800 ஆண்டுகால ராமானுஜர் திருமேனி

ஸ்ரீரங்கத்தில் கிட்டத்தட்ட 800 வருடங்களுக்கும் மேலாக அருள்பாலித்து வரும் ராமானுஜரின் தானான திருமேனி பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Update: 2018-05-29 10:21 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், 1017-ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் பிறந்தார். ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம், திருப்பதி, மேல்கோட்டை, திருநாராயணபுரம் ஆகிய பல திவ்ய தேசங்களில் வாழ்ந்து ஆன்மிகப் பணிகள், சமய சீர்திருத்தம், வைணவத்தை வளர்க்க ‘விசிஷ்டாத்வைதம்’ என்ற சித்தாந்தம், கோவில் வழிபாட்டு கோட்பாடுகள் மற்றும் அவற்றின் பூஜை முறைகள் ஆகியவற்றை வகுத்து தந்தவர்.

பிற்கால தலைமுறையினர் ராமானுஜர் பற்றி அறிந்துகொள்வதற்காக, அவரது காலத்திலேயே அவரைப்போல இரண்டு விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றை, ராமானுஜர் தழுவி தன்னிடம் இருந்த ஆத்ம சக்தியை அதில் பிரதிஷ்டை செய்தார். திருநாராயணபுரத்தில் உள்ள அந்த விக்கிரகம் ‘தமர் உகந்த திருமேனி’, அதாவது ‘அடியார்களுக்கு மிகவும் பிடித்த விக்கிரகம்’ என்று அழைக்கப்படுகிறது. அதேபோன்று மற்றொரு விக்கிரகம் ஸ்ரீபெரும்புதூரில் தயார் செய்யப்பட்டது. அது ‘தான் உகந்த திருமேனி’, அதாவது ‘ராமானுஜருக்கு பிடித்த விக்கிரகம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த சிலை கண் திறப்பின்போது, ராமானுஜரின் சக்தி அதற்குள் செலுத்தப்பட்டதாக ஐதீகம்.

ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்து, முடிவில் அவருடைய உடல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ‘பள்ளிப்படுத்தல்’ செய்யப்பட்டது. அது, ‘தானான திருமேனி’ என அழைக்கப்படுகிறது. மேற்சொன்ன இரண்டையும் விட இதுவே முக்கியமானதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் கிட்டத்தட்ட 800 வருடங்களுக்கும் மேலாக அருள்பாலித்து வரும் ராமானுஜரின் தானான திருமேனி பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ராமானுஜர் பரமபதம் அடைந்த பிறகு, அவரது உடல் ஒரு வாகனத்தில் அமர்த்தப்பட்டு, அவரது சீடர்கள், ஜீயர்கள், பல்லாயிரக் கணக்கான வைணவர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ ராமானுஜர் உடல் தாங்கிய வாகனம் இறுதி ஊர்வலத்தை தொடங்கியது. ஸ்ரீரங்க பெருமாள் அரையர் தலைமையில் அரையர்கள் திருவாய்மொழி ஓதியபடி பின் தொடர்ந்தனர்.

இறுதி ஊர்வலம் தொடங்கிய நேரத்தில் ரங்கநாதர் கோவிலில் இருந்து அசரீரி ஒன்று ஒலித்ததாக ஐதீகம். ‘ராமானுஜன் எந்தன் மாநிதி’ என்றும், ‘ராமானுஜன் எந்தன் சேம வைப்பு’ என்றும் அந்தக்குரல் ஒலித்தது. எனவே, ராமானுஜரின் உடல் என்ற சேம வைப்பை அரங்கன் திருக்கோவில் வளாகத்தில், துறவிகளுக்கான சம்ஸ்கார விதிகளின்படி பள்ளிப் படுத்த பெருமாளின் கட்டளையாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பொதுவாக, வைணவ சம்பிரதாயப்படி மறைந்த துறவிகளின் உடலுக்கு எரியூட்டும் வழக்கம் இல்லை. மாறாக, அவர்களது உடல் பள்ளிப்படுத்தப்படும். அதாவது, சமாதியில் அமர வைக்கப்பட்ட நிலையில் வைத்து, தக்க முறைகளின்படி சமாதி மூடப்படும். அதுபோல ராமானுஜரின் உடல் ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில், வசந்த மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் பள்ளிப்படுத்தப்பட்டது. அங்கே தற்போது ராமானுஜர் என்று அழைக்கப்படும் உடையவரின் சன்னிதி உள்ளது. அங்கே, பத்மாசன நிலையில் அமர்ந்து, தியானத்தில் உள்ள திருமேனிபோல இன்றும் உயிரோட்டமாக காட்சி தருகிறது.

ராமானுஜரின் கண்கள் திறந்த நிலையில் இருப்பதோடு, கால் விரல்கள், நகங்கள், கைகளில் ரோமங்கள் இருப்பதையும் காணலாம். அவரது உடல் பச்சை கற்பூரம் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றைச் சேர்த்து தயார் செய்யப்பட்ட கலவையினால் மூடப்பட்டுள்ளது. 1137-ம் ஆண்டு காலமான ராமானுஜரின் உடல் அப்படியே பல்வேறு திரவியங்கள் மற்றும் சூரணங்களால் பதப்படுத்தப்பட்டு, பள்ளிப்படுத்தல் என்ற முறையில் ஸ்ரீரங்கம் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட, 800 ஆண்டுகளுக்கும் மேலாக யோக உஷ்ணத்தின் அடிப்படையில், அந்த உடல் இறுகி, நிலை மாறாமல் இருக்கிறது.

அந்த இடத்தின் மீதுதான் தற்போது எம்பெருமானார் என்று சொல்லப்படும் ராமானுஜரின் சன்னிதி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது. இப்போதும் அவரது திருமேனி வைத்தவாறே உள்ளே இருப்பதாகவும், அதற்கு மேற்புறத்தில் இப்போது உள்ள ரூபம்தான் ‘தானான மேனி’ என்பதும் பல ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அந்த திருமேனிக்கு திருமஞ்சனம், அதாவது எந்த விதமான அபிஷேகமும் நடைபெறுவதில்லை. வருடத்துக்கு இருமுறை பச்சைக் கற்பூரம் மற்றும் குங்குமப் பூ ஆகியவற்றால் ஆன ஒருவகை குழம்பு மட்டுமே சாற்றப்படுகிறது. 

மேலும் செய்திகள்