ஆன்மிகம்
திருமண வரம் தரும் மீனாட்சி

போக்குவரத்து முன்னேற்றம் காணப்படாத காலத்தில், காசி யாத்திரை என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.
எல்லோராலும் காசிக்கு செல்ல முடியாது. அப்படியே ஒருசிலர் சென்றாலும், அவர்கள் திரும்பி வர பல காலம் ஆகும். அப்படி திரும்பி வந்தவர்களிடம், காசிக்கு செல்ல முடியாதவர்கள், ‘காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் நம்மால் தரிசிக்கத் தான் முடியவில்லை. அந்த இறைவனை தரிசித்து வந்தவர்களிடம் ஆசியாவது பெறலாம்’ என்று நினைத்து ஆசி பெறுவார் களாம்.

இந்த சூழ்நிலையில் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் எளிதில் தரிசிக்க என்ன செய்யலாம் என்ற வினா சிலரது மனதில் எழுந்தது. அதற்கு விடையையும் கண்டுபிடித்தனர்.

காசியிலிருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்து நம் ஊரில் பிரதிஷ்டை செய்தால் என்ன? என எண்ணினார்கள்.

முடிவு? அவர்கள் எண்ணியபடியே காசியில்இருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து தங்கள் ஊரில் ஆலயம் அமைத்தனர். விசாலாட்சி அன்னையையும் பிரதிஷ்டை செய்தனர். இப்படி உருவான பல ஆலயங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவைகள் ‘காசி விஸ்வ நாதர் ஆலயம்’ என்று அழைக்கப்படுகின்றன.

காசிக்கு செல்ல இருந்தவர்கள் தங்கள் ஊரில் உள்ள ஆலயம் சென்று விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் தரிசித்து இப்போதும் பலன் பெறுகின்றனர்.

இதே போல் மதுரையில் அருள்பாலிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்க இயலாதவர்களுக்காக தமிழ்நாட்டில் சில ஆலயங்கள் கட்டப்பட்டன. அங்கு சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு ஆலயம் புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கோ கர்ணத்தில் உள்ளது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்று அந்த ஆலயத்திற்கு பெயர். ராஜா ராமச்சந்திர தொண்டமான் காலத்தில் கட்டப்பட்டது இந்த ஆலயம் என தலபுராணம் கூறுகிறது.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. அழகிய முகப்பைத் தாண்டியதும் மகாமண்டபம். அர்த்த மண்டப நுழைவுவாசலில் துவாரபாலகர்கள் கொலுவிருக்க, தொடர்ந்து நந்தியும் பீடமும் இருக்க, கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை மீனாட்சியின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி இன்முகம் தவழ அருள்பாலிக்கிறாள். திருச்சுற்றில் கிழக்கில் சூரியன், காலபைரவர், மேற்கில் பிள்ளையார், நாகர், முருகன் சன்னிதிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரின் சன்னிதியும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் சன்னிதியும் உள்ளன. தேவக்கோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார்.

இங்கு பிரதோஷம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து இறைவனை தரிசித்து பயன்பெறுகின்றனர். சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி போன்ற கிரகப் பெயர்ச்சி நாட்களில் நவக்கிரக நாயகர்களுக்கு இங்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது. திருமணம் நடக்க வேண்டி இங்கு வந்து அன்னை மீனாட்சியை ஆராதிக்கும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள்.

ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கோகர்ணத்தில் உள்ளது இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து மற்றும் ஆட்டோ வசதியும் உண்டு.

- முனைவர் சி.செல்வி