சேலம் செவ்வாய்பேட்டையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2018-08-10 22:26 GMT
சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 13-ந் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடை பெற்று வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், கொடியேற்றம் மற்றும் அலகு குத்துதல், சக்தி அழைப்பு, உருளுதண்டம், பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தநிலையில், நேற்று முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.

இதைத்தொடர்ந்து சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன், கோவில் நிர்வாக அதிகாரி புனிதராஜ், கோவில் நிர்வாகிகள், அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். செவ்வாய்பேட்டை தேர்நிலையம் பகுதியில் இருந்து தேரோட்டம் தொடங்கியது. பின்னர் அப்புசெட்டி தெரு, கபிலர் தெரு, மீனாட்சி அம்மன் கோவில் தெரு, பெரிய எழுத்துக்காரர் தெரு, சந்தைப்பேட்டை மெயின்ரோடு, முக்கோணம் தெரு, செவ்வாய்பேட்டை மெயின்ரோடு வழியாக தேர் பக்தர்களால் இழுத்து வரப்பட்டு மீண்டும் தேர்நிலையை அடைந்தது.

தேரோட்டத்தையொட்டியும், ஆடி கடைசி வெள்ளிக் கிழமை என்பதாலும் மூலவர் அம்மனுக்கு முத்துக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் செவ்வாய்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆடித்திருவிழாவை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக் கிழமை) இரவு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் பல்வேறு சாமி வேடங்களை அணிந்து வண்டியில் ஊர்வலமாக வலம் வருவார்கள். இதைத்தொடர்ந்து சிறப்பாக அலங்காரம் செய்திருந்த வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சத்தாபரணம், 14-ந் தேதி வசந்த உற்சவம், 17-ந் தேதி விடையாற்றி ஊஞ்சல், 18-ந் தேதி சிறப்பு அலங்காரம், 19-ந் தேதி மகா அபிஷேகம், 25-ந் தேதி நெய் அபிஷேகம் மற்றும் 26-ந் தேதி 108 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்