பூலித்தேவனுக்கு அருள் செய்த வேலப்ப தேசிகர்

ஆதித் திருமுறையை அடித்தளமாக வைத்து திருகயிலாய பரம்பரை என உருவாகியது தான் திருவாவடுதுறை.

Update: 2018-05-23 07:49 GMT
இறையருட் செல்வரான ஸ்ரீ வேலப்பதேசிகர் திருவாவடுதுறையின் 10-வது குருமகா சன்னிதானம்.  இவர் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நெல்லையில் உள்ள திருவாவடுதுறைக் கிளை மடத்தோடு, நெருங்கிய ஈடுபாடு கொண்டவர்.

வேலப்ப தேசிகர் தமது அருளாட்சி காலத்தில் சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி திருக் கோவிலுக்கு அடிக்கடிச் சென்று, அத்தல இறைவனை மனதார வணங்கி அங்கே முகாமிட்டு தங்குவார். அப்போது ஆலயத்திற்கு வருகைதரும் அனைத்து மக்களுக்கும் உடலில் ஏற்படும் நோய்களை தீர்த்ததுடன், மனதால் ஏற்படும் நோய்களையும் நீக்கிவைப்பார்.

இந்தப் பகுதியை ஆண்டுக்கொண்டிருந்த பூலித்தேவன், வேலப்ப தேசிகரை குருவாக ஏற்றுக்கொண்டார். எப்போதுமே வேலப்ப தேசிகரை வணங்கிய பின்பே, தனது தினசரி காரியங்களை கவனிப்பார். அவரின் ஆலோசனைப்படி செயல்பட்டு வந்தார்.

ஒருசமயம் பூலித்தேவருக்கு குன்ம வலி ஏற்பட்டது. இந்த வலியை சுவாமி தனது தவவலிமையால் போக்கினார். எனவே, சுவாமியின் ஆன்மிக பணிக்கு பூலித்தேவன் பல நிலங்களை வழங்கினார். அந்த நிலங்களில் மடம் அமைத்து, சுவாமி அருளாட்சி நடத்தினார்.

காலங்கள் கடந்தது. சித்தர் பெருமக்களுக்கு தன் உடலை துறந்து மறு உடலுக்கு செல்வதில்தான் எத்தனை அலாதி பிரியம் உண்டு. இதுபோலவே வேலப்ப சுவாமி சமாதி கொள்ளத் தீர்மானித்தார். தனது சீடன் பூலித்தேவனிடம் கூறி ‘சங்கரன் கோவில் மேலவீதியில் எனக்கு பூமிக்குள் தவமிருக்க ஏற்பாடு செய்’ என்றார். அதன்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

புரட்டாசி மாதம் மூலநட்சத்திரத்தில் அவர் மடத்தில், பூமிக்கு உள்ளே எழுப்பப்பட்ட குழிக்குள் உயிரோடு சென்று சமாதி நிலை அடைந்தார். அதன் மேலே சமாதி எழுப்பப்பட்டது.

இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு வசித்த செல்வந்தர்கள் சமாதியை எப்படியும் இங்கிருந்து அகற்றி விடவேண்டும் என்று துடியாய் துடித்தனர். ‘மக்கள் குடியிருக்கும் இடத்தில் சமாதியா? கட்ட விடமாட்டோம்' என்று திரண்டு நின்றனர்.

பூலித்தேவன் விடவில்லை. தனது உறவினர்களையும், காவலர்களையும் கூட்டி வந்து சுவாமி சமாதியைக் காப்பாற்றினார். செல்வந்தர்களோ, எங்கள் உயிரே போனாலும் பின்வாங்க மாட்டோம் என்று எதிர்த்து நின்றனர். ஆகவே, கலகம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இருபக்கமும் சரி சமமாக மோதும் நிலை. ஒரு பக்கம் பூலித்தேவன் பட்டாளம். மறுபக்கம் செல்வந்தர்கள் பட்டாளம். என்ன நடக்க போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இவர்களை யார் சமாதானம் செய்வார்கள் என்பதும் புரியாத நிலை. அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அடக்க ஸ்தலத்தில் இருந்த சுவாமி ஸ்ரீ வேலப்ப தேசிகர், திடீரென்று பூமிக்கு மேலே வந்து நின்றார்.

