ஆன்மிகம்
மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

எடப்பாடி அருகே, மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தக்கோரி கோவில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எடப்பாடி,

எடப்பாடி அருகே ஆடையூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்காடு, கரும்பாளிகாடு, கம்புகாளிகாடு, புகையிலைகாடு, குடிமானூர், ஏரிகாடு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சொந்தமான கோவிலாகும்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்த ஒரு சிலர் பணம் வசூலித்தனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் தர்மகர்த்தா இறந்துபோனதால் கோவில் கும்பாபிஷேம் நடத்தப்படவில்லை. மேலும் திருவிழாவும் நடத்தாமல் நின்று போனது.

இந்த நிலையில் நேற்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு மதுரகாளியம்மன் கோவிலில் உள்ள மதுரகாளியம்மனுக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை விடுத்தும், திருவிழா முறையாக நடத்த கோரியும், கணக்குகளை முறையாக தெரிவிக்க கோரியும் கோவில் முன்பு திரண்டு பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.