வியாதிகளை போக்கும் மலை கொழுந்தீஸ்வரர்

மலைக்குன்றின் வடக்குப்பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, மலைகொழுந்தீஸ்வரர் திருக்கோவில்.

Update: 2018-07-24 10:18 GMT
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களில், இரண்டு மலைக்கோவில்கள் உள்ளது. ஒன்று மருந்து மலை. மற்றொன்று திருமலை. தற்போது திருமலை என்று அழைக்கப்படும் இந்த ஊர், கி.பி. 13-ம் நூற்றாண்டில் குன்றுத்தூர், கோனேரிப்பட்டி ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது.

திருமலைக் குன்றின் உச்சியில் பம்பர மலைக்கு மேற்கே உள்ள பெரிய பாறைகளின் இணைவில், வடக்கு நோக்கி இரு குகைகள் அமைந்துள்ளன. அவற்றின் அடித்தளப்பகுதியில் சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன. இதனை பாண்டவர் படுக்கை, ராமர்- சீதை படுக்கை, சித்தர் படுக்கைகள் எனவும் கூறுகிறார்கள். இங்கு சித்தர்கள் பலர் வாழ்ந்ததாகவும், அவர்கள் இம்மலைக்குகைகளில் ஜீவசமாதி அடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மலைக்குன்றின் வடக்குப்பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, மலைகொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் இறைவனின் சக்தியோடு, இந்த மலையில் ஜீவசமாதி அடைந்த சித்தர்களின் சக்தியும் இணைந்து பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குவதாக நம்பப்படுகின்றது. இக்கோவிலுக்குள் வடக்கு நோக்கிய ஒரு குடவரைக் கோவில் இருக்கிறது. ஆலயத்தின் நாற்புற சுவர்களும் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் திகழ வேண்டும் என்பது விதியாகும். ஆனால் இந்த ஆலயம் ஒரு ஒட்டுக்கோவில் என்பதால், இந்த நாற்புற திருச்சுற்றுகளும், குறிப்பிட்ட அளவாய் அமையாமல் மாறுபட்டிருக்கின்றன.

இத்திருத்தலத்தின் இறைவனை குடவரை கோவிலில் உள்ள இறைவன். கட்டுமானக்கோவிலில் உள்ள இறைவன் எனப் பகுத்துக் காணலாம். குடவரையில் உள்ள இறைவன்- இறைவியர் உமா சமேத மூர்த்தி ஆவார். தற்போது இவரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்று அழைத்து வருகின்றனர். கட்டுமானக் கோவிலில் உள்ள இறைவன் ‘மலைகொழுந்தீஸ்வரர்’ ஆவார். இவ்விறைவனின் லிங்கத் திருமேனி நேராக இல்லாமல், சற்று சாய்ந்து காணப்படுகிறது.

குடவரைக் கோவில் கருவறையின் மேற்கு உட்புறச்சுவரில் கிழக்கு நோக்கியவாறு சிவனும், உமையும் புடைப்புச்சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளனர். இத்தோற்றத்தை மக்கள் கல்யாணசுந்தர மூர்த்தி என்றழைக்கின்றனர். இங்கு காணப்படும் இறைவனின் அமைப்பைப் போன்று பிரான்மலைக் குடவரை மற்றும் ஆணைமலை லாடன் கோவிலிலும் காணப்பெறுகிறது. சிவனும், உமையும் கல் இருக்கையின் மீது வீற்றிருக்கின்றனர். சிவன் இடக்காலையும், உமை வலக்காலையும் இருக்கையின் மீது குத்திட்டு முறையே வலக்காலையும் இடக்காலையும் தொங்கவிட்டுள்ளனர். இவ்விருவரும் இரு திருக்கரங்களுடன் உள்ளனர்.

மலை கொழுந்தீஸ்வரர் கட்டுமானக் கோவில் கருவறையினுள் கிழக்கு நோக்கியவாறு லிங்க விடிவில் காட்சி தருகிறார். பாகம்பிரியாள் கருவறையில் நின்ற திருக்கோலத்தில் தெற்கு முகமாக காட்சி தருகிறாள்.

இக்கோவில் தீர்த்தத்தில் நீராடி, மலையை 7 முறை சுற்றிவந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும். அதுப்போல் கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ்வதற்கு உமா சமேத மூர்த்திக்கு பெரிய மாலை சாத்தி வழிபடலாம். தீராத நோய், உடல்வலி, முடக்குவாதம் போன்ற வியாதிகளால் அவதிப்படுபவர்கள், மலை கொழுந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். குணமானதும் மலையில் பாதங்களைப் பொறித்து வைக்கின்றனர். குழந்தைப் பாக்கியத்திற்காக இங்குள்ள காட்டாத்தி மரத்தில் தொட்டில் கட்டி வழிபடும் முறையும் வழக்கத்தில் உள்ளது.

இத்தலத்தில் குடவரை முருகன் சன்னிதி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வலப்புறம் சாய்ந்த நிலையில் காணப்படும் இத்தல முருகப்பெருமான், கீழ் ஆடை மட்டுமே அணிந்துள்ளார். ஆடையின் மேல் கட்டப்பட்டுள்ள துண்டின் நுனிப் பகுதி, முருகனின் இடப்புறமாகத் தொங்கி பீடத்தினைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. இவர் அணிந்திருக்கும் முப்புரிநூல் வலது கையில் மேல் செல்கிறது. இந்த அமைப்பு முற்கால பாண்டியருக்குரியது என்று சொல்கிறார்கள். முருகப்பெரு மானின் இடதுபுறம் ஒரு துறவி இருக்கிறார். முருகனின் வலப்புறம் பெரிய வயிற்றுடன் முருகனை நோக்கியவாறு அடியவர் ஒருவர் குடைபிடித்தவாறு உள்ளார்.

விழாக்கள்

ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிேஷகம் வெகுசிறப்பாக நடைபெறுகிறது. இத்திருநாள் மலை கொழுந்தீஸ்வரருக்கு சிறப்புத் திருநாளாகும். அதுப்போல் திருக்கார்த்திகை நாளன்று இறைவன் முன்பாக ஐந்து அகல் விளக்குகள் வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன. பிறகு அதில் நான்கு விளக்கை எடுத்து அம்மன், முக்குறுணி விநாயகர், ஆறுமுகன் ஆகியோருக்கு தலா ஒன்று வைத்து விட்டு, மற்றொன்றை சொக்கப்பனை எரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். கார்த்திகை திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் அங்கு கிரிவலம் செல்கிறார்கள்.

அமைவிடம்

சிவகங்கையில் இருந்து கீழப்பூங்குடி வழியாக கட்டாணிப்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி, 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருமலையில் இறங்கி ஆலயத்திற்குச் செல்லலாம். அதே போல் மதுரையில் இருந்து உறங்கான்பட்டி வழியாக மதகுப்பட்டி, கல்லல், பாகனேரி செல்லும் பேருந்துகளில் ஏறி, அழகமாநகரி என்ற இடத்தில் இறங்கியும் கோவிலுக்குச் செல்லலாம். 

மேலும் செய்திகள்