இருதரப்பினரும் அதிர்ந்தனர். ‘நான் எங்கே சமாதி ஆகி இருக்கிறேன்..? உயிரோடு தான் இருக்கிறேன். நான் சமாதி ஆனால் தானே பிரச்சினை’ என்று கூறினார்.

இருதரப்பினரும் அதிர்ந்தனர். ஆகா.. இதுவரை சுவாமிகள் அடக்கம் ஆக வில்லை. ஐம்புலன்களையும் அடக்கி தவநிலையில்தான் இருந்துள்ளார் என ஆனந்தம் அடைந்தனர். அதன் பிறகு அனை வரும் சமாதானமாக அங்கிருந்து புறப்பட்டனர்.

தற்போது கூட வேலப்ப தேசிகர் ஜீவசமாதியாக உள்ளார் என்று யாரும் நம்பவில்லை. சுவாமி உயிரோடு அமர்ந்து தியானத்தில் இருந்தப்படியே அருளாசி தருகிறார் என்றே நம்புகிறார்கள்.

வேலப்ப தேசிக சுவாமிகள் சமாதி அடைந்தபிறகு, பூலித்தேவனுக்கு ஒரு சூழ்நிலையில் உதவினார். அது பூலித்தேவன் வரலாற்றில் நடந்த பிரமிப்பான ஒரு நிகழ்வு.

1767-ல் பிரிட்டிஷ் தளபதி டொனர்டு பெரும்படை திரட்டி வந்து, நெற்கட்டான் செவல் கோட்டையை தகர்த்தான். மாவீரன் பூலித்தேவனைக் கைது செய்து பாளையங்கோட்டைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சங்கரநயினார் திருக்கோவிலின் வாசலுக்கு வந்த பூலித்தேவன், ‘இறைவனை வழிபட வேண்டும். எனக்கு அனுமதி தாருங்கள்' எனக் கேட்டார்.

அதன் படி இறைவனை வழிபட பூலித்தேவனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற பூலித்தேவன், திடீரென்று ஏற்பட்ட புகையால் காணாமல் போய் விட்டார். அதன்பின் ஆங்கிலேயரால் அவரை பிடிக்கவே முடியவில்லை. இந்த உலகுக்கும் அவர் தென்படாமல் மாயமாக மறைந்து விட்டார்.

எப்படி இது நடந்தது?. இது நடக்க யார் காரணம்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு வேலப்ப தேசிகர் மூலமாகவே விடை கிடைத்தது.

பூலித்தேவனை கைது செய்து, ஆங்கிலேயர்கள் இழுத்து வந்தபோது, ஸ்ரீ வேலப்பதேசிகர் கோவில் முன்பு கொண்டு வந்தனர். அங்கே ஒரு நிமிடம் பூலித்தேவன் நின்று, தனது குருவை நோக்கி மனதுருக வேண்டினார். ‘நான் மானத்தோடு வானம் செல்லுதற்கான வரத்தைத் தந்தருளுங்கள்’ என்றார்.

உடனே சூட்சும உடலோடு வெளிவந்த வேலப்பதேசிகர், பூலித்தேவனுக்கு மட்டுமே தென்பட்டார்.

‘சீடனே வா என்னோடு’ என்று முன்னால் சென்றார். பின்னால் நடந்தான் மாவீரன். ஆலய வாசலில் நின்று சாமி கும்பிட அனுமதி பெற்றார். வெள்ளையரும் அனுமதி கொடுத்தார்கள். உள்ளே போன குருவின் பின்னே இவரும் சென்றார். குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றவுடன் தானே அவரது விலங்கு சுக்கு நூறாக உடைந்தது.

