ஆன்மிகம்
நோய் தீர்க்கும் திட்டக்குடி வைத்தியநாதன்

சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் போற்றி வழிபட்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயம், திட்டக்குடி வைத்தியநாதன் கோவில்.
வசிஷ்டர் வழிபட்டு மணம் முடித்த திருத்தலம், வெள்ளாற்றின் சப்தத் துறைகளில் ஐந்தாவது துறையாக அமைந்த தலம், ராமன், ஜனகன், இந்திரன் மற்றும் முனிவர்கள் வழிபட்டுப் பேறு பெற்ற தலம், நோய்களைத் தீர்க்கும் இறைவன் வாழும் ஆலயம், காமதேனுவும், மனு சக்கரவர்த்தியும் உருவாக்கிய திருக்கோவில், திட்டக்குடி நகரின் பெரிய ஆலயம், சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் போற்றி வழிபட்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயம், திட்டக்குடி வைத்தியநாதன் கோவில்.

தல புராணம்

பழங்காலத்தில் திட்டக்குடி, வேங்கை மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்துள்ளது. எனவே இத்தலம் ‘வேங்கை வனம்’ என அழைக்கப்பட்டது. இதன் காரணமாகவே இங்கு எழுந்தருளியிருக்கும் அன்னைக்கு ‘வேங்கைவன நாயகி’ என்ற பெயர் வழங்கலானது. வசிஷ்டருக்கும், அருந்ததிக்கும் திருமணம் நடந்த சிறப்பு மிக்க தலமாக இந்த ஆலயம் போற்றப்படுகிறது. இதற்குச் சாட்சியாக இருவரின் சிலா வடிவங்களுடன் தனிச் சன்னிதி இங்கு அமைந்துள்ளது. ராவணனைக் கொன்ற பாவம் நீங்க, ஸ்ரீராமபிரான், இத்தலத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.
வசிஷ்டர் தான் செய்த பெரும் தவத்தால் காமதேனுவைப் பெற்றார். அந்த காமதேனு, இத்தலத்தில் இருந்த ஒரு புற்றின் மீது கால் வைக்க, அந்த புற்றில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளிவந்தது. அந்த ரத்தப் பெருக்கைத் தணிக்க, காமதேனு புற்றின் மீது பால் சுரந்தது. அப்போது அங்கு வந்த வசிஷ்டர், புற்றினுள் சுயம்புலிங்கத் திருமேனி இருப்பதைக் கண்டார். அந்த இடத்தில் காமதேனுவின் உதவியால் கருவறை உருவாக்கப்பட்டது.

பின்னர் அங்கேயே அமர்ந்து தவம் இயற்றினார் வசிஷ்ட மகரிஷி. அப்போது அங்கு மனு சக்கரவர்த்தி வருகை தந்தார். தவம் இருந்த வசிஷ்டரிடம், தங்கள் சூரிய வம்சத்திற்கு குருவாக இருக்க வேண்டினார். வசிஷ்டரும் அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் அதற்கு கைமாறாக, இத்தலத்தில் ஆலயம் எழுப்பிட கேட்டுக் கொண்டார். மனு மன்னனும், வேங்கை வனத்தை அகற்றி, அங்கு ஒரு பெரிய ஆலயத்தை உருவாக்கினான்.

ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாய் எழுந்து நிற்க, உள்ளே கொடிமரம், பலிபீடம், பெரிய வடிவிலான நந்திதேவர் காட்சி தருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தைப் போல இங்கும் அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ளன. முதல் பிரகாரத்தில் அறுபத்துமூவர், எமலிங்கம், நிருதிலிங்கம், சப்தமாதர்கள் அமைந்துள்ளனர்.

தென்மேற்கில் விநாயகர், சோமாஸ்கந்தர் சன்னிதி, நாகர் சிலைகள், உண்ணாமலை அம்மன், முருகப்பெருமான் ஆகியோரது சிலை வடிவங்கள் உள்ளன. தனியாக முருகன் சன்னிதி, வாயுலிங்கம், மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. வடக்கில் ஈசான்ய லிங்கம், தனிச் சன்னிதியாக அமைந்திருக்கிறது. பிட்சாடனர், சனி பகவான், பைரவர் சிலைகளும் உள்ளன. தென் திசையை நோக்கி நடராஜ சபை இருக்கிறது.

width="794" />

கருவறைக் கோட்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை திருமேனிகள் அமைந்துள்ளன. கருவறை உள் மண்டபத்தில் நவக்கிரகங்கள், பின்புற வளாகத்தில் வனதுர்க்கை சன்னிதிகள் உள்ளன. அம்மன் கோவில் பின்புற வளாகத்தில் பல்லவர் கால விநாயகர் கோவில் மற்றும் முருகன் கோவில்கள் அமைந்துள்ளன.

இத்தலத்து இறைவன் சுயம்புமேனியராகத் தோன்றியதால், ‘தான்தோன்றீஸ்வரர்’ என்றும், நோய்களைத் தீர்க்கும் மருத்துவராக அருள் புரிவதால் ‘வைத்தியநாதன்’ என்றும் அழைக்கப்படுகிறார். இறைவன் தனிச் சன்னிதியாகக் கிழக்கு முகமாய் ஒளிவீசும் பெரிய அளவிலான வடிவம் கொண்டு காட்சியளிக்கிறார்.  வெளிப்புறம் உயர்ந்து நிற்கும் துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர்.

