கடினமாக நடக்காதீர்கள்

தன்னை அழிக்க நினைத்தவர்களையும், தன் அன்பு பார்வையால் மன்னித்து, அவர்களையும், இஸ்லாம் மார்க்கத்தை ஏற்கச் செய்த பெருமை, நபி (ஸல்) அவர்களைச் சாரும்.

Update: 2018-07-12 22:00 GMT
இறைவனை மறந்து, மானுடமே மனநிலை சரியில்லாத நிலையில் பாதை மாறியபோது, முகம்மது நபி (ஸல்) அவர்களின் மூலம் இஸ்லாம் என்ற மார்க்கத்தை, மக்களிடம் கொண்டு செல்கிறான் இறைவன்.

நபி (ஸல்) அவர்களும் தனக்கு இறைவன் ‘வஹி’ மூலம் அறிவித்த இறைச்செய்தியை மக்களிடம் எடுத்துக் கூறினார்கள். ஆனால், அவர்களை இறைத்தூதராக ஏற்க மறுத்த மக்காவாசிகள், நபிகளாருக்கு பல இன்னல்கள் கொடுத்து மகிழ்ந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களையும் மற்றும் இஸ்லாமை தன் வாழ்நெறிக்கொள்கையாக ஏற்றுக் கொண்டவர்களையும், அபு சுப்யான், ஹாரிஸ் பின் ஹிஸாம், இத்தாப் இப்னு உசைத் போன்றவர்கள் பல கொடுமைக்கு உட்படுத்தினார்கள். நபிகளார் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது தங்களின் வெறுப்பு தீயை அள்ளி வீசி, மக்காவை விட்டு வெளி ஏற்றினார்கள்.

பொது மன்னிப்பு

காலம் கனிந்து, அல்லாஹ்வின் உதவியால், நபி (ஸல்) அவர்கள், மக்காவை வெற்றிபெற்று, மக்காவின் மன்னராக மகுடம் சூட்டப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் வெற்றிச்செய்தி, எதிரிகளின் காதில் தீயில் காய்ந்த எண்ணெய்யாக விழுந்தது. நாம் முகம்மதுக்கும், அவரின் தோழர்களுக்கும் செய்த இன்னல் களுக்கு நிச்சயம் பழி தீர்க்கப்படுவோம் என்று அஞ்சி நடுங்கினார்கள்.

ஆனால், மன்னிப்பை விரும்பும் நபி (ஸல்) அவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக யாரெல்லாம் கொடுமைகளை கொப்பளித்தார்களோ அவர்கள் மீது, குற்றப்பத்திரிகை, தாக்கல் செய்யப்பட மாட்டாது. அவர்கள் அனைவரும் விடுதலை பெற்று விட்டார்கள் என்று கூறி பொது மன்னிப்பை வழங்கி னார்கள்.

தனக்கு எதிராகப் பல வகையில் கொடுமை செய்தவர்களைத் தண்டிக்கும் அனைத்து அதிகாரமும் பெற்றிருந்தும், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கியது நபிகளாரின் சிறந்த ஆளுமைக்கு அழகைக் கூட்டியது.

மன்னிப்பின் எல்லைக்குச் சென்ற நபிகளார்

முஸ்லிம்கள் அதிகம் கண்ணியம் கொடுக்கும் ஒரு இடமாகப் பள்ளிவாசல் இருக்கின்றது. அந்தப் பள்ளிவாசல்களில் சிறுதுரும்பு கிடந்தாலும், அதனை உடனே அகற்றி பள்ளிவாசலை சுத்தமாக வைத்து இருக்க ஆசைப்படுவது வழக்கம். அப்படிப்பட்ட பள்ளிவாசலை அசிங்கம் செய்த நபரை நபி (ஸல்) அவர்கள் மன்னித்து அனுப்பிய நிகழ்வு, மன்னிக்கும் தன்மைக்கு முன்னுதாரணமாக அமைந்தது. இதுகுறித்து நபித் தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறியிருப் பதாவது:

“ஒரு கிராமவாசி மஸ்ஜிது(ந் நபவீ பள்ளி வாசலு)க்குள் அசுத்தம் செய்து விட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் கொதித் தெழுந்தனர். அப்போது மக்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவரை விட்டுவிடுங்கள்; அவர் அசுத்தம் செய்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள். (நூல்: புகாரி).

தீங்கிழைப்போருக்கும், நன்மை செய்யும் பண்புதான் இறைநம்பிக்கையாளர்களின் அடையாளம் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் போதனை செய்கிறது. அதனை தன் வாழ்நாளின் ஒவ்வொரு தருணத்திலும் நபிகளார் வெளிப்படுத்தினார்கள்.

“நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.” (திருக்குர்ஆன் 23:96)

அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கும், உலக மக்களுக்கும் திருக்குர்ஆனில் பல பாடங்கள் கற்றுக்கொடுக்கின்றான். திருக்குர்ஆனின் வழிகாட்டலால் தானும், தன்னைச் சார்ந்தவர்களையும், நபி (ஸல்) வழிநடத்திச் சென்றார்கள்.

“நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர் களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப் படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப் படாது”. (திருக்குர்ஆன் 41:34,35)

கொள்கை எதிரிகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்களிட மிருந்து ஏற்படக்கூடிய இடைஞ்சல்களையும், இன்னல்களையும் மறுமை வாழ்க்கைக்காகப் பொறுத்துக் கொள்ளும் தன்மையால் சத்தியக்கொள்கையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்.

தன்னை அழிக்க நினைத்தவர்களையும், தன் அன்பு பார்வையால் மன்னித்து, அவர்களையும், இஸ்லாம் மார்க்கத்தை ஏற்கச் செய்த பெருமை, நபி (ஸல்) அவர்களைச் சாரும். தன் வாழ்நாள் முழுவதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதை மகிழ்ச்சியாய் செய்து வந்தார்கள்.

நபிகள் நாயகத்தின், மன்னிக்கும் தன்மைக்கு ஏராளமான சான்றுகளைக் பட்டியலிடலாம். மக்கா வெற்றியின் போது, எதிரிகள் அனைவரையும் மன்னித்தார்கள். தன்னை பைத்தியம் என்றும், சூனியக்காரர் என்றும், சந்ததியற்றவர் என்றும் பழித்தவர்களை எல்லாம் மன்னித்தார்கள். தன் மீது குப்பை கொட்டியவர்களை அரவணைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் செல்லும் பாதையில் முட்களை பரப்பியவர்களை அன்பு முகத்தோடு பார்த்தார்கள். நபிகளாரின் இத்தகைய மன்னிக்கும் மனப்பான்மை காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக, நபிகளாரை பின்பற்றி தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டார்கள். இஸ்லாம் மாபெரும் மார்க்கமாக உலகம் முழுவதும் வளர்ந்தது.

-ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை. 

மேலும் செய்திகள்