சுவாமி சன்னிதி அருகே நாற்சதுர மந்திர வேலியிட்டு, அதனுள் அவரை நிறுத்தி வைத்தார் குரு. ‘பூலித்தேவா! இனி நீ யார் கண்ணிலேயும் படமாட்டாய்! உடலோடு சொர்க்கம் சேர்வாய்’ என்று தியானத்திலே மூழ்கினார் அருவ நிலையில் இருந்த வேலப்பர்.

குரு மொழிக்கு ஏது மறு மொழி...?. அப்படியே நடந்தது. பூலித்தேவன் சொர்க்கத்துக்கே சென்று விட்டார்.

வெள்ளையர் பட்டாளம் ஆலயம் முழுதும் சல்லடை போட்டு சலித்தது. பீரங்கியும், துப்பாக்கியும் பிரணவத்தை வெல்ல முடியுமா என்ன?. ஆங்கிலேயர்கள் தோற்றுப் போனார்கள்.

ஆனாலும் மற்றவர்கள் பயப்படவேண்டும் என்று ஏதோ ஒரு பிணத்தை களத்து மேட்டில் வைத்து தீயிட்டு, இதுதான் பூலித்தேவன் என்று அவரது வழக்கை ஆங்கிலேய நிர்வாகம் முடித்து விட்டது என்பது இப்பகுதி மக்கள் தற்போதும் பேசும் ஒரு வரலாறு ஆகும்.

பிரம்மரிஷி விசுவாமித்திரர் கூட, திரிசங்குக்கு நிரந்தர சொர்க்கத்தை தர முடியவில்லை. திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானமாக விளங்கிய வேலப்ப தேசிகர், பூலித்தேவனை சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த கலியுகத்தில் இது எவ்வளவு பெரிய விந்தையான செயல்.

சங்கரன்கோவிலில் தற்போதும் சங்கர நாராயணர் கோவில் உள்ளே பூலித்தேவன் அறை என்று ஒன்று உள்ளது. இதுதான் பூலித்தேவன் காணாமல் போன இடம். அதற்கான அறிவிப்பு பலகையுடன் அந்த அறை நமக்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல அற்புதங்களை பழங்காலத்தில் நிகழ்த்திய வேலப்பர் தேசிகர், தற்போதும் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு அருளாசியை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார். இங்கு விளக்கு போட்டு தேசிகரை வணங்கி வருகிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், பெரும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணம் ஆகாத பெண்கள் என பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து விளக்கு ஏற்றி வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கிறது.

ஒருவர் தன் வாழ்வில் பிறவி எடுப்பதே தன்னுடைய கர்ம வினையை போக்கத்தான். வேலப்ப தேசிகரின் சமாதிக்கு வந்து வணங்கி நின்றால், அவர்களுடைய கர்ம வினை போக்கப்படுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

வேலப்ப தேசிக மூர்த்திகள் ஜீவ சமாதி நிலையிலிருந்து தம்மை வணங்க வரும் அனைவருக்கும் திருவருளும் குருவருளும் வழங்கி அருள்கிறார்கள். இவ்விடத்தில் நாள்தோறும் வழிபாடும், வியாழக்கிழமை தோறும் வார வழிபாடும் நடை பெறுகிறது. ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் மூலநட்சத்திரம் அன்று குருபூஜையும் நடைபெறும். குருபூஜையில் சாதுக்கள் உள்பட பக்தர்கள் பலரும் கலந்துகொள்வார்கள். அன்றைக்கு அன்னதானம் மிக பிரமாண்டமாக நடைபெறும்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ரத வீதியில் சங்கரநாராயணர் கோவிலுக்கு பின்புறத்தில் வேலப்ப தேசிகர் சுவாமிகளின் சித்தர் பீடம் உள்ளது. திரு நெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏராளமான பஸ்வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து நேரடி ரெயில் வசதியும் உள்ளது.

-சித்தர்களைத் தேடுவோம். 

மேலும் செய்திகள்