ஆன்மிகம்
சஞ்சலம் போக்கும் சக்கரத்தாழ்வார்

பக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம் பெருமாளுக்கே ஏற்படும் இடையூறு போல் எண்ணி விரைந்து வந்து காப்பது ஸ்ரீசக்கரம் எனப்படும் சக்கரத்தாழ்வார்.
மகாவிஷ்ணு தன்னுடைய நான்கு கரங்களிலும் சங்கு (பாஞ்சசன்யம்), சக்கரம் (சுதர்சனம்), கதை (கவுமோதகீ), வாள் (நந்தகம்) ஆகியவற்றையும், தோளில் வில்லையும் (சாரங்கம்) ஆயுதங்களாகத் தரித்திருப்பார். இந்த ஆயுதங்கள் அவர் இட்ட பணியை செய்யக்கூடிய சர்வ வல்லமை பொருந்தியவை.

பன்னிரு ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் சக்கரத்தின் அம்சமாகவும், பொய்கையாழ்வார் சங்கின் அம்சமாகவும், பூதத்தாழ்வார் கதையின் அம்சமாகவும், பேயாழ்வார் வாளின் அம்சமாகவும், திருமங்கையாழ்வார் வில்லின் அம்சமாகவும் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

ஆனால் பெரும்பாலான கோவில்கள் மற்றும் திவ்யதேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில் தான் பெருமாள் காட்சியளிப்பார். ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று திருப்பாவையில் திருமாலை பாடுகிறார் ஆண்டாள். சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையில் இடம் பெற்று இருப்பதே ஸ்ரீசக்கரம். ஆனால் சில ஆலயங்களில் மாறுபட்டு அமைந்திருப்பதும் உண்டு. திருக்கோவிலூர் மூலவர் மற்றும் பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்திலும் இடக்கையில் ஸ்ரீசக்கரம் காட்சி அளிக்கிறது.

சிவாலயங்களில் சிவனை பார்த்தவாறு நந்தியம்பெருமான் இடம் பெற்றிருப்பது போல, வைணவ ஆலயங்களில் பெருமாளுக்கு நேராக பெருமாளைப் பார்த்தவாறு சக்கரத்தாழ்வார் அருள் பாலிப்பதைக் காணலாம். இவர் வேறு யாருமல்ல, பெருமாளின் கரங்களில் இருக்கும் ஸ்ரீசக்கரமே ‘சக்கரத்தாழ்வார்’ என்னும் திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறார். இது தவிர பெருமாளின் கருவறை திருச்சுற்றிலும் இவர் தனி சன்னிதியில் இடம் பெற்றிருப்பார்.

திருமாலை எப்போதும் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷனை ‘அனந்தாழ்வான்’ என்றும், வாகனமான கருடனை ‘கருடாழ்வார்’ என்றும், நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளியமரத்தை ‘திருப்புளியாழ்வான்’ என்றும், மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை ‘திருவாழிஆழ்வான்’ என்னும் ‘சக்கரத்தாழ்வான்’ என்றும் வைணவ சாஸ்திரங்களும், சில்பரத்தினம் என்ற நூலும் தெரிவிக்கின்றன.

சக்கரத்தாழ்வார் என்ற பெயரைத் தவிர, சுதர்சனர், சக்கரபாணி, சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் உள்ளிட்ட பல்வேறு பெயர்களாலும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் எட்டு (ஸ்ரீசுதர்சனர்), பதினாறு (ஸ்ரீசுதர்சன மூர்த்தி) மற்றும் முப்பத்திரண்டு (ஸ்ரீமகாசுதர்சன மூர்த்தி) கரங்களைக் கொண்டவராகவும் காட்சி தருகிறார்.

இறைவழிபாட்டில் கடவுளர்கள் கைக்கொண்டிருந்த ஆயுதங்களையும் வழிபடுவதும் ஒரு முறையாக இருக்கிறது. குடிதெய்வ வழிபாட்டு முறையில்இருந்து தோன்றி படிப்படியாக சிவனது சூலம், முருகனின் வில், மகாவிஷ்ணுவின் சக்கரம் என்று வளர்ந்ததாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். கடவுள்கள் கொண்டிருந்த ஆயுதங்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியதே வழிபாட்டிற்கு அடித்தளம் அமைத்ததாக அறிஞர்கள் விவரிக்கின்றனர். இப்படி வழிபடப்படும் இறைவனின் ஆயுதங்களில் தனித்துவம் பெற்றது, மகாவிஷ்ணுவின் ஸ்ரீசக்கரம்.

திருமாலின் வாமன அவதாரத்தின்போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்ரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் சுதர்சனர். ராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி போன்ற அசுரர்களை தண்டிக்க கருட வாகனத்தில் இலங்கை சென்ற திருமால், சுதர்சன சக்கரத்தை ஏவியே அவர்களை அழித்தார்.

காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, ‘நானே உண்மையான வாசுதேவன்' என்று பவுண்டரக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தான். கருடன் மேல் ஏறிச்சென்ற கண்ணன் சக்கரத்தால் அவனைக் கொன்றார்.

சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை கண்ணன் நூறு முறை மன்னித்தார். தொடர்ந்து அவன் தவறு செய்ய அது கண்டு கொதித்த சுதர்சன சக்கரம், சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது.

மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு, மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது. கஜேந்திர மோட்சம் என்ற புராணக் கதையில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது.

இப்படி பக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம், அது பெருமாளுக்கே ஏற்படும் இடையூறு போல் எண்ணி விரைந்து வந்து காப்பது ஸ்ரீசக்கரம் எனப்படும் சக்கரத்தாழ்வார்.

பெருமாளின் பஞ்சாயுதங்களில் ஸ்ரீசக்கரம் எப்போதும், தீயவற்றை அழிக்க, பெருமாளோடு கூடவே தயாராக இருப்பதாக ஐதீகம். பகவான் நினைக்கும் பணியை உடனே முடிப்பவர் அவர். அதனால் சக்கரத்தாழ்வாரை விஷ்ணுவின் அம்சம் என விவரிக்கிறது சில்பசாஸ்திரம் என்னும் நூல். வேதாந்த தேசிகரும் ‘சக்கரத்தாழ்வாராக விளங்கும் ஸ்ரீசக்கரம் திருமாலுக்கு இணையானது’ என்கிறார்.

பிரம்மதேவரின் தலையை கொய்ததால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்தபாவத்தை நிவர்த்தி செய்ய திருமாலிடம் வழி கேட்டார். திருமாலோ, பத்திரிகாச்ரமத்தில் நடைபெறும் சுதர்சன வழிபாட்டை விளக்கி, சக்கரத்தாழ்வாரை வழிபடும்படி அருளினார். அப்படியே, சிவனும் கயிலாயத்தில் முறைப்படி சக்கரத்தாழ்வாரை வழிபட, பிரம்ம தேவரின் சிரசைக் கொய்த பாவம் நிவர்த்தியானது. அதன்பின்னர் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து, சக்கரத்தாழ்வாரை வழிபட்டு அவரது திருவருளைப் பெற்றனர்.

சக்கரத்தாழ்வார் விஷ்ணுவின் அம்சம் என்பதை உணர்த்தும் பொருட்டே அவரது திருவுருவின் பின்னால் உபதேவதையாக நரசிம்மரை இடம் பெறச் செய்தனர். ஒரு ஷட்கோண (அறுகோணம்) சக்கரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சக்கரத்தாழ்வாரின் திருவுருவையும், பின்பக்கம் திரிகோண சக்கரத்தின் (முக்கோணம்) மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யோகநரசிம்மர் அல்லது ஜ்வாலா நரசிம்மரையும் ஒருசேர தரிசிக்க ஏதுவாக, கருவறைச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதியில் கண்ணாடி பொருத்தப்பட்டிப்பதை காணலாம்.

அழிக்க முடியாத பகையை அழித்து, நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி. மனிதனுக்கு பெரும்பாலான பாதிப்புகளுக்கு மூல காரணமாக இருப்பவை ருணம், ரோகம், சத்ரு எனப்படும் கடன், வியாதி, எதிரி ஆகியவை தான். அவற்றை அழித்து மனஅமைதியை தருபவர் சுதர்சன மூர்த்தி. கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்பவர். கெட்ட கனவுகள், மனசஞ்சலம், சித்தபிரமை, பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளில் இருந்தும் விடுபடச் செய்வார். ஸ்ரீ மகாவிஷ்ணு, உலகில் வாழும் மக்களுக்கு ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை வழங்கும் பணியை சக்கரத்தாழ்வாரிடம் கொடுத்திருப்பதாக ‘சுதர்ஸன சதகம்’ விளக்குகிறது.

பகவானுக்கு பஞ்சாயுதங்கள். ஆனால் சக்கரத்தாழ்வாருக்கு பதினாறு ஆயுதங்கள். இதில் வலது கைகளில் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவைகளையும், இடது கைகளில் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியவைகளையும் கொண்டுள்ளார்.

எதிரிக்கு எதிரியாக விளங்கி, பக்தர்களுக்கு சந்தோஷத்தை தரும் சக்கரத்தாழ்வாரை, அவரது ஜெயந்தி நாளில் வழிபட்டு பலமும் வளமும் பெறுவோமாக! 

நவக்கிரக தோஷம் நீக்கும் சுதர்சனர்

சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 வரிசையில் வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும். நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை, தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவக்கிரக தோஷம் நீங்க சிவன் கோவில்களில் மட்டுமே நவக்கிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும், நவக்கிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால், நவக்கிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. மேலும் திருமணமாகாதவர் களுக்கு விரைவில் திருமணம் கூடும். சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்றைய தினங்களில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.