இறைவிக்கு தனித் திருக்கோவில் வலது புறம் அமைந்துள்ளது. தனி கோபுரம், கொடி மரம் ஆகியன உள்ளன. அன்னை பெரிய வடிவத்தில் அழகான தோற்றம் கொண்டு, கம்பீரமாக காட்சி வழங்குகிறாள்.  அசனாம்பிகை, வேங்கைவன நாயகி என்னும் பெயர்கள் அன்னைக்கு வழங்கப்படுகின்றன. கருவறைக் கோட்டத்தில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

ஆலயத்தின் தல மரம் வேங்கை மரமாகும். இந்த ஆலயத்திற்கு 22 தீர்த்தங்கள் இருப்பதாக புராணங்கள் கூறினாலும், தற்போது காண்டீபத் தீர்த்தம், வெள்ளாறு ஆகிய இரண்டு மட்டுமே தலத் தீர்த்தங்களாக அமைந்துள்ளன.

விழாக்கள்

இந்த ஆலயத்தில் ஆடி மாதத்தில் நடைபெறும் 10 நாள் பிரம்மோற்சவமும், பங்குனி மாதத்தில் தேரோட்டத்துடன் நடைபெறும் 10 நாள் உற்சவமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இது தவிர ஏனைய சிவ ஆலயங்களில் நடைபெறும் அனைத்து வழிபாடுகளும், விழாக்களும் இந்த ஆலயத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் 11.45 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

width="794" />

அமைவிடம்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் வெள்ளாற்றங்கரையில், கடலூர் - திருச்சி வழித்தடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. விருத்தாசலத்தில் இருந்து மேற்கே 30 கி.மீ. தொலைவில் திட்டக்குடி உள்ளது. திட்டக்குடி பஸ் நிலையத்தில் இருந்து வெகு அருகில் கோவில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி-  சென்னை வழித்தடத்தில், தொழுதூர் வழியாகவும் ஆலயத்திற்கு ெசல்லலாம்.

திட்டக்குடி கோவில்கள் நிறைந்த ஊராக உள்ளது. இது வைணவத்திற்கும் முக்கியத்துவம் தரும் விதமாக அமைந்த திருத்தலமாகும். இவ்வூரில் நானூற்று ஒருவர் கோவில், அமர்ந்த கோலம், நின்றகோலம், சயனகோலம் என மூன்று நிலைகளிலும் பெருமாள் அருள்பாலிக்கும் பழமையான வைணவ ஆலயங்களைக் கண்டு தரிசிக்கலாம்.

- பனையபுரம் அதியமான்

திட்டக்குடி பெயர்க்காரணம்

‘திட்டை’ என்பதற்கு ‘மணல் திட்டு’ என்பது பொருளாகும். வெள்ளாறு பகுதியில் பெருத்த மணல் திட்டில் இவ்வூர் அமைந்திருந்தது. மணல்திட்டில் வாழ்ந்த குடிமக்கள் ஊர் என்பதால், ‘திட்டைக்குடி’ என அழைக்கப்பட்டது. இதுவே மருவி திட்டக்குடி ஆனது என்பது ஒரு காரணம்.
மற்றொரு காரணம் என்னவென்றால், வசிஷ்ட முனிவர் எனும் வதிட்ட முனிவர் குடியிருந்து வழிபட்டுப் பேறுபெற்ற தலம் என்பதால், இது ‘வசிஷ்டக்குடி’ என்றும், ‘வதிட்டக்குடி’ என்று வழங்கலானது.  இப்பெயரே மருவி, தற்போது ‘திட்டக்குடி’ என்று வழங்கப்படுகிறது.

நானூற்று ஒருவர் கோவில்

வதிட்டக்குடி என்னும் இன்றைய திட்டக்குடி தலத்தில் வசிஷ்டரால் உருவாக்கப்பட்ட நானூறு பெண்களுடன், நானூற்று ஒன்றாக உமையவளும் தோன்றி வளர்ந்து வந்தாள். நானூற்றொரு பெண்களுக்கும் திரு மணம் செய்து வைக்கும் பருவம் வந்தது. இதில் நானூறு மணமகன்களைத் தேர்வு செய்துவிட்ட நிலையில், அன்னை உமையவளுக்கான மணமகனைத் தேடும் பணி அவ்வளவு சுலபமாக முடியவில்லை. இறுதியில் இத்தல இறைவனான வைத்தியநாதனே மணவாளனாகத் தோன்றி, உமையவளை மணம் புரிந்தார் என்கிறது தல புராணம்.

இந்த அதிசயம் நிகழ்ந்த தலமாக, பழமையான நானூற்று ஒருவர் திருக்கோவில் திகழ்கிறது. இந்த ஆலயம் திட்டக்குடி சிவாலயத்திற்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களும், அதன் கலைநயமும் கண்டு ரசிக்கவும், பிரமிக்கவும் உகந்தவையாகும். திருமணப்பேறு வேண்டுவோர், எலுமிச்சை மாலையை அன்னைக்கு அணிவித்து வேண்டுதல் செய்தால், கைமேல் பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

தொன்மைச் சிறப்பு

இத்தலத்தின் வரலாற்றை அறிய இதுவரை கண்டறியப்பட்ட 28 கல்வெட்டுகள் சான்றாக அமைந்துள்ளன. இரண்டாம் ராஜராஜன் (கி.பி.1160), இரண்டாம் ராஜாதிராஜன் (கி.பி.1168), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1181), மூன்றாம் ராஜாதிராஜன் (கி.பி. 1242), சடையவர்ம இரண்டாம் சுந்தரபாண்டியன் (கி.பி. 1271), வீரபூபதி உடையார், வீரகம்பண்ண உடையார் ஆகியோர் விவரங்களையும் அறிய முடிகிறது.  பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் போற்றி வளர்த்த தலமாகத் திட்டக்குடி திகழ்ந்துள்ளது.