வீராம்பட்டினத்தில் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்

வீராம்பட்டினத்தில் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2018-08-17 23:57 GMT
அரியாங்குப்பம்,

அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெரு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பெரு விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

விழாவில் தினமும் காலையில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகளும், மாலையில் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளியதை தொடர்ந்து தேருக்கு பூஜை செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து 8-10 மணியளவில் அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு கொறடா அனந்தராமன், போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா, அரசு செயலாளர் சுந்தரவடிவேலு, இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மாட வீதிகளில் வலம் வந்தது. பக்தி கோஷங்கள் முழங்க தேரை பக்தர்கள் இழுத்தனர். 8-10 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் 10-15 மணியளவில் சுமார் 2 மணிநேரத்தில் கோவிலை வந்தடைந்தது. விழாவில் புதுச்சேரி, கடலூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் வீராம்பட்டினம், காக்காயந்தோப்பு பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம், உணவு பொட்டலம், தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

தேரோட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் இன்று (சனிக்கிழமை) இரவு தெப்ப உற்சவமும், 24-ந்தேதி முத்துப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது.

மேலும் செய்திகள்