“அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்”

மக்கள் மூட நம்பிக்கையில் திளைத்திருந்த காலம் அது. தங்கள் கற்பனையில் உருவான உருவங்களை கடவுளாக வணங்கி வந்தனர்.

Update: 2018-07-04 08:50 GMT
“மலைக்குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த போது, எதிரிகள் வந்து சூழ்ந்து கொண்ட சமயத்தில் தன்னுடன் குகையில் இருந்த தோழராகிய அபூபக்கரை நோக்கி, ‘நீங்கள் கவலைப்படாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்’ என்று கூறிய போதும், அல்லாஹ் அவருக்கு தன்னுடைய மன நிம்மதியை அளித்தான்”. (திருக்குர்ஆன் 9:40)

மக்கள் மூட நம்பிக்கையில் திளைத்திருந்த காலம் அது. தங்கள் கற்பனையில் உருவான உருவங்களை கடவுளாக வணங்கி வந்தனர். மேலும் தவறான, பாவம் நிறைந்த செயல்களில் ஈடுபட்டு வாழ்ந்தனர்.

அப்போது மக்களை திருத்தி, நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு நேர்வழிகாட்ட முகம்மது நபி (ஸல்) அவர்களை, தனது தூதராக இறைவன் அனுப்பினான். ஏக இறைவன் அல்லாஹ், தனது இறைச்செய்தியை நபிகளாருக்கு அனுப்பி மக்களிடம் அதை தெரிவிக்கச்செய்தான். ஆனால் மக்கள் இதை ஏற்க மறுத்தனர். அதோடு, நபிகளாருக்கு கடும் துன்பங்களையும் கொடுத்தார்கள்.

நாளுக்கு நாள் இறைமறுப்பாளர்களின் துன்பங்களும், கொடுமைகளும் அதிகரித்தன. ஏக இறைக்கொள்கைகளை மக்களிடம் எடுத்துச்சொல்ல முடியாத அளவுக்கு எதிரிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.

எனவே இறைக்கட்டளைப்படி நபிகளார் தனது தோழர் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுடன் மக்காவில் இருந்து மதினாவுக்கு புலம் பெயர்ந்து சென்றார். இந்த நிகழ்ச்சி ‘ஹிஜரத்’ என்று அழைக்கப்பட்டது.

அருமை நாயகம் முகம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில்இருந்து தப்பி விட்டார்கள் என்ற செய்தி அறிந்த எதிரிகள் கோபம் அடைந்தனர். குறிப்பாக அபூஜஹில் ஆத்திரத்தின் உச்சியில் இருந்தான், ‘அவர்கள் அவ்வளவு எளிதில் எல்லையை கடந் திருக்க முடியாது. முகம்மதை உயிரோடு பிடித்து கொண்டு வருபவர்களுக்கு நூறு வெள்ளை ஒட்டகங்கள் பரிசாக அளிப்பேன்’ என்று அறிவித்தான்.

அரேபியர்கள் மத்தியில் வெள்ளை ஒட்டகத்திற்கு என்று தனி மதிப்பு உண்டு. அதுவும் நூறு வெள்ளை ஒட்டகங்கள் என்றால் கேட்கவா வேண்டும். எதிரிகள் அத்தனை பேருமே அண்ணலாரைத் தேடி பல திசைகளில் பயணித்தார்கள்.

ஆனால், அருமை நபிகளும், அபூபக்கரும் பாலைவனத்தில் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்தார்கள். கிட்டத்தட்ட பாதி தூரம் சென்றவர்கள், அந்த பாலைவனத்தைக் கடந்து தவுர் மலையில் உள்ள ஒரு குகையை அடைந்தார்கள்.

அந்த குகை மிகவும் பழமை வாய்ந்த பள்ளதாக்கில் இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு இருவரும் அதில் ஏறினார்கள். தங்களது கால்தடங்கள் கூட தங்களை எதிரிகளிடம் காட்டிக்கொடுத்து விடும் என்று நபிகளார் அஞ்சினார்கள். எனவே அவர்கள் தங்களது விரல் நுனியிலேயே நடந்து வந்தார்கள். இதனால் அவர் களது கால் விரல் வெப்பத்தினால் வெந்து காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கசிய ஆரம்பித்தது.

அதனைக் கண்ணுற்ற அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் உடனே நபிகளாரை தனது தோள்களில் தூக்கி வைத்துக்கொண்டு அந்த குகையை ேநாக்கி நடந்தார்கள். குகைக்குச் சென்றதும் அண்ணலாரை வெளியே இருக்கச் செய்து விட்டு, தான் மட்டும் உள்ளே நுழைந்தார்கள். அந்த குகை மிகவும் சிறியதாக இருந்தது. இரண்டு நபர்கள் படுப்பதற்கும் மூன்று அல்லது நான்கு நபர்கள் அமரும் இடவசதி கொண்டது.

உள்ளே சென்ற அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் குகையை நன்றாக சுத்தம் செய்தார்கள். குகைகளில் இருந்த ஏராளமான துவாரங்களை தங்களுடைய ஆடையை கிழித்து அடைத்தார்கள். பின்னர் அண்ணலாரை உள்ளே அழைத்தார்கள். அண்ணலார் உள்ளே சென்றதும், களைப்பின் மிகுதியால் அப்படியே துயில் கொள்ள ஆரம்பித்தார்கள்.

