ஆன்மிகம்
தம்பதியரை காக்கும் உமா சமேத மூர்த்தி

சிவபெருமான் மேல் தீராத பக்தி கொண்டவர் புலிக்கால் முனிவர். இவரை வியாக்ரபாதர் என்று அழைப்பார்கள்.
முனிவர் இறைவனுக்கு எளிதாக பூப்பறிக்க தன் கால்களை புலிக்காலாக மாற்றிக் கொண்டாராம். அதனாலேயே அந்த முனிவரின் உண்மை பெயர் மறைந்து ‘புலிக்கால் முனிவர்’ என அழைக்கப்பட்டார்.

இவர் ஐந்து தலங்களில் பூஜித்து அருள் பெற்றவர். பெரும் பெற்ற புலியூர் (சிதம்பரம்), எருகத்தம் புலியூர் (ராஜேந்திரபட்டினம்), ஓமாம் புலியூர், திருப்பாதிருபுலியூர் என்பன அவர் பூஜித்த நான்கு தலங்கள்.

ஐந்தாவது தலம்தான் இப்போது நாம் பார்க்க இருக்கும் பெரும்புலியூர். திருவையாறுக்கு அருகே இருக்கும் தலம் இது. இங்கு வியாக்ரபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தல இறைவன் பெயர் வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சவுந்திர நாயகி. ஆலயத்தின் கிழக்குப் பிரகாரத்தில் உமா சகித மூர்த்தியின் திருமேனிகள் உள்ளன.

கணவனின் பழக்க வழக்கங்கள் பிடிக்காமல், அவனை விட்டுப் பிரிந்து வாழும் ஒரு பெண் இந்த ஆலயத்திற்கு வந்தாள். அவள், அன்னை உமாதேவியின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்து பிரார்த்தனை செய்கிறாள். ‘தாயே என் கணவனுக்கு நல்ல புத்தியைக் கொடு. அவர் திருந்தி என்னுடன் மீண்டும் வாழ அருள்புரிவாய்’ என கண்கள் கலங்க மன்றாடுகிறாள்.

இன்னொரு பெண். தன்னை விட்டு பிரிந்து வாழும் கணவன் தன்னுடன் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என மனமுருக அன்னையிடம் மன்றாடுகிறாள். பெண்கள் மட்டுமா? ஆண்களும் கூட.

கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை, அவள் கணவன் அங்கே போய் எத்தனை முறை அழைத்தாலும் வர மறுக்கிறாள். என்ன செய்வது என்று புரியாத கணவன் இங்கே வருகிறான். உமா சகித மூர்த்தியின் முன் நின்று மனமாற பிரார்த்தனை செய்கிறான்.

இவர்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன. தம்பதிகள் இணைகின்றனர். இணைந்தவுடன் தம்பதியர்களாக இங்கு வருகின்றனர். இணைந்து காட்சி தரும் உமா சமேத மூர்த்திக்கு அபிஷேக, ஆராதனை செய்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர்.

இது மட்டுமல்ல நீதிமன்றம் வரை சென்ற விவாகரத்து வழக்குகள் கூட, உமா சமேத மூர்த்தியை பிரார்த்தனை செய்ததால், இடையிலேயே திரும்பப் பெறப்பட்ட சம்பவங்கள் ஏராளம் என இங்குள்ள பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர்.

/>

பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தின் முகப்பில், மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. வண்ணமயமாய் ஜொலிக்கும் கோபுரத்தைத் தாண்டினால் விசாலமான பிரகாரம் உள்ளது. பலிபீடம், நந்திமண்டபம், கொடிமரம் இவைகளை தாண்டியதும் அலங்கார மண்டபமும் இதை அடுத்து மகாமண்டபமும் உள்ளன. மகா மண்டபத்தின் நடுவே கருவறையின் எதிரே நந்தியும், பலி பீடமும் உள்ளன.

அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலின் இடதுபுறம் பிள்ளையாரும், வலது புறம் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் இறைவன் வியாக்ரபுரீஸ்வரர் லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலயமும் கீழ் திசை நோக்கியே அமைந்துள்ளது. இறைவனின் தேவக்கோட்டத்தில் தென்புறம் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் அர்த்தநாரீஸ்வரர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் இறைவி சவுந்திர நாயகியின் தனி சன்னிதி இருக்கிறது. சன்னிதியின் முன் அழகிய மண்டபமும், அர்த்த மண்டப நுழைவுவாசலில் துவாரபாலகிகளின் திருமேனிகளும் உள்ளன.

கருவறையில் இறைவி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னையின் மேல் இரண்டு கரங்களில் பத்மமும், ெஜபமாலையும், கீழே ஒரு கரத்தில் அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சி தரும் அன்னை, தனது இன்னொரு கரத்தை பூமியை நோக்கி தொங்க விட்ட நிலையில் காட்சி தருகிறாள். அன்னை இங்கு சதுரபீடத்தில் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பு. இங்கு மூலவராய் நின்று அருள்புரியும் அன்னையும் இவளே. துர்க்கையாய் நின்று மங்கையரைக் காப்பவளும் இவளே. அளப்பரிய சக்தி கொண்ட அன்னை இவள். எனவே இந்த ஆலயத்தில் துர்க்கை பிரதிஷ்டை செய்யப்படவில்லை.

ஆலயப் பிரகாரத்தில் தெற்கில் நால்வர், மேற்கில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், வடக்கில் சண்டீஸ்வரர் ஆகியோர் தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனின் விமான அடித்தளம், தாமரைப் பூ வடிவில் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது.

தினசரி ஒரு காலம் மட்டுமே இங்கு பூஜை நடைபெறுகிறது. பொங்கல், நவராத்திரி, சிவராத்திரி, சோம வாரங்கள், மார்கழி 30 நாட்கள் என இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இத்தலத்து இறைவனையும் இறைவியையும் தரிசனம் செய்வது, சிதம்பரம் நடராஜர் - சிவகாமி அம்பாளை தரிசனம் செய்வதற்கு சமம் என பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மன ஒற்றுமைக்காக ஏங்கும் தம்பதிகள் ஒரு முறை இத்தலம் சென்று இறைவன், இறைவியை தரிசிப்பதுடன் உமா சகித மூர்த்தியையும் தரிசித்து அருள் பெறலாமே.

திருவையாறில் இருந்து வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெரும்புலியூர் என்ற இந்த தலம்.

- ஜெயவண்ணன்