறைவனிடம் கையேந்தி அன்னை பாத்திமா இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:

“எங்கள் இறைவா! எத்தனையோ பேரை எங்களை விட வறுமையில் வாழச் செய்திருக்கிறாய். அப்படிப்பட்டவர்களை விட எங்களை மேலாக்கி வைத்துள்ளாய். அது மட்டுமல்ல, ஏழைகளுக்கு எங்களால் உதவக்கூடிய வகையில் எங்களை மேன்மைப்படுத்தியும் வைத்துள்ளாய். வறுமையிலும் தர்மம் செய்யக்கூடிய மாபெரும் பாக்கியத்தை தந்த ரஹ்மானே, எல்லாப் புகழும் உனக்கே. எங்களின் இந்த நற்செயலை ஏற்றுக்கொள்வாயாக”.

இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ், மிகவும் மனம் மகிழ்ந்தவனாக, அந்த நற்செயலை தான் ஏற்றுக்கொண்டதின் அடையாளமாக மேலே சொல்லப்பட்ட திருக்குர்ஆன் வசனத்தை இறக்கிவைத்தான்.

தன் தேவையைப் பிற்படுத்தி பிறரின் தேவைக்கு முன்னுரிமை வழங்கிய இந்த சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு முறை, கைபர் யுத்தத்தில் எதிரிகளிடம் இருந்து ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதை அறிந்த பாத்திமா (ரலி) தங்கள் தந்தையை அணுகி, “அருமை தந்தையே! நான் வறுமையில் வாடி வருகிறேன். வீட்டு வேலை செய்வதற்கு கூட முடியாமல் பலவீனமாக உள்ளேன். எனவே எனக்கு உதவியாக ஓர் அடிமைப் பெண்ணை தந்து உதவுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

தன் மகளின் வறுமையை அறிந்து நபிகளார் வேதனை அடைந்தார்கள். இருந்தாலும், “அருமை மகளே! இதெல்லாம் அற்பமான இந்த உலகின் ஆதாயங்கள். எந்த நேரத்திலும் இவை அழிந்து விடும். மேலும் இது போரில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் பொருள். நபிகளின் மகள் என்பதால் உனக்கு தந்து விட முடியாது. மகளே! இதைவிட நிம்மதியைத் தரக்கூடிய சிறந்த செயல் ஒன்றைச் சொல்லித் தரவா என்று வினவி, ஒவ்வொரு இரவிலும் நீ தூங்கச் செல்லும் போது சுபுஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹமதுலில்லாஹ் 33 தடவை, அல்லாஹ் அக்பர் 34 தடவை ஓதி விட்டு தூங்கச் செல். உன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியும் சந்தோஷமும் கிட்டும்” என்றார்கள்.

இந்த வரலாற்று நிகழ்வுகள் மூலம், கடுமையான வறுமையிலும் தானம் செய்யும் மனநிலை, ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் நேர்மை தவறாத கண்ணியம் ஆகியவற்றை நாம் கற்றுக்கொண்டு அதன்படி நடக்க உறுதி கொள்வோம்.

(தொடரும்) 

மேலும் செய்திகள்