அண்ணலாரின் தலையை தன் மடியில் சாய்த்துக்கொண்ட அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள், தன்னுடைய கால் விரல்களால் மீதமிருந்த இரண்டு துவாரங்களையும் அடைத்துக் கொண்டார்கள்.

துரதிர்ஷ்டவசமாக அந்த துவாரத்தில் இருந்த நாகம் ஒன்று அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் பாதங்களை தீண்டி விட்டது. கொடிய விஷம் உடலில் ஏறியதால் சொல்லொண்ணா வலியும் வேதனையும் ஏற்பட்டது. கால்களை அசைத்தால் அது அண்ணலாரின் தூக்கத்தை கெடுத்து விடும் என்று நினைத்து, வலியை பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.

ஆனால், வலியின் வேதனையில் அவரது கண்ணிலிருந்து வழிந்தோடிய கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. சில கண்ணீர்த்துளிகள் வழிந்தோடி அண்ணலாரின் கன்னங்களில் பட்டு தெறித்தது.

உடனே விழித்துக்கொண்ட அண்ணலார், ‘அபூபக்கரே! என்ன நேர்ந்தது?’ என வினவினார்கள்.

அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள், ‘அண்ணலே! எனது காலில் ஏதோ விஷ ஜந்து தீண்டி விட்டது போல் தெரிகிறது. வலியையும் வேதனையையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என்றார்கள்.

உடனே பெருமானார் (ஸல்) அவர்கள் தங்கள் உமிழ் நீரை எடுத்து கடிபட்ட இடத்தில் தடவினார்கள். உடனே அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் வலியும் வேதனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.

அண்ணலாரும், அபூபக்கரும் குகையில் நுழைந்ததும் ஒரு புறா ஜோடி அங்கே கூடு கட்டி அதில் முட்டையிட்டு அடைகாக்க ஆரம்பித்து விட்டது. குகையின் வாயிற் பகுதியில் ஒரு சிலந்தி தன் வலைகளை முழுவதுமாக பின்னி அந்த இடத்தில் எந்தவித அசைவுகளும் ஏற்படவில்லை என்பது போலவும், யாரும் அங்கே நுழைந்திருக்க முடியாது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது.

சுகாதாரமற்ற, காற்று வசதி இல்லாத இருண்ட, விஷ ஜந்துக்கள் குடியிருக்கும் அந்த குகையில் இரு நண்பர்களும் தங்கினார்கள்.

இந்நிலையில் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் மகன் ஹஸ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், விரோதிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு ஒவ்வொரு இரவும் குகைக்கு வந்து மக்கா நகரின் தற்போதைய தகவல்களை சொல்லிச் செல்வார்கள்.

அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் அடிமை ஆமீர் இப்னு பஷீர் என்பவர் பாலைவனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வருவது போல குகை இருக்கும் பகுதிக்கு இரவில் வந்து, குகையில் தங்கியிருந்த அண்ணலாருக்கும், அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுக்கும் ஆட்டின் பாலைக் கறந்து அருந்த கொடுப்பார்கள்.

பரிசுகளின் அறிவிப்பை தொடர்ந்து மேலும் பலர் அண்ணலாரை எல்லா இடங்களிலும் தேட ஆரம்பித்தார்கள். ஒரு கூட்டத்தினர் அண்ணலார் இருந்த குகை வாசல் வரை வந்து விட்டார்கள். அவர்களின் கால் பாதங்களை அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களால் பார்க்க முடிந்தது.

“அண்ணலே! நம்மை எதிரிகள் சூழ்ந்து விட்டார்கள். சற்று குனிந்து பார்த்தால் நாம் பிடிபட்டு விடுவோம். என்ன செய்வது ரசூலே” என்றார்கள்.

அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் “நீர் அச்சம் கொள்ளாதீர். நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்றார்கள். (திருக்குர்ஆன் 9:40)

அந்த நேரத்தில் எதிரிகளில் ஒருவன், ‘ஏதோ இங்கே ஒரு குகையின் வாசல் போல தோன்று கிறதே’ என்றான். ஆனால் அதற்கு பதிலாக மற்றொருவன், ‘இங்கே புறா கூடு கட்டியுள்ளது, சிலந்தி வலை பின்னியுள்ளது. இதனை அறுத்துக்கொண்டு யாரும் சென்றதற்கான அடையாளமே இல்லையே?. எனவே இங்கே யாரும் இருக்க மாட்டார்கள்’ என்று கூறியபடியே அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.

எதிரிகளின் ஆரவாரம் முடிந்ததும், நபிகளார் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து மதினாவின் எல்லையை அடைந்தார்கள். அந்த எல்லையில் ஒரு இடத்தில் தங்கினார்கள். அதுவே ஹிஜ்ரத்தின் கடைசி இடமாகும். அங்கு தான் வந்து தங்கியதும் தொழுவதற்காக பேரீச்சம் மர இலைகளால் கூரை வேய்ந்த பள்ளியைக் கட்டினார்கள். அதுவே ‘மஸ்ஜிதே குபா’ என்று அழைக்கப்படுகிறது.

அங்கிருந்து அன்சாரி நண்பர்கள் புடைசூழ அல்லாஹ்வின் தூதர் ஏகத்துவத்தின் தலைநகரம் மதினாவை சென்றடைந்தார்கள். ஹிஜ்ரத் முடிவடைந்தது. இஸ்லாம் என்னும் பேரொளி குன்றிலிட்ட ஒளியாய் பிரகாசிக்கத் தொடங்கியது.

(தொடரும்) 

மேலும் செய்திகள்